நாடு
முழுவதும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்த போதிலும், புதிய தேசிய
கல்விக் கொள்கையை அமல்படுத்துவதில் மத்திய அரசு தீவிரமாக இருக்கிறது. இதன்
அடுத்தக்கட்டமாக, இக்கல்வி கொள்கை பற்றி பள்ளி ஆசிரியர்களிடம் இன்று முதல்
31ம் தேதி வரை கருத்து கேட்கப்பட உள்ளது. கடந்த 36 ஆண்டுகளாக அமலில்
இருந்து வரும் கல்வி முறையில் பல்வேறு மாற்றங்களை செய்வதற்கான புதிய தேசிய
கல்விக் கொள்கையை மத்திய அரசு வடிவமைத்து உள்ளது. இதற்கான வரைவு அறிக்கை
சில வாரங்களுக்கு முன் வெளியிடப்பட்டது.
இதில், 5ம்
வகுப்பு வரை தாய்மொழியில் கற்பித்தல், செயல்முறைக் கல்வி, மும்மொழிக்
கல்விக் கொள்கை, சமஸ்கிருதத்துக்கு முக்கியத்துவம், 5, 8ம்
வகுப்புகளுக்கும் தேசிய அளவில் பொதுத்தேர்வு என்பது உட்பட பல்வேறு
சர்ச்சைக்குரிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இதற்கு நாடு முழுவதிலும்
சேர்ந்த கல்வி அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள்
கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனாலும், இந்த புதிய கல்விக்
கொள்கையை அமல்படுத்துவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.
இந்நிலையில்,
புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்கான அடுத்தக்கட்ட நடவடிக்கையை
மத்திய அரசு நேற்று எடுத்தது. இக்கல்விக் கொள்கை பற்றி நாடு முழுவதும் உள்ள
அனைத்து பள்ளிகளின் முதல்வர்கள், ஆசிரியர்களின் கருத்தை கேட்டறிய முடிவு
செய்துள்ளது. இதற்காக மத்திய கல்வி அமைச்சகம்
http://Innovateindia.mygov.in/nep2020 என்ற புதிய இணைப்பை தொடங்கி உள்ளது.
இந்த இணைப்பு மூலம் ஆசிரியர்கள், பள்ளி முதல்வர்கள் இன்று முதல் வரும்
31ம் தேதி வரை தங்களின் கருத்துக்களை பதிவு செய்யலாம். ஆனால்,
பொதுமக்களிடம் இது பற்றி கருத்து கேட்கப்படாதது ஒருதலைபட்சமானது என்று
எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இது குறித்து மத்திய கல்வி
அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தனது டிவிட்டரில், ‘தேசிய கல்விக் கொள்கையை
அமல்படுத்துவதில் ஆசிரியர்களின் பங்கு முக்கியமானது. எனவே, பள்ளி
முதல்வர்கள், ஆசிரியர்களின் கருத்தை கேட்டறிய முடிவு செய்துள்ளோம்,’ என
கூறியுள்ளார். எனவே, அனைத்து அரசு, தனியார், அரசு உதவி பெறும் பள்ளி
முதல்வர்கள், ஆசிரியர்கள் கருத்தை தெரிவிக்க அழைப்பு விடுக்குமாறு மாநில
மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய கல்வி அமைச்சகம் கடிதம்
அனுப்பி உள்ளது.
கேள்வி-பதிலாக கூறலாம்
* ஆசிரியர்கள் ஒவ்வொரு பிரிவிலும் தங்களின் கருத்துக்களை கேள்வி, பதிலாக வழங்கும்படி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
* ஆசிரியர்கள் தங்கள் அனுபவத்திற்கேற்ப அந்தந்த பிரிவுகளில் கருத்துக்களை தெரிவிக்கலாம்.
* இவற்றை என்சிஇஆர்டி.யின் நிபுணர் குழு ஆய்வு செய்து, மத்திய அரசுக்கு அறிக்கையாக சமர்ப்பிக்கும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...