Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தாய்மொழி தமிழில், சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ள இளம் பகவத்

இளம்பகவத்தின் சொந்த கிராமம், சோழன்குடிகாடு. தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகில் இருக்கும் சிறிய கிராமம். படித்தது எல்லாம் அரசுப் பள்ளி, தமிழ்வழிக் கல்வி. 2017ம் ஆண்டு  வெளியான சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகளில் இளம்பகவத்தின் அகில இந்திய ரேங்க் 117. `இதில் என்ன விசேஷம் இருக்கிறது?’ எனத் தோன்றலாம். இளம்பகவத் ஏன் ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதினார் என்ற காரணம்தான் இதற்கான விடை.

இளம்பகவத் ஒரு சாதாரண விவசாயக் குடும்பப் பிள்ளை. இவருடைய அப்பா கந்தசாமி, சோழன்குடிகாடு கிராமத்தின் முதல் பட்டதாரி. பல்வேறு சமூக இயக்கங்களில் தீவிர ஈடுபாடுகொண்டவர். வருவாய்த் துறையில் கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றியவர். நேர்மையாகவும் உண்மையாகவும் பணிபுரிந்த ஓர் அரசு ஊழியர். இளம்பகவத்தின் தாயாரும் ஒரு பொதுவுடமைப் போராளி. உழைக்கும் பெண்களின் நலனுக்காக, தொடர்ச்சியாகப் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தும் பங்கெடுத்தவர். இப்படி ஒரு நல்ல சூழலில் வளர்ந்தவர் இளம்பகவத்.

ப்ளஸ் டூ நேரத்தில் இளம்பகவத்தின் அப்பா உடல்நலம் இன்றி இறந்துபோனார். ஒற்றை நபர் வருமானத்தில் இயங்கிய குடும்பம் தடுமாறி நின்றது. ப்ளஸ் டூ-வுடன் தன் படிப்பை நிறுத்திக்கொள்ளவேண்டிய கட்டாயம் இளம்பகவத்துக்கு.

அரசுப் பணியில் இருப்பவர் இறந்துபோனால் அவரது வாரிசு ஒருவருக்கு, கருணை அடிப்படையில் கொடுக்கப்படும் அரசுப் பணியை தனக்கு வழங்கிடக்கோரி, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்தார் இளம்பகவத். இது நடந்தது 1998-ம் ஆண்டு. ஓர் ஆண்டு காலம் கடந்தும் எதுவும் நடக்கவில்லை. சான்றிதழ்கள் அரசாங்க அலுவலக பீரோக்களில் முடங்கியதால் கல்லூரியிலும் சேர முடியவில்லை. திடீரென அழைப்பு வரும். குறிப்பிட்ட ஒரு சான்றிதழைப் பெற்றுத்தரச் சொல்வார்கள். அவசர, அவசரமாக அதைத் தயார்செய்துகொண்டு ஓடுவார். மீண்டும் காத்திருக்கச் சொல்வார்கள். அரசு அலுவலகங்களில் காத்திருப்பது இளம்பகவத்துக்கு தினசரி வேலையானது. வேலை மட்டும் கிடைக்கவே இல்லை.

தன் தந்தை கற்றுக்கொடுத்த நேர்மை இவரை மாற்றுவழிகளுக்கு இட்டுச்செல்லவில்லை. சில ஆயிரங்கள் கொடுத்திருந்தால், இவருக்கு வேலை கிடைத்திருக்கும். ஆனால், அதற்கு இவர் தயாராக இல்லை. தனக்கான உரிமைக்காக ஒவ்வொரு நாளும் போராடினார். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் நீண்ட வராண்டா இவருடைய வசிப்பிடமாக மாறியது. அடுத்த ஏழு ஆண்டுகளுக்கு இந்தப் போராட்டம் தொடர்ந்தது.

வாரிசு அடிப்படையிலான கருணைப் பணிக்கு, எனக்கு முன்னும் பின்னும் 18 பேர் காத்திருந்தனர். சிலர், இடையில் புகுந்து குறுக்கு வழியில் வேலை வாங்கிச்சென்றனர். எங்களுக்குப் பிறகு வந்த அவர்களுக்கு எப்படி வேலை கிடைத்தது என்ற கேள்விக்கு, யாரிடமும் பதில் இல்லை. வேலை கிடைக்காமல் காத்திருந்த நாங்கள் எல்லோரும் ஒன்றுசேர்ந்து ஆலோசனை நடத்தினோம். அப்போதுதான் நாங்கள் ஏமாற்றப்படுவதை உணர்ந்தோம்’’ என்று அந்தக் கொடும் தினங்களை நினைவுகூர்கிறார் இளம்பகவத்.

