இது கரோனா காலம். கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க ‘வருமுன் காக்கும்’ வழியில்
கைகளைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். அதற்கு அடிக்கடி சோப்பு
போட்டுக் கைகளைக் கழுவ வேண்டும்; வெளியிடங்களில் ‘ஹேண்ட் சானிடைசர்’ கொண்டு
கைகளைச் சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும். சோப்பும் சானிடைசரும் கரோனா
வைரஸை முற்றிலும் அழிக்குமா, அவற்றை எப்படிப் பயன்படுத்துவது, கெடுதல்கள்
என்ன என்பன போன்ற சந்தேகங்கள் பயனாளிகளுக்கு ஏற்படு வது இயல்பு. சானிடைசர்
(கிருமிநாசினி) குறித்த சந்தேகங்களுக்கு சுருக்கமான அறிவியல் விளக்கம்:
சானிடைசர் என்பது என்ன?
சானிடைசர் என்பது சோப்பும் தண்ணீரும் கிடைக்காதபோது அல்லது அடிக்கடி கை
கழுவ நேரமில்லாதபோது அவசரத்துக்குக் கைகளைச் சுத்தப்படுத்த உதவும்
கிருமிநாசினி. முன்பு மருத்துவர்களும் மருத்துவப் பணியாளர்களும்
நோயாளிகளைத் தொட்டுப் பரிசோதித்துவிட்டு கைகளைச் சுத்தப்படுத்த சானிடைசரை
பயன்படுத்துவது வழக்கம். இப்போது கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க கைகள்
சுத்தமாக இருக்க வேண்டியது அவசியம். சோப்பு இல்லாத இடங்களில் அல்லது
சோப்புப் போட்டுக் கை கழுவத் தண்ணீர் உள்ளிட்ட வசதி இல்லாத இடங்களில்
பொதுமக்களும் சானிடைசரைப் பயன்படுத்திக் கைகளைச் சுத்தப்படுத்திக்
கொள்ளலாம் என உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. கை சுகாதாரம் காக்க
சானிடைசர் பயன்படுகிறது.
சானிடைசரில் வகைகள் உண்டா?
ஆல்கஹால் கலந்தது, ஆல்கஹால் கலக்காதது என்று இரு வகை சானிடைசர்கள் உண்டு.
ஜெல், நுரை, திரவம் எனப் பல வடிவங்களில் சானிடைசர் கிடைக்கிறது.
எதைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது?
சானிடைசரில் 40% தண்ணீர், 60% ஆல்கஹால் உள்ளது. வசீகரிக்கும்
நறுமணத்துக்காகவும் கண்களைக் கவரும் நிறத்துக்காகவும் சில வேதிப்பொருள்கள்
கலக்கப்படுகின்றன. ஆல்கஹால் சானிடைசர் என்பது 65 சதவீதம் எத்தில் ஆல்கஹால்
(எத்தனால்), 35 சதவீதம் ஐஸோ புரோபைல் ஆல்கஹால் ஆகியவற்றைக்
தயாரிக்கப்படுகிறது. ஆல்கஹால் அல்லாத சானிடைசர் பென்சால் கோனியம் குளோரைடு
(Benzal konium Chloride), டிரைக்ளோசன் (Triclosan) போன்றவற்றை முக்கியப்
பொருள்களாகக் கொண்டு தயாரிக்கப்படுகிறது.
எந்த சானிடைசர் நல்லது?
குறைந்தது 60 சதவீதம் எத்தில் ஆல்கஹால் கலந்துள்ள சானிடைசர் நல்லது
என்கிறது உலக சுகாதார நிறுவனம். பல நிறுவனங்கள் விலையைக் குறைப்பதற்காக
ஆல்கஹால் அளவைக் குறைத்துவிடுகின்றன. பயனாளிகள் இதைக் கவனித்து வாங்கிப்
பயன்படுத்த வேண்டும்.
எங்கெல்லாம் சானிடைசரைப் பயன்படுத்தலாம்?
எல்லா வெளியிடங்களிலும் சானிடைசரைப் பயன்படுத்தலாம். குறிப்பாகச் சொல்ல
வேண்டுமானால் மருத்துவமனைகள், கடைகள், அலுவலகங்கள் தொழிற்சாலை
நுழைவிடங்கள், வெளியேறும் இடங்கள், ஊழியர்களின் அறைகள், கூட்டம் கூடும்
அறைகள், ஓய்வறைகள், கழிப்பறைகள், போக்குவரத்து வசதி, போக்குவரத்துக்காகக்
காத்திருக்கும் இடங்கள், நிழற்குடைகள், பணப் பட்டுவாடா செய்யும் இடங்கள்,
ஏ.டி.எம். இயந்திரம் உள்ள இடங்கள், உணவகங்கள், கேன்டீன்கள், காபி -
தேநீர்க் கடைகள், சலூன்கள், லிப்ட்கள் போன்ற இடங்களில் சானிடைசரைப்
பயன்படுத்தலாம். எல்லாப் பயணங்களிலும் சானிடைசரைப் பயன்படுத்தலாம்.
கரோனாவுக்கு எதிராக சானிடைசர் எப்படிப் பதுகாப்பு தருகிறது?
கரோனா வைரஸில் உள்ள கொழுப்புப் படிவங்களை, சானிடைசரில் உள்ள ஆல்ஹால்
உடைத்துவிடுகிறது. அதனால் கரோனா அழிந்துவிடுகிறது. சானிடைசரை முறையாகப்
பயன்படுத்தும்போது மட்டுமே இந்தப் பலன் கிடைக்கும். இல்லாவிட்டால் போலியான
பாதுகாப்புதான் தரும்
சானிடைசரை முறையாக எப்படிப் பயன்படுத்துவது?
கையில் சிறிதளவு ஹேண்ட் சானிடைசரை எடுத்துக்கொண்டு இரண்டு கைகளிலும்
மணிக்கட்டு வரை நன்றாகப் பரவச் செய்ய வேண்டும். கை முழுவதும் நன்றாகப்
பரவியுள்ளதா என்று சரிபார்க்க வேண்டும். இப்போது இரண்டு உள்ளங்கைகளையும்
சேர்த்து நன்கு தேய்க்க வேண்டும். வலது கை உள்ளங்கையால் இடது புறங்கையை
நன்கு தேய்க்க வேண்டும். பின்னர் இடது கை உள்ளங்கையால் வலது புறங்கையைத்
தேய்க்க வேண்டும்.
இரண்டு கைகளையும் கோத்து விரல்களுக்கு நடுவிலும் சானிடைசர் செல்லும்படியாக
விரல் இடுக்குகளை நன்கு தேய்க்க வேண்டும். முன்னும் பின்னும் தேய்த்து
நன்கு பரவச்செய்ய வேண்டும். விரல்களின் பின்புறத்தை உள்ளங்கையில் தேய்க்க
வேண்டும். ஒரு கையின் உள்ளங்கையை மறு கையின் கட்டை விரலால் சுழற்சி
முறையில் தேய்க்க வேண்டும். அப்படியே இரண்டு கைகளுக்கும் செய்ய வேண்டும்.
இரண்டு உள்ளங்கைகளையும் சுழற்சி முறையில் சுத்தம்செய்ய வேண்டும். விரல்களை
வைத்து உள்ளங்கையைத் தேய்க்க வேண்டும். ஒரு கையை வைத்து மற்றொரு கையின்
மணிக்கட்டைச் சுழல் முறையில் தேய்க்க வேண்டும். சானிடைசர் ஆவியாகும்வரை
காத்திருக்க வேண்டும். அதிகபட்சம் 2 நிமிடங்களுக்கு கைகளில் சானிடைசரின்
செயல்பாடு இருக்கும்.
எப்போது சானிடைசரைப் பயன்படுத்தக் கூடாது?
பொதுவாக நெருப்பு உள்ள இடங்களுக்கு அருகில் சானிடைசரைப் பயன்படுத்தக்
கூடாது. காரை ஸ்டார்ட் செய்யும்போது, சமைக்கப் போகும்போதும் பயன்படுத்தக்
கூடாது. கைகளில் கண்ணுக்குத் தெரியும் அழுக்கு இருந்தால், ஏதேனும்
ரசாயனங்களைத் தொட்டுவிட்டால், விளையாடிவிட்டு வந்தால் சானிடைசரைப்
பயன்படுத்துவதற்குப் பதிலாக சோப்பு பயன்படுத்துவதுதான் நல்லது.
