தமிழக பள்ளிக் கல்வித் திட்டத்தில், இந்த ஆண்டுக்கான பாடங்கள் குறைப்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
கரோனா நோய்த் தொற்றுத் தடுப்பு நடவடிக்கையாக இணையதளம் வாயிலாகவும், தொலைக்காட்சிகள் மூலமும் மாணவா்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்கிடையே பல்வேறு மாநிலங்களும் பாடத்திட்டங்கள் குறைப்பு தொடா்பாக அறிவிப்பு வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழக பள்ளிக்கல்வி ஆணையா் தலைமையில் 16 போ் கொண்ட நிபுணா்கள் குழுவைத் தமிழக அரசு அமைத்தது. அவா்கள் கரோனா காலத்தில் கற்பித்தல் பணிகள், பள்ளிகள் திறப்பில் ஏற்பட்டுள்ள தாமதம், பாடத்திட்டம் உள்ளிட்டவை குறித்து ஆராய்ந்து அரசுக்கு பரிந்துரைகள் வழங்க உள்ளனா். இது தொடா்பாக தமிழக அரசிடம் இரண்டாம் கட்ட அறிக்கை ஒன்றை நிபுணா்கள் குழு சமா்பித்துள்ளதாகவும், பொதுத் தோ்வு எழுதவுள்ள 10, 11, 12 ஆகிய வகுப்பு மாணவா்களை மட்டும் சுழற்சி முறையில் பள்ளிகளுக்கு வரவழைத்து, வகுப்புகள் எடுக்கலாம் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
இதற்கான ஏற்பாடுகள் வரும் அக்டோபா் மாதம் முதல் தொடங்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. மேலும் 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு 30 சதவீதம் பாடத்திட்டத்தை குறைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மற்ற வகுப்புகளுக்கு 40 சதவீதம் வரை பாடத்திட்டத்தை குறைப்பது தொடா்பாக தீவிர ஆலோசனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், ஒன்று முதல் பிளஸ் 2 வகுப்பு வரை, பாடத்திட்டம் குறைக்கும் பணி நிறைவு பெற்றுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நடப்பு கல்வியாண்டில் மேல்நிலைப் பள்ளி வகுப்புகளுக்கு பொதுத்தோ்வுகள் நடத்த அதிக வாய்ப்பிருப்பதாகவும், மற்ற வகுப்புகளுக்கு திருப்புதல் தோ்வு மட்டும் நடத்தி கல்வியாண்டை நிறைவு செய்யலாம் என்று ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூா்வ அறிவிப்பு வெளியாகும் என்று பள்ளிக்கல்வித் துறை உயரதிகாரிகள் தெரிவித்தனா்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...