Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆசிரியரின் கனிவான, கண்டிப்பான பார்வையை Online Teaching தராது- பேரா ச.மாடசாமி

வகுப்பறைக்குத் தேவை மனித முகம்! - பேரா ச.மாடசாமி

( _இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான கட்டுரை, இன்றைய சூழலில் இன்னும் ஆழமாக கவனிக்கப்பட வேண்டி உள்ளது_ )

ஜுன் உற்சாக மாதம். தன் நண்பருக்கு எழுதிய கடிதம் ஒன்றில் (1857), ‘ஓ! ஜூன் மாதமே வருக!’ என்று உற்சாகக் குரல் எழுப்புகிறார் ஜென்னி மார்க்ஸ். 1848 ஜூனில் பாரிஸில் தொழிலாளர் போராட்டம் நடந்தது. 1849 ஜூனில் ஜெர்மனியில் புதிய அரசியல் சட்டத்துக்கான போராட்டம் நடந்தது. அதன் காரணமாய் ஜூன் மாதம் எழுச்சியின் அடையாளமானது. ஜென்னி மார்க்ஸின் உற்சாகத்துக்கு அதுதான் காரணம்.

நமக்கும் ஜூன் ஓர் உற்சாக மாதம்தான். ஜூனில்தான் இங்கு பள்ளிகள் திறக்கின்றன. புத்துணர்ச்சிக்கான மாதம். புதிய கனவுகளுக்கான மாதம். கேரளாவில் பள்ளி திறக்கும் நாளில், குழந்தைகளை வரவேற்கும் இசைப்பாடல் (பிரவேசனா உத்சவ கானம்) பள்ளிகளில் ஒலிக்கும். அந்தப் பாடலின் முதலடிகள் இவை: “வாகை மரங்கள் பூத்த வசந்த காலம், பள்ளிக்கூடக் காலம்! வண்ணத்துப்பூச்சிகள் தோப்பு நிறையப் பறக்கும், பட்டுப்பூச்சிக் காலம்!”

மலர்ந்திருக்கும் பாடநூல்கள்

நம்மிடம் பாட்டு இல்லை. நாம் ஜூனைக் கொண்டாடி வரவேற்க புதிய பாடநூல்கள் வந்திருக்கின்றன. வந்திருக்கின்றன என்று சொல்வது பொருந்தாது. அவை மலர்ந்திருக்கின்றன. ஓராண்டாகத் திட்டமிட்டு, மீண்டும் மீண்டும் கூடி, பக்கம் பக்கமாகப் பார்த்து, மாணவர்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட பாடநூல்கள் இவை. இந்தியாவில் இது முன்மாதிரியான முயற்சி. பாடநூல்களில் மாற்றங்களைக் கொண்டுவருவது அவ்வளவு சுலபமில்லை. பாடநூல்களில் நூற்றாண்டு காலமாய்ப் படிந்து கிடக்கும் மனோபாவங்களைத் தாண்டாமல் இது சாத்தியமுமில்லை. குழந்தைகள் உலகில் தலையிடத் துருதுருக்கும் பெரியவர்கள் கைகளைக் கட்டுப்படுத்துவது கடினம். குழந்தைகளுக்காகச் சொல்லப்படும், எழுதப்படும் கதைகளிலேயே பெரியவர்களின் வார்த்தைகளும் விருப்பங்களும் நிறைந்து கிடக்கின்றன. பாடநூல்கள் தப்பிப்பது எப்படி?

1939-ல் - ஏறக்குறைய 80 ஆண்டுகளுக்கு முன் - தமிழறிஞர் வையாபுரிப் பிள்ளை “சிறுவர்களுக்காக எழுதப்படும் பாடநூல்களில் கடினமான சொற்களும் சிறுவர்களின் அறிவுக்கு மேம்பட்ட விசயங்களுமே” இடம்பெறுவதாக வருத்தத்துடன் குறிப்பிடுகிறார். பிள்ளைகள் வீட்டிலும் வீதியிலும் பேசும் மொழியோடு சம்பந்தமற்று விலகியிருந்தது பாடப்புத்தக மொழி. பயிற்சிகளில் கற்பனை வறட்சி. அர்த்தமற்ற மூடநம்பிக்கைக் கதைகளுக்கும் பஞ்சமில்லை. மாற்றத்துக்காக ஏங்கினோம். எளிமையான மொழியில் உரையாடல்களைத் தூண்டும் விதத்தில் பாடநூல்கள் வர வேண்டும் என விரும்பினோம். மிக முக்கியமாகப் பகைமை உணர்வைத் தூண்டாத - வேறுபாடுகளைப் புரிந்து ஏற்கக் கூடிய ஒரு மனித முகம் பாடப்புத்தகங்களுக்கு வேண்டும் என ஆசைப்பட்டோம்.