ஒருகட்டத்தில் சலித்துப்போனவர், மாவட்ட ஆட்சியர் தொடங்கி உயர் அதிகாரிகள் வரை சகலரையும் பார்த்து புகார் மனு கொடுக்க ஆரம்பித்தார்.

நாம் யாரைப் பற்றி புகார் கூறுகிறோமோ, அவரிடமே அந்தப் புகார் மனு போய்ச்சேரும். ஒரு மாதம் கழித்து மட்டித்தாளில் ஒரு பதில் வரும். `உங்கள் கோரிக்கை பரிசீலனையில் இருக்கிறது’. மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முதல் தலைமைச் செயலகம் வரை இதே அனுபவம்தான். ஒருசில விதிவிலக்குகள் இருக்கலாம். ஆனால் எனக்குக் கிடைத்த அனுபவங்கள் எல்லாமே மிக மோசமானவை’’ என்கிறார் இளம்பகவத்.

 அப்பாவின் நிலத்தில் விவசாயம் பார்த்து அதில் கிடைத்த வருமானத்திலும், அப்பாவின் சிறிய பென்ஷனிலும்தான் குடும்பம் நகர்ந்துகொண்டிருந்தது. இந்தக் காலகட்டத்தில் குடும்பம் வறுமையின் பிடியில் சிக்கித்தவித்தது. இரண்டு சகோதரிகளுக்கும் திருமண வயது வந்துவிட, அவர்களுக்கு திருமணம் செய்துவைக்கவேண்டிய நிலை. இதற்கு நடுவில் 2001-ம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத் தொலைதூரக் கல்வி நிறுவனத்தில் அஞ்சல் வழியில் பி.ஏ (வரலாறு) படித்து பட்டம் பெற்றார் இளம்பகவத்.

2005-ம் ஆண்டு வாக்கில் இந்தப் போராட்டம் இளம்பகவத்துக்கு சலிப்பை உண்டாக்கத் தொடங்கியது. இனி எதுவுமே நடக்காது; வேலை கிடைக்காது என்ற முடிவுக்கு வந்தார். `இந்த வேலை வேண்டாம், இந்த முயற்சிகள் போதும்’ என நினைத்தார்.

`ilam 4இனி இந்த அலுவலகத்துக்குத் திரும்பி வந்தால், இவர்களிடம் வேலை கேட்டு வரக் கூடாது. வேலை வாங்குகிறவனாகத்தான் வரவேண்டும்’ எனத் தீர்மானித்தார். அப்போது இளம்பகவத்தின் மனதுக்குள் விழுந்ததுதான் ஐ.ஏ.எஸ் கனவு. ஆனால், அதுவும் அத்தனை சுலமாக நிறைவேறிவிடவில்லை.

என் லட்சியத்தை நிறைவேற்றிக்கொள்ளும் பயணம் நீண்டது என்பதை நான் அறிந்திருந்தேன். அதற்காக என் குடும்பத்தை பத்து ஆண்டுகளுக்கு வறுமையில் வைத்திருக்க எனக்கு விருப்பம் இல்லை. அதனால் ஏதாவது ஓர் அரசு வேலையில் சேர்ந்துவிட்டு அங்கிருந்து ஐ.ஏ.எஸ் ஆவது என முடிவு எடுத்தேன்’’ என்கிறார் இளம்பகவத்.

2007-ம் ஆண்டில் டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வு எழுதினார். அதில் வெற்றிபெற்று காவல் துறை அமைச்சுப் பணியில் இளநிலை உதவியாளர் பதவி ஏற்றார். அடுத்த ஆறு மாதங்களில் குரூப்-2 தேர்வு எழுதி, சென்னை தலைமைச் செயலகத்தில் உதவியாளர் ஆனார். அங்கு இருந்து உள்ளாட்சி நிதி உதவி தணிக்கை ஆய்வாளராகப் பணியில் சேர்ந்தார். இதற்கு நடுவில் 2010-ம் ஆண்டில் குரூப்-2 தேர்வில் வெற்றிபெற்று, இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் பணியில் சேர்ந்தார். 2011-ம் ஆண்டில் டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வில் தேர்ச்சி பெற்று, ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் ஆனார். 2014-ம் ஆண்டு சிவில் சர்வீஸஸ் தேர்வில் வெற்றிபெற்றபோது ஐ.ஆர்.எஸ் (இந்திய வருவாய் பணி) பணி கிடைத்தது. இதற்கு இடையே, மீண்டும் டி.என்.பி.எஸ்.சி குரூப் -1 தேர்வில் வெற்றிபெற்று போலீஸ் டி.எஸ்.பி பணி கிடைத்தது. அடுத்த ஆறு மாதங்கள் டி.எஸ்.பி பயிற்சியில் இருந்த இவர், அதன் பிறகு ஹரியானா மாநிலத்தில் உள்ள நேஷனல் அகாடமி ஆஃப் கஸ்டம்ஸ் அண்ட் எக்சைஸ், நார்காட்டிக்ஸ் மையத்தில் பயிற்சியில் சேர்ந்தார். இப்படி 2007-ம் ஆண்டு தொடங்கி 2016-ம் ஆண்டு வரை ஏழு அரசு அலுவலகங்களில் பணியாற்றினார் இளம்பகவத். ஒரே ஓர் அரசுப் பணிக்காக ஆண்டுக்கணக்கில் காத்திருந்த இவரை நோக்கி விதவிதமான அரசுப் பணிகள் தேடிவந்தன. ஆனால், அவரது லட்சியம் அது அல்ல… ஐ.ஏ.எஸ்!

