'கல்வி கட்டணம் தொடர்பாக, பெற்றோர் மற்றும் கல்வி நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பிரச்னையை கருத்தில் கொண்டு, தமிழக அரசு முடிவெடுக்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சங்கத்தின், மாநில பொதுச்செயலர், கே.பழனியப்பன் தாக்கல் செய்த மனு:கல்வி கட்டண நிர்ணய குழு அறிவித்த கட்டணத்தை, மாணவர்களிடம் இருந்து வசூலிக்க, தனியார் பள்ளிகள், கல்லுாரிகளுக்கு தடை விதித்து, 2020 ஏப்ரலில், வருவாய்மற்றும் பேரிடர் மேலாண்மை துறை உத்தரவிட்டுள்ளது.கட்டடங்கள் பராமரிப்புபள்ளி, கல்லுாரி கட்டடங்கள் பராமரிப்பு; ஆசிரியர்கள், ஊழியர்களுக்கான சம்பளம்; மின் கட்டணம்; தண்ணீர் கட்டணம்; சொத்து வரி ஆகியவற்றுக்கு, நிர்வாகங்கள் செலவுசெய்ய வேண்டியுள்ளது. இதை எல்லாம் கருத்தில் கொள்ளாமல்,உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் முடியும் வரை, ஆன்லைனில் வகுப்புகள் நடத்தவும், அரசு அனுமதி அளித்துள்ளது. பெற்றோரும், ஆன்லைன் வகுப்புகள் நடத்தும்படி, நிர்வாகத்தினரை வற்புறுத்துகின்றனர்.
பேரிடர் மேலாண்மைசட்டத்தின் கீழ், இருக்கும் அதிகாரங்களை பயன்படுத்தி, வருவாய் துறை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.இது, சட்டவிரோதமானது.பெரும்பாலான மாநிலங்களில், கல்வி கட்டணத்தை வசூலித்துக் கொள்ள, பள்ளி, கல்லுாரி நிர்வாகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.எனவே, கட்டண நிர்ணய குழு அறிவித்த கட்டணத்தை வசூலித்து கொள்ள,பள்ளி, கல்லுாரிகளுக்கு அனுமதி அளிக்கும்படி உத்தரவிட வேண்டும். அரசு பிறப்பித்த உத்தரவை, ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
தடை இல்லை
இதேபோல, மேலும் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.மனுக்கள், நீதிபதி ஆர்.மகாதேவன் முன், விசாரணைக்கு வந்தபோது, கட்டணம் வசூலிக்க தடை விதித்தால், ஆசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும், தனியார் பள்ளி, கல்லுாரி நிர்வாகங்கள் எப்படி சம்பளம் வழங்க முடியும் என, கேள்வி எழுப்பினார்.இதையடுத்து, மனுக்கள் மீண்டும் நீதிபதி மகாதேவன் முன், நேற்று விசாரணைக்கு வந்தன.
மனுதாரர்கள் சார்பில், மூத்த வழக்கறிஞர் விஜயன், வழக்கறிஞர் விஜய் ஆனந்த், அரசு தரப்பில், அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், அரசு பிளீடர் ஜெயப்பிரகாஷ் நாராயணன், கூடுதல் பிளீடர் விஜயகுமார் ஆஜராகினர்.கல்வி கட்டணம் செலுத்தும்படி, பெற்றோரை நிர்ப்பந்திக்கக் கூடாது என, கல்வி நிறுவனங்களுக்கு உத்தரவிட்டு உள்ளதாகவும், பெற்றோர் தாமாக முன்வந்து கட்டணம் செலுத்த தடை இல்லை என்றும், அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.கல்வி உரிமை சட்டத்தின் கீழ், ஏழை எளிய மாணவர்களுக்கான, 25 சதவீத இடங்களுக்கு, 248 கோடி ரூபாயை, தனியார் பள்ளிகளுக்கு அரசு வழங்கி உள்ளது. அந்த தொகையை பயன்படுத்தி, ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்கலாம் என்றும், அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, நீதிபதி ஆர்.மகாதேவன் பிறப்பித்த உத்தரவு: பெற்றோர் மற்றும் கல்வி நிறுவனங்கள் எதிர்கொள்ளும் நிதி நெருக்கடியை கருதி, தமிழக அரசுக்கு, விரிவான மனுவை,மனுதாரர்கள் இன்று அனுப்பி வைக்க வேண்டும்.
கல்வி கட்டண நிர்ணய குழு முடிவின் அடிப்படையில் இல்லாமல், பெற்றோர் மற்றும் கல்வி நிறுவனங்கள் அனுபவிக்கும் கஷ்டங்களின் அடிப்படையில், ஒரு திட்டத்தை அரசு வகுக்க வேண்டும்.மனுதாரர்கள், 'இ - மெயில்' வழியாக அனுப்பும் மனுவின் நகல், அட்வகேட் ஜெனரலுக்கும் அனுப்பப்பட வேண்டும்.அரசு பரிசீலித்து, ஒரு முடிவெடுக்க வேண்டும். அந்த முடிவு குறித்த அறிக்கையை, ஜூலை, 8ல், நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...