நம்
நாட்டில் வங்கிகள், ரயில்வேஉள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உள்ள
பணியிடங்களை நிரப்ப தற்போது ரயில்வே தேர்வு வாரியம் (ஆர்ஆர்பி), மத்திய
அரசு பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) மற்றும் வங்கி பணியாளர் தேர்வு
நிறுவனம் (ஐபிபிஎஸ்) மூலம் தனித்தனியாக தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
அதன்படி
ஆண்டுதோறும் மத்திய அரசு துறைகளில் உள்ள 1.7 லட்சம் பணியிடங்களுக்கு
ஏறத்தாழ 3 கோடி இளைஞர்கள் பல்வேறு வகையான தேர்வுகளை எழுதி வருகின்றனர்.
அதாவது ஒரு தேர்வர் ஆண்டுக்கு சராசரியாக 10 முதல் 12 தேர்வுகளை எழுத
வேண்டிய நிலையுள்ளது. மேலும், ஒவ்வொரு முறை தேர்வு எழுத தனித்தனியாக
விண்ணப்பிப்பதுடன் கட்டணமாக ரூ.300 முதல் ரூ.800 வரை செலுத்துகின்றனர்.
இதனால் தேர்வர்களுக்கு அதிக செலவு ஏற்படுவதுடன் நேரமும் வீணாகிறது.
இதைத்
தவிர்க்கும் நோக்கத்தில்மத்திய அரசின் பி, சி பிரிவில் தொழில்நுட்பம்
சாராத பணிகளுக்கு நாடு முழுவதும் ஒரே பொதுதகுதித் தேர்வை (சிஇடி) நடத்த
முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தேசிய பணியாளர் தேர்வு முகமை (என்ஆர்ஏ)
என்ற அமைப்பை உருவாக்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஆகஸ்ட்
19-ம் தேதி ஒப்புதல் வழங்கியது. இந்த பணிகளுக்காக ரூ.1,517 கோடி நிதி
ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த புதிய முறை குறித்து சந்தேகங்களும், குழப்பங்களும் தேர்வர்கள் மத்தியில் நிலவி வருகின்றன.
‘சிஇடி’ என்றால் என்ன?
‘சிஇடி’
எனப்படும் பொது தகுதித்தேர்வு தற்போதைய ஐபிபிஎஸ், ஆர்ஆர்பி, எஸ்எஸ்சி
அமைப்புகள்நடத்தும் முதல்நிலை தேர்வுகளுக்கு மாற்றாக இருக்கும்.
10-ம்வகுப்பு, 12-ம் வகுப்பு மற்றும்பட்டதாரிகள் என 3 நிலைகளில் ஆண்டுக்கு 2
முறை இணையவழியில் தேர்வு நடத்தப்படும். இந்த தேர்வை இந்தி, ஆங்கிலம்
மற்றும் 12 இதர மாநில மொழிகளில் எழுதலாம்.
‘சிஇடி’ தேர்வில் பெறும்
மதிப்பெண் அடுத்த 3 ஆண்டுகள் செல்லுபடியாகும். இந்த மதிப்பெண்
அடிப்படையில்தான் தேர்வர்கள் ஐபிபிஎஸ், ஆர்ஆர்பி, எஸ்எஸ்சி நடத்தும்
அடுத்தகட்ட 2, 3-ம் நிலை தேர்வுகளில் பங்கேற்க முடியும்.
‘சிஇடி’
தேர்வுக்காக நாடு முழுவதும் மாவட்டத்துக்கு ஒன்று வீதம் ஆயிரம் தேர்வு
மையங்கள் அமைக்கப்படும். இந்த என்ஆர்ஏ திட்டம் அடுத்த ஆண்டு அமலுக்கு வரும்
என்று மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயனளிக்கும் அம்சங்கள்
இந்த
புதிய முறையால் தேர்வர்கள் அதிக அளவிலான முதல்நிலைதேர்வுகளை எழுத
தேவையில்லை. ஒரு முறை மட்டும் ‘சிஇடி’ தேர்வுஎழுதினால் போதுமானது. மாவட்ட
அளவில் தேர்வு மையங்கள் இருப்பதால் அதிக தூரம் பயணிக்க வேண்டிய அவசியம்
இருக்காது. இதனால்பெண் தேர்வர்கள் பெரிதும் பயனடைவர். மேலும், செலவினமும்
பெருமளவு குறையும்.
ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் (வயது
வரம்புக்குஉட்பட்டு) தேர்வில் பங்கேற்கலாம். அவர் பெற்ற அதிகபட்ச மதிப்பெண்
மட்டும் கணக்கில் கொள்ளப்படும். இதுதவிர என்ஆர்ஏ இணையதளத்தில் 24 நேரமும்
மாதிரி தேர்வுகள் எழுதி பயிற்சி பெறலாம்.
அதேபோல், கிராமப்புற
இளைஞர்களுக்கு என்ஆர்ஏ சார்பில் பிரத்யேகமாக மாதிரி பயிற்சி தேர்வுகள்
நடத்தப்படும். ஒரே நாளில் வெவ்வேறு தேர்வுகள் எழுத வேண்டியசிக்கல்களும் இனி
இருக்காது என்றுகல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எதிர்கொள்ளும் சிக்கல்கள்
என்ஆர்ஏ
அமைப்பு சார்பில் முதல்நிலை தேர்வு மட்டுமே நடத்தப்படும். 2, 3-ம் நிலை
தேர்வுகள் சம்பந்தப்பட்ட துறையின் தேர்வு வாரியமே நடத்தும். இதனால்
மீண்டும் தனித்தனி பாடத் திட்டங்களையும், கூடுதல் பாடங்களையும் தேர்வர்கள்
படிக்க வேண்டிய நிலைஏற்படும். அதனால் ஒரேவித பாடத்திட்டத்தை நிர்ணயிக்க
வேண்டும் என்ற கருத்து நிலவுகிறது.
அதேபோல், சம்பந்தப்பட்ட துறைகள்
நடத்தும் 2-ம் நிலை தேர்வுகள் வழக்கம்போல மாநில மொழிகளில் நடைபெறாது.
மேலும்,10 மற்றும் 12-ம் வகுப்புகள் அளவிலான பணிகளுக்கு இணையவழி தேர்வுகள்
நடைபெற்றால் கிராமப்புற இளைஞர்கள் பெரிதும் பின்னடைவை சந்திப்பார்கள்.
அதனால் அனைத்து தரப்பினருக்கும் சமமான வாய்ப்புகள் தரப்படுவதை மத்திய அரசு
உறுதிசெய்ய வேண்டும் என்பது தேர்வர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது
எனவே,
இந்த என்ஆர்ஏ திட்டத்தின் செயல்பாடு, தேர்வு முறை மற்றும் பாடத்திட்டம்
உள்ளிட்ட இதரவிவரங்களை மத்திய அரசு தெளிவுபடுத்தும்வரை அதுகுறித்த
சர்ச்சைகளும் தொடரவே செய்யும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...