தேசிய ஆசிரியர் கல்விக் குழுமத்தைத் (என்சிடிஇ) தலைமையாகக் கொண்ட தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கீழ், தமிழகத்தில் 7 அரசு கல்வியியல் கல்லூரிகள், 14 அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகள் மற்றும் சுமார் 700 தனியார் கல்வியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இக்கல்லூரிகளில் பி.எட், எம்.எட். படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
என்சிடிஇ கடந்த ஆகஸ்ட் மாதம் நடத்திய கூட்டத்தில், நாடு முழுவதும் உள்ள கல்வியியல் கல்லூரிகள் அவற்றின் உள்கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர்கள் எண்ணிக்கை உள்ளிட்ட பல்வேறு அளவுகோல்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதேபோல் அங்கீகாரம் பெறுவதற்குச் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களை நிலுவையில் வைத்துள்ள கல்லூரிகள் மற்றும் தகுதிகள் குறைவாக உள்ள கல்வியியல் கல்லூரிகள் கண்டறியப்பட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதற்கிடையே மீண்டும் செப்.14-ம் தேதி மேற்கொள்ளப்பட்ட ஆய்வுக் கூட்டத்தில், 3 அரசு பி.எட். கல்லூரிகளில், 2020-21 ஆம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்குத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் வெளியிட்ட அறிக்கையில், ''சென்னை லேடி வெலிங்டன் கல்லூரியில் போதிய ஆவணங்களைச் சமர்ப்பிக்கவில்லை. புதுக்கோட்டை அரசு பி.எட். கல்லூரியிலும் நாமக்கல், குமாரபாளையம் அரசுக் கல்லூரியிலும் போதிய எண்ணிக்கையில் ஆசிரியர்கள் இல்லை.
இதனால், இக்கல்லூரிகளில் 2020-21 ஆம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்குத் தற்காலிகமாகத் தடை விதிக்கப்படுகிறது. மேற்குறிப்பிட்ட கல்லூரிகள் குறைபாடுகளைச் சரி செய்து 90 நாட்களுக்குள் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். அதுவரை மாணவர் சேர்க்கைக்குத் தடை விதிக்கப்படுகிறது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...