புதிய கல்விக் கொள்கை குறித்து மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டுமென்று பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.
குறிப்பாக உயர் கல்வித்துறை அமைப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள முக்கிய மாற்றங்கள் குறித்த விழிப்புணர்வை மேற்கொள்ள வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை கடந்த மாதம் 29-ம் தேதி ஒப்புதல் அளித்தது. இக்கொள்கை இந்தியாவில் உள்ள பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வி அமைப்பு முறையை முழுமையாக மாற்றியமைக்க உள்ளது.இதன்படி சட்டம், மருத்துவம் தவிர்த்து அனைத்து உயர்கல்வி அமைப்புகளும் ஒன்றாக இணைக்கப்படும் எனவும் அதற்கு இந்திய உயர்கல்வி ஆணையம் தலைமை வகிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையமே உயர் கல்வி நிறுவனங்களின் அங்கீகாரம், நிதியளித்தல், கல்வி முறைகளைத் தீர்மானிக்கும். அதேபோல அனைத்துக் கல்லூரிகளுக்கும் மாணவர் சேர்க்கைக்கு ஒரே நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் இத்தகைய தகவல்கள் குறித்த விழிப்புணர்வை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு ஊட்ட வேண்டுமென்று பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி அறிவுறுத்தியுள்ளது. இதற்காக வெபினார்கள் மற்றும் இதர ஆன்லைன் வழிகளில் விழிப்புணர்வை அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ட்விட்டர், ஃபேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், லிங்க்ட்இன் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களையும், அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...