பள்ளிபடிப்பை தமிழில் படிக்காத அரசு பணியாளர்கள் தமிழ்மொழி தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என ஐகோர்ட் கிளை கூறியுள்ளது.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டியைச் சேர்ந்தவர் ஜெய்குமார். தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் சின்னமனூர் உதவி செயற்பொறியாளர் (விநியோகம்) அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக (கணக்கு) கடந்த 5.3.2018ல் பணியில் சேர்ந்துள்ளார். பள்ளிப்படிப்பை தமிழ் வழியில் முடிக்காததால், பணி விதிகளின்படி 2 ஆண்டிற்குள் டிஎன்பிஎஸ்சி நடத்தும் தமிழ் தேர்வில் வெற்றி பெற வேண்டும். 2 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில், கடந்த ஜன.6ல் நடந்த தேர்வில் பங்கேற்றார். ஆனால், தேர்வில் தோல்வி அடைந்துள்ளார்.
இதனால் விளக்க நோட்டீஸ் கொடுத்து கடந்த ஜூன் 16ல் பணியில் இருந்து விடுவித்து தேனி கண்காணிப்பு பொறியாளர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்து, தன்னை மீண்டும் பணியில் சேர்க்கக்கோரி ஜெய்குமார், ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தார். இந்த மனுவை நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் விசாரித்து பிறப்பித்த உத்தரவு: தமிழக அரசின் அலுவல் மொழியாக தமிழ் உள்ளது. அரசின் அனைத்து நடவடிக்கைகளும் தமிழ் வழியிலேயே மேற்கொள்ளப்படுகிறது. எனவே, பணியாளர்களுக்கும் தமிழ் மொழி தெரிந்திருக்க வேண்டும். மனுதாரர் பணியில் இருந்த காலத்தில் டிஎன்பிஎஸ்சி தரப்பில் 3 வாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதை சரியாக பயன்படுத்தாமல் ஒரு முறை மட்டுமே தேர்வில் பங்கேற்றுள்ளார்.
அதில், தோல்வி அடைந்துள்ளார். தமிழ்
மொழி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பதில் ஆர்வம் இல்லாததையும்,
சோம்பேறித் தனத்தையுமே காட்டுகிறது. பணியாளர் என்பவர் அலுவல் மொழியை
பேசினால் மட்டும் போதாது. எழுதவும், பேசவும் தெரிந்திருக்க வேண்டும். தமிழ்
மொழி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பதில் எந்தவித சமரசமும் செய்ய
முடியாது. மின்வாரிய பணியை தொடர தமிழ் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது
கட்டாயம் என்றே இந்த நீதிமன்றம் கருதுகிறது. எனவே, மனுதாரருக்கு மேலும் ஒரு
வாய்ப்பு வழங்கலாம்.
தமிழ் மொழி தேர்வில் தேர்ச்சி பெற மேலும் அவகாசம் கேட்டு மனுதாரர், அதிகாரிகளிடம் மனு அளிக்க வேண்டும். அடுத்த தேர்வில் பங்கேற்று முடிவு வெளியாகும் வரை காலநீட்டிப்பு வழங்கலாம். அந்த தேர்வில் பங்கேற்று மனுதாரர் தேர்ச்சி பெற வேண்டும். தோல்வி அடைந்தால், பணி நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ளலாம். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...