கடந்த கல்வி ஆண்டின், இறுதி பருவ தேர்வுகள், இன்னும் நடத்தப்படவில்லை.இந்நிலையில், புதிய கல்வி ஆண்டில், கல்லுாரிகளில் வகுப்புகளை துவங்குவது குறித்து, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ.,யும், பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி.,யும் புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன. அதன்படி, அனைத்து வகை இன்ஜினியரிங் கல்லுாரிகள், தொழில்நுட்ப மற்றும் மேலாண்மை கல்லுாரிகளில், முதலாம் ஆண்டு மாணவர்களை தவிர, மற்ற மாணவர்களுக்கு, ஆகஸ்ட, 16 முதல் வகுப்புகளை துவங்கலாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த வகுப்புகள், நேரடியாக கல்லுாரிகளில் நடத்தப்படுமா அல்லது ஆன்லைனில் நடத்தப்படுமா என்பது குறித்து, இன்னும் முடிவாகவில்லை. பிளஸ் 2 முடிக்கும் மாணவர்களுக்கு, இன்ஜினியரிங் படிப்பு சேர்க்கையை, ஆகஸ்ட், 1ல் துவக்கி, அம்மாதம், 30க்குள் முடிக்க வேண்டும் என, கூறப்பட்டுள்ளது.
இரண்டாவது சுற்று கவுன்சிலிங்கை, செப்., 10க்குள்ளும், மீதமுள்ள காலியிடங்களுக்கான இறுதி கவுன்சிலிங்கை, செப்., 15க்குள்ளும் முடிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு, செப்., 15ல் வகுப்புகளை துவங்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது. திறந்தநிலை மற்றும் தொலைநிலை கல்வியில், தொழில்நுட்ப படிப்புகளுக்கு, ஆக., 16 முதல், செப்., 15க்குள் மாணவர் சேர்க்கையை முடிக்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஏ.ஐ.சி.டி.இ., உத்தரவுப்படி, முதலாம் ஆண்டு வகுப்புகளை, செப்., 15ம் தேதியும், மற்ற மாணவர்களுக்கான வகுப்புகளை, ஆக., 16ல் துவங்குவது குறித்தும், தமிழக உயர் கல்வி துறை ஆலோசனை மேற்கொண்டுள்ளது.
அண்ணா பல்கலை, தமிழக தொழில்நுட்ப கல்வி துறை, உயர் கல்வி துறை ஆகியவற்றின் பிரதி நிதிகள் கூடி, இதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுஉள்ளது.
வகுப்புகளை, ஆன்லைனில் நடத்துவதா அல்லது கல்லுாரிகளில் சமூக இடைவெளியை பின்பற்றி, நேரில் மாணவர்களை வரவழைப்பதா என்பது குறித்து ஆராயப்பட்டு வருகிறது. இதில், மத்திய சுகாதாரத் துறை, உள்துறை மற்றும் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் ஆலோசனையை பெறவும் முடிவு செய்யப்பட்டு உள்ளதாக, உயர்கல்வி துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...