பொறியியல் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்பு மற்றும் அனைத்து பட்டப் படிப்புக்களின் இறுதி பருவத் தேர்வை (செமஸ்டர்) ரத்து செய்ய உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பரவலைத் தடுக்க ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல, தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புக்கள் உள்ளிட்ட அனைத்து பட்டப் படிப்புக்களுக்கான இறுதிப்பருவத் தேர்வுகளை ரத்து செய்யக் கோரி சென்னை கொளத்தூரைச் சேர்ந்த வக்கீல் வி.ஆனந்த் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.அவர் தாக்கல் செய்த மனுவில், பள்ளி, கல்லூரிகள் கொரோனா தனிமைப்படுத்தல் பிரிவுகளாக மாற்றப்பட்டுள்ளன. இப்போதைக்கு பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை. மாணவர்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.
தற்போதைய சூழலில் கொரோனா பாதிப்பு செப்டம்பர் மாதம் தான் தணியும் எனவும், பள்ளி, கல்லூரிகள் 2021 ம் ஆண்டு ஜனவரி தான் திறக்க முடியும் எனவும் கூறப்படுகிறது. இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள், ஜனவரியில் தேர்வு எழுதினால் அதன் முடிவுகள் வெளியாக மார்ச் மாதமாகி விடும் என்பதால், இன்னும் ஓராண்டு காத்திருக்கவேண்டிய நிலை ஏற்படும். இது அவர்களின் சீனியாரிட்டியை பாதிக்கும். தேர்வு நடத்துவது தொடர்பாக பல்கலைக்கழகங்களும், நிகர்நிலை பல்கலைக்கழகங்களும் இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. தற்போதைக்கு தேர்வு நடத்த வாய்ப்பில்லை. என்பதாலும், இறுதிப் பருவத் தேர்வை ரத்து செய்து ஹால் டிக்கெட் பெற்ற அனைவரும் தேர்ச்சி என அறிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த மனு புதன்கிழமை விசாரணைக்கு வரவுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...