சாப்பிடுவதற்கு முன்பும் பின்பும் கழிவறைக்குச் சென்றுவந்த பிறகும்
வளர்ப்புப் பிராணிகளைத் தொட்ட பிறகும் சானிடைசர் கொண்டு கைகளைச்
சுத்தப்படுத்துவது அவ்வளவாகப் பலன் தராது. அப்போது சோப்புதான் நல்லது.
சோப்புக்கு சானிடைசர் ஈடாகுமா?
சானிடைசர் பயன்பாடு சோப்புக்கு ஈடாகாது. 20 விநாடிகளுக்குக் கைகளைச் சோப்பு
போட்டு கழுவும்போது கரோனா வைரஸ் முழுவதுமாக அழிந்துவிடும். ஆனால்,
சானிடைசரை முறையாகக் கைகளில் முழுவதுமாகப் பூசிச் சுத்தப்படுத்துகிறவர்கள்
சிறிய சதவீதமே. ஆகவே, சோப்புக்கு அடுத்தபடியாக மட்டுமே சானிடைசரைச்
சொல்லலாம்.
வீட்டில் தயாரிக்கப்படும் சானிடைசர்களைப் பயன்படுத்தலாமா?
வீட்டில் தயாரிக்கப்படும் சானிடைசர்களில் எத்தில் ஆல்கஹால் சரியான அளவில்
இருக்க வேண்டியது முக்கியம். அடுத்து, மருந்து நிறுவனங்கள் தயாரிக்கும்
சானிடைசர்களில் ‘எமோலியன்ட்’ (Emollient) எனும் ஒரு ரசாயனக் கலவை
காணப்படும். சானிடைசரில் உள்ள முக்கிய வேதிப்பொருள்கள் சருமத்தைப்
பாதிப்பதைத் தடுக்கும் பொருள் இது. பெரும்பாலும் இந்தக் கலவை வீட்டில்
தயாரிக்கும் சானிடைசர்களில் காணப்படுவதில்லை. முக்கியக் குறைபாடு இது.
அடுத்து, வீட்டில் தயாரிக்கப்படும் சானிடைசரின் நம்பகத்தன்மைக்கு
உத்தரவாதமும் இல்லை.
சானிடைசரை எங்கு வைத்துக்கொள்வது நல்லது?
சானிடைசரை சாதாரணமாக வெளியில் எங்கும் வைத்துக்கொள்ளலாம்.
குழந்தைகளுக்கு எட்டாத இடத்தில் இதைப் பாதுகாப்பது முக்கியம். கோடை
காலத்தில் சானிடைசரை காரில் வைத்துக் கொள்வது ஆபத்து. பொதுவாக, 105 டிகிரி
வெப்பத்துக்கு மேல் இருக்கும் இடங்களில் இதைப் பத்திரப்படுத்தக் கூடாது.
குழந்தைகள் சானிடைசரைப் பயன்படுத்தலாமா?
குழந்தைகள் தங்கள் கைகளை சோப்பு போட்டு தண்ணீரில் கழுவுவதே ஆரோக்கியம்
காக்கும் வழி. சானிடைசரி லிருந்து வெளிப்படும் வாசனை முகர்வதற்கு இனிமையாக
இருக்கும். ஆனால், அது சுவாச மண்டலத்தைப் பாதிக்கும். குழந்தை களுக்கு
ஆஸ்துமா வருவது, இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. இந்த நறுமணத்தின் காரணமாக
குழந்தைகள் இவற்றை உட்கொள்வதற் கான சாத்தியம் அதிகம். 10 மில்லி அளவுக்கு
மேல் உட்கொண்டு விட்டால் இவை நஞ்சாகக்கூடிய ஆபத்தும் உள்ளது. வாந்தி,
வயிற்றுப் போக்கு, வலிப்பு, சுய நினைவை இழத்தல் போன்ற பாதிப்புகள்
ஏற்படக்கூடும்.
சானிடைசர் பயன்பாட்டில் கெடுதல்கள் உண்டா?
உண்டு. சானிடைசரில் உள்ள ரசாயனங்கள் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம்.
