புதுடில்லி: கொரோனா காலத்தில் நடக்கவுள்ள தேர்தல்களில் பின்பற்ற வேண்டிய புதிய வழிகாட்டும் விதிமுறைகளை, தலைமை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது. வாக்காளர்கள் கையுறை அணிந்து ஓட்டளிக்கவும், தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடும் அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும் என்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, நாடு முழுதும் பொது ஊரடங்கு அமலில் உள்ளது. அதிக அளவில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், பொதுப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் அதிக அளவில் கூடும் விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பீஹாரில், அடுத்த சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடத்தப்பட வேண்டும். நாட்டின் பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள லோக்சபா மற்றும் சட்டசபை தொகுதிகளுக்கான இடைத் தேர்தல்களையும் நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.இந்த கொரோனா காலத்தில், தேர்தல் நடத்தினால், வைரஸ் பரவலுக்கு வழி வகுத்து விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டது.
இது குறித்து, பல்வேறு தரப்பினரிடமும் கருத்து மற்றும் ஆலோசனை கேட்ட, தலைமை தேர்தல் ஆணையம், கொரோனா காலத்தில் நடக்கவுள்ள தேர்தல்களில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டும் விதிமுறைகளை நேற்று வெளியிட்டுள்ளது.இதில், வேட்பாளர்கள், அரசியல் கட்சியினர், தேர்தல் நடத்தும் அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் வாக்காளர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளதாவது:
* தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடும் அனைவரும், கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும்* தனி நபர் இடைவெளியை அவசியம் பின்பற்ற வேண்டும்
* தேர்தல் நடவடிக்கைகளுக்காக அமைக்கப்பட்டுள்ள இடங்களுக்கு செல்வோருக்கு, உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படும்
* தேர்தல் நடவடிக்கைகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அறைகள் முழுதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, சுகாதாரம் பின்பற்ற வேண்டும்
* வேட்பாளர்கள், 'ஆன்லைன்' வாயிலாக வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம். நேரில் வந்து தாக்கல் செய்தால், இரண்டு பேர் மட்டுமே வர வேண்டும்
* வேட்பு மனு தாக்கல் செய்ய வரும்போது, இரண்டு வாகனங்கள் மட்டுமே உடன் வர வேண்டும்
* ஓட்டுப் பதிவு இயந்திரங்களை கிருமிநாசினி தெளித்து சுத்தப்படுத்த வேண்டும்
* ஓட்டு பதிவு செய்யும் இடம், ஓட்டு எண்ணும் இடம் ஆகியவற்றில் சமூக இடைவெளி பின்பற்றப்பட வேண்டும். இந்த இடங்கள், விசாலமானதாக இருக்க வேண்டும்
* கொரோனா பரவலை தடுப்பதற்காக மத்திய அரசு பிறப்பித்துள்ள விதிமுறைகளுக்கு உட்பட்டு, தேர்தல் அதிகாரிகள், பணியாளர்கள், ஊழியர்களுக்கு போதிய வாகன வசதியை ஏற்பாடு செய்ய வேண்டும்
* ஓட்டுப் போட வரும் வாக்காளர்கள் கட்டாயம் கையுறை, முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும். இதற்காக, வாக்காளர்களுக்கு, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் கையுறை வழங்கப்படும்
* கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள், தனிமைப் படுத்தப்பட்டவர்கள், 80 வயதுக்கு மேற்பட்டோர், அத்தியாவசிய பணிகளில் ஈடுபட்டுள்ளோர், மாற்றுத் திறனாளிகள், தபால் வாயிலாக ஓட்டளிக்கலாம்
* வீடு வீடாகச் சென்று ஓட்டு சேகரிப்பதற்கு, வேட்பாளருடன் சேர்த்து, ஐந்து பேர் மட்டுமே செல்ல அனுமதி அளிக்கப்படும்
* சாலை வழியாக தெருமுனை பிரசாரங்களில் வேட்பாளர்கள் ஈடுபடும்போது, வாகன அணிவகுப்புகளில், ஐந்து வாகனத்துக்கு மேல் செல்லக் கூடாது
* அரசியல் கட்சியினர் பிரசார கூட்டம் நடத்தும் இடங்களை, தேர்தல் அதிகாரிகள் முன் கூட்டியே பார்வையிட்டு, ஆய்வு செய்ய வேண்டும்
* பார்வையாளர்களுக்கு இடையே போதிய இடைவெளி இருப்பதையும், மைதானத்துக்கு பார்வைாளர்கள் வரும் பாதையையும், கூட்டம் முடிந்து செல்லும் பாதையையும் முடிவு செய்ய வேண்டும்
* பொதுக் கூட்டங்களில், கொரோனா விதிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய, சுகாதாரத் துறை அதிகாரியும் அந்த இடத்தை ஆய்வு செய்ய வேண்டும்
* பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளதற்கு மிகாமல், பார்வையாளர்கள் எண்ணிக்கை இருக்க வேண்டியதை, தேர்தல் அதிகாரியும், மாவட்ட போலீஸ் அதிகாரியும் உறுதி செய்ய வேண்டும்
* ஒவ்வொரு ஓட்டுச் சாவடியிலும், அதிகபட்சமாக, 1,000 வாக்காளர்கள் மட்டுமே, ஓட்டளிக்க அனுமதிக்கப்படும். அனைவரும் ஓட்டளிப்பதை உறுதி செய்யும் வகையில், அதிக ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்படும்
* வேட்பாளர்கள், தங்கள் டிபாசிட் தொகையை, 'ஆன்லைன்' வாயிலாக செலுத்துவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்படும்.
* தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடும் ஊழியர்களுக்கு, கையுறை, முகக் கவசம், பாதுகாப்பு உடைகள் வழங்கப்படும்
* விதிமுறைகளை மீறுவோர் மீது, தேசிய பேரிடர் மேலாண்மை சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...