விரும்பிய மாற்றம் இன்று சாத்தியமாகி இருக்கிறது. கதை, பாட்டு, விளையாட்டு, ஓவியங்களுடன் தமிழ் எழுத்துக்களும் சொற்களும் உயிர் பெற்று கண்முன் எழுந்து வருவதை முதல் வகுப்பு தமிழ் பாடநூலில் பார்க்கிறேன். உயர்நிலைப் பாட வகுப்புகளில் பழம்பெருமை மிக்க பெரிய புராணமும் இருக்கிறது. ‘கிழவனும் கடலும்’ போன்ற உலகப் புகழ்பெற்ற ஆங்கிலக் கதையின் தமிழ் வடிவமும் இருக்கிறது. இந்தப் பாலம் பாரதியார் கண்ட கனவு. அருமையான பாடப்புத்தகம். ஆனால், வகுப்பறையை மலரவைக்க இது போதுமா?

எது தேவை?

தொடுதிரை, கணினி என இன்று வகுப்பறைக்குப் புதுப்புதுத் தேவைகள் வந்திருக்கின்றன. அது நல்லதுதான். நவீன தொழில்நுட்பம் இருப்பது வணிகர்கள் லாபம் குவிக்க மட்டுமல்ல, வகுப்பறைக்கும் அது தேவைதான். ஆனால், தொடுதிரைகள் அறிமுகமாவதும், அவைப் பிள்ளைகளைப் பிரமிக்க வைப்பதும் மட்டும் தொழில்நுட்பத்தின் வெற்றியல்ல. அவை குழந்தைகளுக்குள் மின்னி மிதந்துகொண்டிருக்கும் பனிக்கட்டிகளை வெளிக்கொண்டுவருவதில்தான் வெற்றி இருக்கிறது.

“உலகில் லட்சக்கணக்கில் பேனாக்கள் இருக்கின்றன. ஒவ்வொரு பேனாவுக்குள்ளும் லட்சக்கணக்கில் உலகங்கள் ஒளிந்திருக்கின்றன. அவற்றை எல்லாம் வகுப்பறை வெளிக்கொண்டுவந்துவிட்டதா?” என்ற கேள்வியை கிறிஸ்டோபர் மையர்ஸ் எழுதிய ‘என் பேனா’ என்ற குழந்தைக் கதை எழுப்புகிறது.

சற்று ஒழுங்கற்று இருக்கும் கையெழுத்தைப் பார்த்ததுமே முகம் சுளிக்கிற ஒரு வகுப்பறை எப்படி ஒவ்வொரு பேனாவுக்குள்ளிருந்தும் உலகங்களைக் கொண்டுவர முடியும்? குழந்தைகள் பலரின் பேனாக்களுக்குள் உலகங்கள் உறைந்து கிடக்கின்றன.

கிறிஸ்டோபர் மையர் சொல்வதுபோல், ‘ஒரு மழைத்துளிபோல் எளிமையானதுதான் பேனா. ஆனால், பேனாவின் பார்வை ஊடுருவும் எக்ஸ்ரே பார்வை’. தொடுதிரைக்கு ஆசைப்படும் வகுப்பறைகள், பேனாக்களையும் பேனா பிடிக்கும்

விரல்களையும் எவ்வளவு வளர்த்திருக்கின்றன என்பது கேள்விக்குறிதான். குழந்தைகளின் உலகங்கள் உயிர்பெற, தொழில்நுட்பம் மட்டும் போதாது. பாடப்புத்தகம் மட்டும் போதாது. உள்ளமும் உணர்வும் கனிந்த ஒரு வகுப்பறை வேண்டும்.

பள்ளி திறக்கிறது. பயணம் தொடர்கிறது. பயணங்களில் கடினமான பயணம் எது? சுளித்த முகங்களை, எரிச்சலுற்ற வார்த்தைகளை, குற்றம் கண்டுபிடிக்கும் கண்களைத் தினசரி கடந்துபோகும் பயணம்தான். தடுமாறி நடக்கும் பிள்ளைகளுக்கு அது கடினமான பயணம்.

தடுமாறும் பிள்ளைகளோடு கைகோத்துக்கொண்டு, அவர்கள் வேகத்தில் ஆசிரியர்கள் நடந்துபோனால் பயணமும் தித்திக்கும். ஒவ்வொரு குழந்தைக்குள்ளும் உறைந்து கிடக்கும் உலகங்களும் உயிர் பெற்றுவரும். அதற்குத் தேவை, வகுப்பறைக்கு ஒரு மனித முகம்!

நன்றி - தி இந்து - ஜூன் 5, 2018




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive