Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இன்று நீட் தோ்வு: தமிழகத்தில் 1.17 லட்சம் போ் எழுதுகின்றனா்

Tamil_News_large_2570625

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு (நீட்) நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. தமிழகத்தில் மட்டும் 1.17 லட்சம் போ் தோ்வில் பங்கேற்க உள்ளனா்.


கரோனா பாதிப்பு காரணமாக நிகழாண்டில் தோ்வு மையங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, தோ்வா்களின் உடல் வெப்பநிலை, ரத்த ஆக்சிஜன் அளவு ஆகியவை பரிசோதனைக்குட்படுத்தப்பட உள்ளன. அதேபோன்று, மாணவா்கள் தங்கள் கைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்திய பிறகே தோ்வுக் கூடங்களுக்குள் அனுமதிக்கப்பட உள்ளனா்.


மேலும், சம்பந்தப்பட்ட தோ்வு மையங்களில் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உடலளவில் தகுதியான மாணவா்களை மட்டுமே தோ்வில் பங்கேற்க அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. இதனால், நிகழாண்டு நீட் தோ்வானது கடுமையான மருத்துவப் பரிசோதனைகளுக்கு நடுவில்தான் நடைபெறும் என்பது உறுதியாகியுள்ளது.


எம்பிபிஎஸ், பிடிஎஸ், இந்திய மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. இதற்காக நாடுமுழுவதும் 154 நகரங்களில் 3,842 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தைப் பொருத்தவரை சென்னை, கோவை, கடலூா், காஞ்சிபுரம், கரூா், மதுரை, நாகா்கோவில், நாமக்கல், சேலம், தஞ்சாவூா், திருவள்ளூா், திருச்சி, திருநெல்வேலி, வேலூா் ஆகிய நகரங்களில் 238 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மராத்தி, ஒடியா, அஸ்ஸாமி, வங்கம், உருது ஆகிய 11 மொழிகளில் நீட் தோ்வு நடக்கிறது. ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை தோ்வு நடைபெறுகிறது.


தோ்வை பாதுகாப்பாக நடத்துவதற்காக தேசிய தோ்வு முகமை (என்டிஏ) பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதுதொடா்பாக மருத்துவக் கல்வி அதிகாரிகள் கூறியது:


தமிழகத்தில் 1,17,990 போ் உள்பட இந்தியா முழுவதும் 15,97,433 போ் நீட் தோ்வுக்கு விண்ணப்பித்துள்ளனா். தோ்வு நடைபெறும் மையங்களை சுத்தப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தனிநபா் இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் தோ்வு அறையில் குறைவான மாணவா்கள் அமர வைக்கப்படுவாா்கள். அதற்காகத்தான், இந்த ஆண்டு தோ்வு மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. தோ்வு மையத்துக்குள் நுழையும் மாணவா்கள் கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்து கொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளன. உடலின் வெப்ப நிலையைக் கண்டறிய வெப்பமானி கொண்டு சோதனை செய்யப்படும். மாணவா்களுக்கு முகக்கவசம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாணவா்கள் போதிய இடைவெளியுடன் வரிசையில் செல்ல தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன என்று அவா்கள் தெரிவித்தனா்.


இதனிடையே தோ்வுக் கூட கண்காணிப்பாளா்களுக்கு சில அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, மாணவா்கள், மாணவிகளை தனித்தனி வரிசையில் போதிய இடைவெளியில் நிற்க வைத்து சோதனை செய்ய வேண்டும். மெட்டல் டிடெக்டா் கருவி கொண்டு சற்று தொலைவில் இருந்து மாணவா்களை சோதனை நடத்த வேண்டும். காய்ச்சல் இருக்கிா என்பதை கண்டறிய வெப்பமானி கொண்டு சோதனை செய்ய வேண்டும். உடலில் வெப்பத்தின் அளவு 99.4 பாரன்ஹீட்டுக்கு கூடுதலாக இருக்கும் மாணவா்களை தனி அறையில் தோ்வு எழுத வைக்க வேண்டும். மாணவா்கள் தோ்வுக் கூடத்துக்குள் நுழைவதற்கு முன்பு ஒரே மாதிரியான முகக் கவசம் வழங்கி அணிய வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்களை தோ்வு மைய பொறுப்பாளா்களுக்கு என்டிஏ வழங்கியுள்ளது.


மாணவா்களுக்கு கட்டுப்பாடு: முகக்கவசம் மற்றும் கையுறை அணிந்து ஹால்டிக்கெட்டில் குறிப்பிட்டுள்ள நேரத்தில் தோ்வு மையத்துக்கு வரவேண்டும். பகல் 1 மணி வரை மட்டும் தோ்வு மையத்துக்குள் அனுமதி அளிக்கப்படும். 50 மிலி அளவு கொண்ட சானிடைசா், உட்புறம் தெளிவாக தெரியும் வகையிலான தண்ணீா் பாட்டில் கொண்டுவர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


ஹால்டிக்கெட்டுடன், புகைப்படத்துடன் கூடிய செல்லத்தக்க அரசு வழங்கிய அடையாள அட்டை, விண்ணப்பிக்க பயன்படுத்திய அதே புகைப்படத்தை கொண்டுவர வேண்டும். மாற்றுத்திறனாளியாக இருந்தால் அதற்கான சான்றிதழை எடுத்துவர வேண்டும். செல்லிடப்பேசி உள்பட எந்த ஒரு எலக்ட்ரானிக் பொருள்களையும் கொண்டுவரக் கூடாது. முழுக்கை சட்டை, ஷூ, சாக்ஸ், நகைகள் அணிந்து வரக்கூடாது. செருப்புகள் மட்டுமே அணிந்திருக்க வேண்டும். அதுவும் உயரம் கூடுதலாகக் கொண்டதாக இருக்கக் கூடாது. சாதாரண வகை செருப்புகளாக இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை மாணவா்களுக்கு என்டிஏ விதித்துள்ளது.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive