‘பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளில் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை நடத்துவது தொடர்பான விவகாரத்தில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது,’ என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச்சில் இருந்து தொடர்ந்து ஊடரங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், நாட்டில் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டு இருப்பதால், தமிழகம் உட்பட பல்வேறு மாநில அரசுகள் பள்ளி பொதுத் தேர்வுகளை ரத்து செய்து, அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்துள்ளன. அதோடு, கல்லுரிகளில் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வை தவிர, மற்ற தேர்வுகளை அனைத்தையும் தமிழக அரசு ரத்து செய்துள்ளது.
இந்நிலையில், ‘செப்டம்பர் மாதத்திற்குள் கல்லூரிகள், பல்கலைக் கழகங்களின் இறுதியாண்டு தேர்வு கட்டாயம் நடத்தப்படும்,’ என்ற அதிரடி அறிவிப்பை பல்கலைக் கழக மானியக் குழு (யுஜிசி) வெளியிட்டது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டது. இதை எதிர்த்து, பல்வேறு பல்கலைக் கழகங்களை சேர்ந்த 31 மாணவர்கள், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதில், நேற்று முன்தினம் தனது பதில் மனுவை தாக்கல் செய்த யுஜிசி, ‘இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு கட்டாயமாக நடத்தப்படும்,’ என்று திட்டவட்டமாக தெரிவித்து விட்டது. இந்த வழக்கு நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர்கள் தரப்பு முன்வைத்த வாதத்தில், ‘நாட்டில் தற்போது தினமும் சராசரியாக 50 ஆயிரம் பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் உட்பட பல்வேறு மாநிலங்களில் பல்கலைக் கழக, கல்லூரி கட்டிடங்கள் நோயாளிகளை தங்க வைக்கும் மையமாக மாற்றப்பட்டுள்ளன. இதுபோன்ற அசாதாரண சூழலில், இறுதியாண்டு தேர்வை எப்படி நடத்த முடியும்? குறிப்பாக, சட்டப்படிப்புகளின் தேர்வுகள் கூட தற்போது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், யுஜிசி மட்டும் தேர்வை நடத்தியே தீருவோம் என கூறுகிறது. அதனை ஏற்க முடியாது. அதற்கு தடை விதிக்க வேண்டும்,’ என கூறப்பட்டது.
யுஜிசி தரப்பில் மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா செய்த வாதத்தில், “இந்த விவகாரம் குறித்து எங்கள் தரப்பில் எழுத்துப்பூர்வ அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்கிறோம். இருப்பினும், இறுதித் தேர்வை உச்ச நீதிமன்றம் கண்டிப்பாக ரத்து செய்து விடும் என்ற எண்ணம் மாணவர்களுக்கு வந்து விடக்கூடாது. அவர்கள் கண்டிப்பாக தேர்வுகளை எதிர்கொள்ள தங்களை தயார் செய்துக்கொள்ள வேண்டும்,’’ என்றார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “இறுதியாண்டு தேர்வு நடத்தும் விவகாரத்தில் யுஜிசி.க்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது எவ்வித இடைக்கால உத்தரவையும் தற்போது பிறப்பிக்க முடியாது,’’ என உத்தரவிட்டனர். மேலும், வழக்கை வரும் 10ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
* பல்கலைக் கழக, கல்லூரி கட்டிடங்கள் நோயாளிகளை தங்க வைக்கும் மையமாக மாற்றப்பட்டுள்ளன. இதுபோன்ற அசாதாரண சூழலில், தேர்வை எப்படி நடத்த முடியும்?’’ - மாணவர்கள் வாதம்
* இறுதித் தேர்வை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து விடும் என்ற எண்ணம் மாணவர்களுக்கு வந்து விடக்கூடாது. அவர்கள் கண்டிப்பாக தேர்வுகளை எதிர்கொள்ள தயாராக வேண்டும்,’’ - யுஜிசி வாதம்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...