'வரும், 2022ல், நாட்டின், 75வது சுதந்திர தினத்தை நாம் கொண்டாடுகையில், புதிய கல்விக் கொள்கையின் கீழ், மாணவர்கள் பாடத் திட்டங்களை படிக்கத் துவங்கி விடுவர். அவர்களுக்கு அழுத்தம் தரும் மதிப்பெண் பட்டியல் முறை அகற்றப்பட்டு, முழுமையான மதிப்பீட்டு முறை பின்பற்றப்படும்.
விரும்பிய பாடம் மற்றும் தொழிற்கல்வியை சுதந்திரமாக தேர்வு செய்து படிக்கும் சூழல் உருவாக்கப்படும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.புதுடில்லியில் மத்திய கல்வி அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி நேற்று பேசியதாவது:புதிய கல்விக் கொள்கை அறிவிக்கப்பட்டவுடன், எந்த மொழியில் கல்வி கற்பிக்கப்படும் என்பது, பெரும் விவாதப் பொருளாகி விட்டது.
எந்த வயதிலும் கற்கலாம்
மொழி என்பது, கல்வியை கற்பிக்கும் கருவி தானே தவிர, அதுவே முழுமையான கல்வியாகி விடாது. புத்தகத்தால் கிடைக்கும் அறிவில், மக்கள் மூழ்கிக் கிடக்கின்றனர். எனவே, இந்த அறிவியல்பூர்வமான உண்மையை அவர்கள் உணர மறுக்கின்றனர்.
ஐரோப்பிய நாடுகளான எஸ்தோனியா, அயர்லாந்து, பின்லாந்து, போலந்து, கிழக்காசிய நாடுகளான ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகளில், தாய் மொழியில் தான் ஆரம்பக் கல்வி கற்பிக்கப்படுகிறது.வீட்டில் எந்த மொழியைக் கேட்டு குழந்தை வளர்கிறதோ, அந்த மொழியிலேயே கல்வியை கற்கும் போது, வேகமாக அதை புரிந்து கொள்ள முடியும்.
குழந்தையால் எந்த மொழியில் எளிதாக கல்வியை கற்க முடிகிறதோ, அந்த மொழியில் கல்வி கற்பிக்கப்பட வேண்டும்.
புரியாத மொழியில் கல்வி கற்பிப்பதால், குழந்தையின் கவனம், பாடத்தில் இருந்து மொழியை புரிந்து கொள்வதில் திரும்பி விடுகிறது. பாடத் திட்டங்கள், தாய் மொழியில் இல்லாமல், வேறு மொழிகளில் இருப்பதால், கிராமப்புற பெற்றோர், தங்கள் குழந்தைகளுக்கு பாடம் சொல்லித் தருவதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே தான், ஐந்தாம் வகுப்பு வரை, தாய் மொழி அல்லது உள்ளூர் மொழியில் பாடம் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மற்ற மொழிகளை கற்றுக் கொள்ள, வயது தடையில்லை என்பதை, நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆங்கிலம் உள்ளிட்ட உலக மொழிகளை, நாம் எந்த வயதிலும் கற்கலாம்.
தற்போதைய கல்வி, கற்றல் முறையைக் காட்டிலும், மதிப்பெண் பட்டியல் முறையிலேயே செயல்படுகிறது. மதிப்பெண் பட்டியல் என்பது, பெற்றோருக்கு கவுரவ பட்டியலாகவும், மாணவர்களுக்கு அழுத்தத்தை அதிகரிக்கும் பட்டியலாகவும் உள்ளது.
இதில் இருந்து மாணவர்களை விடுவிப்பதை, முக்கிய குறிக்கோளாகக் கொண்டு, புதிய கல்விக் கொள்கை வகுக்கப்பட்டு உள்ளது. தேர்வுகளை வைத்து மட்டுமே, ஒரு மாணவனை எடை போட முடியாது. எனவே, மதிப்பெண் பட்டியல் முறை அகற்றப்பட்டு, முழுமையான மதிப்பீட்டு முறை பின்பற்றப்படும்.