அடிக்கடி சானிடைசரைப் பயன்படுத்தும்போது, சருமத்தைப் பாதித்து அரிப்பு,
சிவப்பு நிறத் தடிப்புகள், உலர் தோல் தோன்றுவதற்கு வழிசெய்யும். கண்ணில்
பட்டுவிட்டால் கண் எரிச்சல் ஏற்படும்;
கண்கள் சிவப்பாகும். இன்னொரு முக்கிய பாதிப்பு என்னவென்றால், சானிடைசரைத்
தொடர்ந்து பயன்படுத்தும்போது, ஒரு கட்டத்தில் கிருமிகள் தங்கள் எதிர்ப்பு
ஆற்றலை (Anti-microbial resistance) பெருக்கிக்கொள்கின்றன. அடிக்கடி
சானிடைசரைப் பயன்படுத்தும்போது கைகளில் உள்ள நன்மை தரும் பாக்டீரியா வகைகள்
அழிந்துவிடவும் சாத்தியம் உண்டு. சோப்புப் பயன்பாட்டில் இந்தக் குறைபாடு
இல்லை.
ஆல்கஹால் கலக்காத சானிடைசர்களை கரோனாவுக்கு எதிராகப் பயன்படுத்த உலக
சுகாதார நிறுவனம் பரிந்துரை செய்யவில்லை.
காரணம், இவற்றில் டிரைகுளோசான், டிரைகுளோகார்பன் எனும் வேதிப்பொருட்கள்
இருக்கின்றன. இவை பூச்சிக்கொல்லி மருந்தின் முக்கியமான சேர்க்கைப்
பொருட்கள். இவை புற்றுநோயை ஊக்குவிக்கிற மோசமான காரணிகள். இவை ரத்தக்
குழாய்க்குள் பயணிக்கும்போது சில ஒவ்வாமை விளைவுகளையும் ஏற்படுத்தும். இதன்
விளைவால் நரம்புப் பிரச்சினைகள், மலட்டுத்தன்மை, தசை வலுவிழத்தல் போன்ற
பாதிப்புகள் நாளடைவில் ஏற்படக்கூடும்.
சில சானிடைசர்களில் நறுமணத்துக்காக தாலேட் எனும் வேதிப்பொருளைச்
சேர்க்கிறார்கள்.
இதைப் பயன்படுத்தும் கர்ப்பிணிகளுக்குப் பிறவிக் குறைபாடுள்ள குழந்தை
பிறக்க வழிசெய்வதாக சமீபத்திய ஆராய்ச்சி உறுதிசெய்துள்ளது. அடுத்து,
பாரபென்ஸ் எனும் வேதிப்பொருள் ஒன்றும் சானிடைசரில் கலக்கப்படுகிறது. இது
சருமத் துவாரங்களை அடைத்து, சருமத்தைத் தடிமனாக்கி விடுகிறது; போகப்போக
சருமப் புற்றுநோய் ஏற்படுத்துவதற்கும் சாத்தியமுள்ளது என்கிறார்கள்
ஆராய்ச்சியாளர்கள். இறுதியாக வைரஸ், பாக்டீரியா போன்ற கிருமிகளை இது
முற்றிலும் அழிப்பதில்லை. கைகளில் இருக்கும் கண்ணுக்குத் தெரியும்
அழுக்குகளையும் இதனால் சுத்தப்படுத்த முடிவதில்லை.
முக்கியமான ஒன்று.
சானிடைசர்கள் எல்லாமே பிளாஸ்டிக் குப்பிகளில் கொண்டுவரப்படுவதால், இனி
வரும் காலத்தில் சுற்றுச்சூழலைக் கெடுக்கும் குப்பைப் பொருட்களில்
சானிடைசர் குப்பிகளும் அதிகமாகச் சேரும்.
எனவே, கைகளைக் கழுவ அவசரத்துக்கு மட்டும் ஆல்கஹால் கலந்த கிருமிநாசினிகளைப்
பயன்படுத்தலாம். தேவையான நேரமும் தண்ணீர் வசதியும் உள்ளவர்கள் சோப்பு,
தண்ணீரைக் கொண்டு கைகளைக் கழுவுவதுதான் மிக நல்லது. கரோனாவைத் தடுக்க
உதவும் முக்கியப் போராளிகளில் சோப்புதான் முன்னிலையில் உள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...