*2013 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் ஆசிரியர்
தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. அத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு
தகுதித் தேர்வு சான்றிதழும் வழங்கப்பட்டது. தகுதித் தேர்வின் சான்றிதழ் ஏழு
ஆண்டுகள் மட்டுமே செல்லுபடியாகும் என அரசு அறிவித்தது.*
*2013ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றும் இன்று வரை
சுமார் 94,000 இடைநிலை மற்றும் ஆசிரியர்களுக்கு பணி
வழங்கப்படவில்லை.இதனால் அவர்களுடைய வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.*
*2013ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வின் தகுதிச் சான்றிதழ் காலாவதி ஆகும்
சூழலை எட்டியுள்ளது. இன்னும் சில மாதங்களில் அவர்களுடைய தகுதித் தேர்வு
சான்றிதழ் காலாவதி ஆக இருப்பது வேதனை அளிப்பதாக உள்ளது.*
*தொடர்ந்து இந்த அரசிடம் 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில்
தேர்ச்சி பெற்றவர்கள் தங்களுக்கு பணி வாய்ப்பில் முழு முன்னுரிமை அளித்திட
வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.*
*அவர்களுடைய நிலையை மாண்புமிகு தமிழக முதல்வர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை
அமைச்சர் ஆகியோரிடம் நேரில் சந்தித்தும்,மனுவாகவும்,முதல்வர்
தனிப்பிரிவு,அம்மா அழைப்பு மையம் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளில் நேரிலும்
மனுவின் வாயிலாக முறையிட்டும் அவர்களுக்கான நிரந்தர தீர்வு இன்று வரை
கிடைக்கப்பெறாதது மிகவும் கண்டனத்துக்கு உரியது.*
*2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்கள்
தங்களுக்கு பணி வாய்ப்பில் முழு முன்னுரிமை வழங்கக் கோரி சென்னை வள்ளுவர்
கோட்டம், சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை, டிபிஐ வளாகம்,எழும்பூர் லஸ்
கார்டன் போன்ற பல்வேறு இடங்களில் உண்ணாவிரதம், மறியல் போராட்டம், மற்றும்
கண்டன ஊர்வலம் நடத்தியுள்ளார்கள்.அதோடு விட்டுவிடாமல் அதன் தொடர்ச்சியாக
மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு தகுதித் தேர்வு
சான்றிதழை ஒப்படைக்கும் போராட்டம், திருச்சி மாவட்ட முதன்மை கல்வி
அலுவலகத்தை முற்றுகையிட்டு கருஞ்சாலையில் எழுதும் போராட்டம்,
பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் சொந்த மாவட்டமான ஈரோடு மாவட்டத்தில்
காளைமாடு சிலை அருகே ஆசிரியர் தினத்தை கருப்பு தினமாக அனுசரித்தும் தமிழக
அரசின் வெற்று அறிக்கைகளை கண்டித்து வெற்று அறிக்கைகளை உண்ணும் நூதன
போராட்டங்களை நடத்தி பல நூற்றுக்கணக்கான தேர்வர்கள் கைது
செய்யப்பட்டார்கள் என்பது வேதனையின் உச்சம்.*
*நிறைவாக தற்போதைய பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக செயல்பட்டு வரும்
மாண்புமிகு திரு.கே.ஏ.செங்கோட்டையன் அவர்களை மட்டும் சுமார் நாற்பதுக்கும்
மேற்பட்ட முறை பல்வேறு இடங்களில் நேரில் சந்தித்தும்,மனு
கொடுத்தும்,முற்றுகையிட்டும் 2013 ஆம் ஆண்டு தேர்ச்சி பெற்ற தேர்வர்களுக்கு
தீர்வு எட்டப்படாதது கேலிக்கூத்தாக உள்ளது.*
*2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றும் கடந்த ஆறரை
ஆண்டுகளாக பணி கிடைக்காததால் மன உளைச்சலால் இதுவரை மூன்று தேர்வர்கள்
இறந்துள்ள செய்தி மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அவர்களில்
கச்சிராப்பாளையத்தை சேர்ந்த கல்பனா தீக்குளித்தும்,மதுரவாயலை சேர்ந்த
செந்தில்குமாரி தூக்கிட்டும்,விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தை சேர்ந்த
வீரமணி என்பவர் மன உளைச்சலால் மயங்கி கீழே விழுந்து உயிர் இறந்துள்ளனர்.*
*மேலும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் 28.01.2018 அன்று 2013ம் ஆண்டு
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஒரு வாரத்தில் பணி
வழங்கப்படும் எனவும்,அதே ஆண்டில் 13,000 ஆசிரியர் காலிபணியிடங்கள்
நிரப்பப்படும் எனவும்,ஜனவரி மாதம் 2019 அன்று 94,000 பேருக்கு பணி
வழங்கப்படும் எனவும்,அதே ஆண்டில் 2223 பட்டதாரி ஆசிரியர் காலிபணியிடங்கள்
இருப்பதாக அறிவித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தற்போது ஐந்து
தினங்களுக்கு முன் 7200 ஆசிரியர்கள் கூடுதலாக உள்ளனர் என்ற செய்தி
உண்மையிலேயே கேலிக்கூத்தாக உள்ளது.*
*ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பதிவிஉயர்வு,பணி ஓய்வு
பெறுகிறார்கள், இலட்சக்கணக்கான மாணவர்கள் புதியதாக அரசுப்பள்ளியில்
சேர்ந்துள்ளனர் என அரசு தெரிவிக்கிறது.இப்படி இருக்கையில் கடந்த ஆறரை
ஆண்டுகளாக ஒரு இடைநிலை ஆசிரியர் பணியிடம் கூட நியமிக்காத சூழலில் கூடுதலாக
7200 ஆசிரியர்கள் உள்ளனர் என கூறுவது ஆட்சியாளர்களின்
நிர்வாகத்திறமையின்மையை தெளிவாக காட்டுகிறது.*
*ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் ஏழாண்டு காலம் தான் செல்லும் என்று அரசு கூறி இருப்பது முறையற்றது*
*ஆசிரியர் தகுதித் தேர்வையே எழுதாமல் அரசுப் பள்ளிகளில் பணியாற்றும்
ஆசிரியர்களுக்கு தொடர்ந்து கால நீட்டிப்பு வழங்கி வருகிறது.
பேராசிரியர்களுக்கான மாநில மற்றும் மத்திய தகுதித் தேர்வுகளின் (SLET &
NET)கால அவகாசம் ஆயுட்காலமாக இருப்பது போல் தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்
தேர்வின் சான்றிதழ் காலத்தையும் ஆயுட்காலம் ஆக்க வேண்டும்.*
*பாதிக்கப்பட்ட 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி
பெற்றவர்களுக்கு எதிர்வரும் காலிபணியிடங்களில் முழு முன்னுரிமை அளித்து
அரசாணை வெளியிட்டு அவர்களின் பணி வாய்ப்பினை உறுதி செய்திட வேண்டும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...