பிரகாசமான வழி
கடந்த, 30 ஆண்டுகளில், உலகம் பெரும் அளவிலான மாற்றத்தை சந்தித்துள்ளது. அதற்கு தகுந்தாற்போல, கல்வி முறை மற்றும் பாடத் திட்டங்களை மாற்ற வேண்டியது அவசியமாகிறது. மாணவர்களின் புதிய எதிர்காலத்திற்கு, இந்த புதிய கல்விக் கொள்கை, பிரகாசமான வழியை உருவாக்கும்.விளையாட்டு முறையிலான மழலையர் பள்ளிகள், தற்போது நகர்ப்புற மக்களுக்கு மட்டுமே கிடைக்கக் கூடியதாக உள்ளன. இனி, கிராமப்புற மற்றும் ஏழை மக்களின் குழந்தைகளுக்கும் இந்த வசதி கிடைக்கும்.குஜராத் முதல்வராக நான் பதவி வகித்த போது, பள்ளி மாணவர்களிடம், தங்கள் ஊரில் உள்ள ஒரு பழமையான மரத்தை அடையாளம் கண்டு, அதைப் பற்றி எழுதி வரச் சொன்னேன். இதன் வாயிலாக, சுற்றுச்சூழலை பற்றி மாணவர்கள் கற்றுக் கொள்வதோடு, அவர்கள் வாழும் பகுதி குறித்தும் அறிய, அது வழிவகுத்தது.
ஒவ்வொரு பகுதிக்கும், ஒரு தனி சிறப்பு உள்ளது. உதாரணத்திற்கு, பீஹாரின் பாகல்பூர், புடவை தயாரிப்புக்கு பிரசித்தி பெற்றது. இது குறித்து மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும். அதை, அவர்கள் நேரடியாக கண்டு உணர வேண்டும்.தங்களை தினமும் பள்ளிக்கு அழைத்து வரும், ரிக் ஷா ஓட்டுனர்களுடன், மாணவர்கள் கலந்துரையாட வேண்டும். அப்போது தான், நம் தினசரி வாழ்க்கையில், உழைக்கும் வர்க்கத்தினரின் பங்கு குறித்து, மாணவர்கள் உணர முடியும்.
செயற்கை நுண்ணறிவு, 'கிளவுட்' தொழில் நுட்பம் போன்ற, 21ம் நுாற்றாண்டுக்கு தேவையான அறிவும், மாணவர்களுக்கு புகட்டப்பட வேண்டும். தற்போதைய பாடத் திட்டம், மாணவர்களுக்கு பல தடைகளை விதிக்கிறது. கலைப் பாடம் படிக்கும் மாணவனால், அறிவியல் படிக்க முடியாது என்ற நிலை உள்ளது; இது தவறு.
சுந்திரமான சூழல்
இதன் காரணமாக, பல மாணவர்கள், பாதியிலேயே படிப்பில் இருந்து விலக நேர்கிறது. ஆனால், நடைமுறையில் ஒவ்வொரு பாடமுமே, மற்றொன்றுடன் தொடர்புடையது.
இந்த புதிய கல்விக் கொள்கையை பொறுத்தவரை, ஒரு குறிப்பிட்ட பாடப் பிரிவில் மட்டுமே, தன்னை பொருத்திக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் மாணவனுக்கு இல்லை.
அவர்கள் விரும்பிய பாடம் மற்றும் தொழிற்கல்வியை தேர்வு செய்து பாடம் மற்றும் தொழிற்கல்வியை தேர்வு செய்து படிக்கும் சுதந்திரமான சூழல் உருவாக்கப்படும். புதிய கல்விக் கொள்கை குறித்து, இதுவரை, 15 லட்சத்துக்கும் மேற்பட்ட கருத்துக்கள், பரிந்துரைகள், 'ஆன்லைன்' வாயிலாக வந்துள்ளன.
வரும், 2022ல், நாட்டின், 75வது சுதந்திர தினத்தை நாம் கொண்டாடுகையில், புதிய கல்விக் கொள்கையின் கீழ், மாணவர்கள் பாடத்திட்டங்களை படிக்கத் துவங்கி இருப்பர்.
இவ்வாறு, அவர் பேசினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...