பன்னிரண்டாம் வகுப்புகளுக்கு பழைய பாடத்திட்டமே தொடரும் தமிழக
பள்ளிக்கல்வித் துறையின் அறிவிப்புக்கு தமிழக ஆசிரியர் கூட்டணி-ஐபெட்டோ
அகில இந்திய அமைப்பின் சார்பில் பெரிதும் வரவேற்று பாராட்டுகிறோம்
11 மற்றும் 12ஆம் வகுப்புகளில் 4 பாடத்தொகுப்புகள் கொண்ட பழைய திட்டமே தொடரும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.
மாணவர்களின்
நலன் கருதி புதிய பாடத்திட்ட முறை ரத்து செய்யப்படுவதாக அரசாணை நிலை எண்
:57 நாள் 06.07.2020 ன்படி வெளியிடப்பட்டுள்ளது. பல்வேறு எதிர்க்கட்சிகள்,
கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், ஆசிரியர் சங்கங்கள் ஒருமித்த குரலில்
புதிய பாடத்திட்ட மாற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளை வலியுறுத்தி
வந்தார்கள். மேலும் கொரோனா வைரஸ் பாதிப்பால் நான்கு மாதகாலமாக பள்ளிக்கு
விடுமுறை விடப்பட்டுள்ளது. பள்ளிகள் திறக்கும் தேதியை அறுதியிட்டுக் கூற
முடியாத சூழ்நிலையில் மாணவர்கள் கல்வி நலன் பெரிதும் பாதிக்கப்படும் எனவும்
தமிழக அரசை வலியுறுத்தி வந்தார்கள்.
தமிழக
அரசும், பள்ளிக்கல்வித்துறையும் மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு
குழப்பமான அறிவிப்புகளுக்கு இடையே தெளிவான ஒரு முடிவினை எடுத்து பழைய
பாடத்திட்டமே தொடரும் என அரசாணை வெளியிட்டுள்ளமைக்கு தமிழக ஆசிரியர்
கூட்டணி மற்றும் ஐபெட்டோ அகில இந்திய அமைப்பின் சார்பில் பெரிதும்
பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
வருமுன்
காக்கும் அரசாக செயல்பட்டால் அனைவரின் பொது மதிப்பையும் பெற்று
விடமுடியும். கொரோனா கொடும் தாக்குதலில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும்
மாணவர்கள், பதினொன்றாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள் என சுமார் 18
லட்சம் மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு விடக் கூடாதே என்ற
நல்லெண்ணத்தில் தான் அனைத்து தரப்பினரும் பத்தாம் வகுப்பு தேர்வினை ரத்து
செய்யுங்கள் அல்லது கொரோனா பாதிப்பிற்கு பிறகு தேர்வினை நடத்திக்
கொள்ளுங்கள் எனவும் வலியுறுத்தினார்கள். தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறையின்
சார்பில் பிடிவாத உணர்வுடன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும்,
பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் தேர்வு மையங்களை நடத்துவதற்கான ஏற்பாடுகளை
செய்து தரவேண்டும் என கண்டிப்பான குறிப்பாணைகளை வழங்கி வந்தார்கள்.
மாணவர்களுக்காக சுமார் 45 லட்சம் முகக் கவசங்கள் தயாரிக்கப்பட்டு வந்தன.
ஒரு அறையில் 10 மாணவர்கள் மட்டுமே அமர்ந்து தேர்வு எழுத வேண்டும் என்ற
விதியின்படி அறைகளை ஒதுக்க சொன்னார்கள். பெற்றோர்கள், மாணவர்கள்,
ஆசிரியர்கள் மட்டுமன்றி ஒட்டுமொத்த கல்வித்துறை அலுவலர்களும் கொந்தளிப்பான
மனநிலைக்கு ஆளாக்கப்பட்டார்கள். நாளைய பொழுது நன்றாக விடியும் என்ற கவிஞர்
கண்ணதாசன் எழுதிய பாடல் வரிகள் போல் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள்
பத்தாம் வகுப்பு தேர்வினை ரத்து செய்து அனைவருக்கும் தேர்ச்சி (All pass)
அளிக்கப்படுவதாகவும், பதினொன்றாம் வகுப்பில் ஒரு பாடம் தேர்வு எழுதா
விட்டாலும் அனைவரும் தேர்ச்சி பெறுவார்கள் எனவும் அறிவித்தார்கள்.
எதிர்க்கட்சிகள் உட்பட அனைவரும் வரவேற்று பாராட்டினார்கள். காலங்கடந்து
எடுக்கப்பட்ட முடிவுக்கு முன்னர் ஏற்படுத்தப்பட்ட மன உளைச்சலை எண்ணிதான்
வருத்தப்படுவதாகவும் தெரிவித்திருந்தார்கள்.
பத்தாம்
வகுப்பு பிரச்சனை இன்னும் முடிந்த பாடில்லை. அனைவரும் தேர்ச்சி என்று
சொன்னதற்கு பிறகு பத்தாம் வகுப்பு முடித்தவர்களை பதினொன்றாம் வகுப்பில்
சேர்த்துக் கொள்ளுதல் வேண்டும். பதினொன்றாம் வகுப்பு முடித்தவர்களை
பன்னிரண்டாம் வகுப்பில் சேர்த்துக் கொள்ளுதல் வேண்டும் காலாண்டு, அரையாண்டு
தேர்வில் மதிப்பெண் குறைந்து எடுத்து இருந்தால் என்ன அல்லது ஒரு தேர்வு
எழுதாமல் இருந்தால் தான் என்ன அவரவர்கள் படித்த பள்ளியில் அவரவர்கள் மேல்
வகுப்பில் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும்.விடைத்தாள்களே இல்லை என்று சொல்லி
வருகின்ற விரல் விடக்கூடிய சில பள்ளிகளை எண்ணி நம்மால் பொறுத்துக் கொள்ள
முடியவில்லை. சில தனியார் பள்ளிகள் மாணவர்களை அழைத்து வந்து காலாண்டு,
அரையாண்டு தேர்வினை அந்த தேதியில் தேர்வு எழுதியது போல் நடத்தி இருப்பதை
எண்ணினால் மன்னிக்கவே முடியாத குற்றச் செயல்பாடாகும். காலாண்டு அரையாண்டுத்
தேர்வு எழுதாதவர்களுக்கு ஆப்சென்ட்தான். ஆனால் அவர்களின் வருகையை வைத்து
மேல் வகுப்பில் சேர்த்துக் கொள்ளலாம் என முடிவெடுப்பது சரியாக அமையும்
என்று எண்ணுகிறோம். பத்தாம் வகுப்பு பொதுக் கல்வித் தகுதியுடன்
தொழில்சார்ந்த படிப்பு, வேலைவாய்ப்புக்குச் செல்பவர்களுக்கு அவர்கள்
முன்னர் பெற்றுள்ள மதிப்பெண்கள் பயன்படட்டும். கொரோனா பாதிப்பால்
பன்னிரண்டாம் வகுப்பில் தேர்வு எழுதாத 36 ஆயிரம் மாணவர்களுக்கு தேர்வு
நடத்த முடியவில்லை. பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி முடிவு வெளியிடுவதில்
பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கின்றன. இவர்களை கணக்கில் எடுத்துக்கொண்டு
ஒட்டுமொத்த தேர்வு எழுதிய மாணவர்களின் முடிவினை அறிவிப்பதில் காலதாமதப்
படுத்துவதும் மனசாட்சி உடையவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.
தெளிவான ஒரு முடிவினை எடுத்து பள்ளிக் கல்வித்துறை அறிவித்திட வேண்டுமென
தேர்வு எழுதிய மாணவர்கள், பெற்றோர்கள் எதிர்பார்த்து காத்துக்
கொண்டிருக்கிறார்கள்.
*தமிழக ஆசிரியர் கூட்டணி,
ஐபெட்டோ அகில இந்திய அமைப்பின் சார்பாக வரவேற்க வேண்டியது வரவேற்றுப்
பாராட்டுவதும் சொல்லவேண்டிய கருத்தினை இனிய அணுகுமுறையுடன் தொடர்ந்து
வலியுறுத்தி வருவதையும் கொள்கையாக கொண்ட அமைப்பாகும் என்பதை தெரிவித்துக்
கொள்வதில் கடமைப்பட்டுள்ளோம்.*
*வருமுன் காக்கும் அரசினை இனிக் காண விழைகின்றோம்.*
*வா.அண்ணாமலை,
ஐபெட்டோ அகில இந்திய செயலாளர், AIFETO (ALL INDIA FEDERATION OF
ELEMENTARY TEACHERS ORGANISATIONS) அலைபேசி:9444212060, மின்னஞ்சல்:
annamalaiaifeto@gmail.com.*
*மா. நம்பிராஜ், மாநிலத்தலைவர்.*
*அ. வின்சென்ட் பால்ராஜ், பொதுச்செயலாளர்.*
*க. சந்திரசேகர், மாநிலப் பொருளாளர்.*
*தமிழக ஆசிரியர் கூட்டணி.*
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...