2005-ம் ஆண்டு தொடங்கி கடந்த ஆண்டு வரை ஒவ்வோர் ஆண்டும் சிவில் சர்வீஸஸ் தேர்வை அவர் எழுதிக்கொண்டே இருந்தார். இதுவரை மொத்தம் ஐந்து முறை நேர்முகத் தேர்வு வரை சென்று வந்துள்ளார். ஆனால், ஒருமுறைகூடத் தகுதி பெறவில்லை. இருந்தும் மனம் தளரவில்லை. ஒருவழியாக இந்த ஆண்டு தன் கனவை எட்டிவிட்டார். அகில இந்திய அளவில் 117-வது ரேங்க் பெற்றிருக்கும் இளம்பகவத், சிவில் சர்வீஸஸ் தேர்வை, தமிழில் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 நான் ஆண்டுக்கணக்கில் கிடையாய்க் கிடந்த தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குச் சென்றிருந்தேன். இப்போது அந்த இடம் அருங்காட்சியகமாக மாறிவிட்டது. அதன் நீண்ட வராண்டாவில் அமர்ந்திருந்தேன். எத்தனையோ நாட்கள், வாரங்கள், ஆண்டுகள் அங்கே அமர்ந்திருக்கிறேன். காத்திருந்து காத்திருந்து சலித்திருக்கிறேன். ஆனால், இப்போது நான் ஒரு நல்ல இடத்தில் இருக்கிறேன். அதற்குக் காரணம் இந்த இடம்தான். ஒருவேளை அன்று எனக்கு என் அப்பாவின் வேலையைக் கொடுத்திருந்தால், நான் இன்று இந்த நிலைக்கு வந்திருக்க முடியுமா எனத் தெரியவில்லை. அன்று நான் சந்தித்த அவமானங்களும் வலிகளும்தான் என்னை இங்கு கொண்டுவந்திருக்கின்றன’’ எனப் புன்னகைக்கிறார் இளம்பகவத்.

இளம்பகவத், தன் திறமையை தனக்கு மட்டுமே பயன்படுத்திக்கொள்பவர் அல்ல; ஊருக்காக உழைக்கும் பொதுவுடைமை வாழ்க்கைமுறையைக் கொண்ட குடும்பத்தில் இருந்து வந்தவர், மற்றவர்களுக்காகவும் சிந்திப்பவர்.

தன் கிராமத்தில் ஓர் அறையை வாடகைக்கு எடுத்து பல ஆண்டுகளாக வைத்திருக்கிறார். தானும் தன் நண்பர்களும் படிப்பதற்காக வாங்கிய அத்தனை நூல்களையும் இந்த அறையில் வைத்திருக்கிறார். இவற்றை போட்டித் தேர்வுகளுக்கு முயற்சிசெய்யும் எவர் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

அந்த அறைக்கு எத்தனை சாவிகள் இருக்கின்றன என்றுகூட எனக்குத் தெரியாது. வாடகை மட்டும் கொடுத்து விடுவோம். கூடவே வேண்டிய நூல்களையும், படிப்பதற்கான உதவிகளையும் செய்வோம்’’ என்கிறார் இளம்பகவத். இன்று 30-க்கும் அதிகமான இளைஞர்கள் இவருடைய படிப்பகத்தின் மூலம் படித்து அரசுப் பணிகளில் இருக்கிறார்கள்.

‘`நாம் கற்கும் கல்வி, பகிர்தலைத்தான் நமக்குக் கற்றுத்தருகிறது. நாம் செய்ய வேண்டியதும் அதைத்தான்’’ எனப் புன்னகைக்கிறார் இளம் ஐ.ஏ.எஸ் இளம்பகவத்!

அவர் தற்பொழுது ஃபரிதாபாத்தில் (IRS Probationer)  கஸ்டம்ஸ் துறையில்  பணியில் உள்ளார்.

 அகில இந்திய அளவில், 117வது இடத்திலும், தமிழக அளவில், நான்காம் இடமும் பிடித்துள்ள இளம் பகவத், தாய்மொழி தமிழில், சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive