'கட்டணமில்லா இலவச சேர்க்கை திட்டத்தில், கல்லுாரிகளில் படிக்க விரும்பும் மாணவர்கள், நாளை முதல் விண்ணப்ப பதிவு செய்யலாம்' என, சென்னை பல்கலை அறிவித்துள்ளது.பல்கலையின் பதிவாளர், சீனிவாசன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள், இளநிலை பட்டப்படிப்பில் சேரும் வகையில், அவர்களுக்கு இலவச கல்வி திட்டத்தை, 2011 முதல், சென்னை பல்கலை நடைமுறைப்படுத்தி வருகிறது.
இந்த திட்டத்தின் கீழ், நடப்பு கல்வி ஆண்டில், மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள, சென்னை பல்கலையில் இணைப்பு பெற்ற சுயநிதி மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகளில், மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். மேற்கண்ட நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள், இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். சென்னை பல்கலையின், www.unom.ac.in என்ற இணையதளத்தில், நாளை முதல் ஆகஸ்ட், 7 வரை விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.
அனைத்து வகை சான்றிதழ்களின் நகலையும் பதிவேற்றம் செய்தால் மட்டுமே, விண்ணப்பங்கள் ஏற்கப்படும். ஆதரவற்ற மாணவர்கள், விவசாய கூலி வேலை செய்யும் பெற்றோரின் பிள்ளைகள், முதல் தலைமுறை பட்டதாரியாக உள்ள மாணவர்கள், விதவையர் மற்றும் கணவரால் கைவிடப்பட்ட பெண்களின் பிள்ளைகள் உள்ளிட்டோருக்கு முன்னுரிமை தரப்படும். விண்ணப்பிக்கும் மாணவரின் குடும்ப ஆண்டு வருமானம், 2 லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...