MBBS-ல் மத்திய ஒதுக்கீட்டில் OBC பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு கோரிய வழக்கில் 2 வாரத்தில் பதிலளிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இளநிலை மருத்துவ படிப்பிற்கு நீட் தேர்வு இருப்பது போலவே முதுநிலை மருத்துவ படிப்பிலும் நீட் தேர்வு உள்ளது. நீட் இடஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு போதிய இடங்கள் கிடைப்பது இல்லை. அங்கு இடஒதுக்கீடு பின்பற்றப்படுவதும் இல்லை. இதுவரை பல ஆயிரம் இடங்களை இப்படி பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் இழந்துள்ளனர். இந்த நிலையில் முதுநிலை மருத்துவ படிப்பிற்கான இடங்களில் இடஒதுக்கீடு சரியாக பின்பற்றப்படவில்லை. மருத்துவ படிப்பில் பல்வேறு குளறுபடிகள் நடப்பதாக தொடர்ந்து சர்ச்சை எழுந்து வருகிறது.
இதற்கிடையே, முதுநிலை மருத்துவ படிப்பில் 50 சதவிகிதம் இடஒதுக்கீடு தருமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி அதிமுக, திமுக, காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனுக்களை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், இடஒதுக்கீடு அடிப்படை உரிமையின்கீழ் வராது. இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிடாது. மாநில அரசின் கொள்கை என்ற அடிப்படையில் தமிழகம் தொடர்பான இடஒதுக்கீட்டுக்கு சென்னை உயர்நீதிமன்றத்தை அணுக வலியுறுத்தி மனுவை திரும்ப பெறுமாறு தமிழக அரசியல் கட்சிகளுக்கு உத்தரவிட்டது.
இதனை தொடர்ந்து, MBBS-ல் மத்திய ஒதுக்கீட்டில் OBC பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு கோரி திமுக, மதிமுக, அதிமுக, பாமக உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுகள் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த மனுக்கள் உயர்நீதிமன்ற நீதிபதி சுப்பையா அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 50 % இடஒதுக்கீடு வழங்கும் வரை கலந்தாய்வு நடத்த கூடாது என்று அதிமுக சார்பில் வாதிடப்பட்டது. இதனையடுத்து, இட ஒதுக்கீடு தொடர்பாக மத்திய அரசின் விளக்கத்தை கேட்பது அவசியம் எனக்ககூறிய நீதிபதி, இடஒதுக்கீடு தொடர்பாக 2 வாரத்தில் விளக்கமளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டார்.
ஆனால், மத்திய அரசு பதிலளிக்க 2 வார அவகாசம் வேண்டாம்; குறுகிய கால அவகாசம் வழங்குக. இந்த வாரத்திற்குள் அடுத்த விசாரணை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று திமுக தரப்பில் வாதிடப்பட்டது. இருப்பினும், பாதிக்கப்பட்ட மாணவர்கள் யாரும் வழக்கு தொடரவில்லை என மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டது. தொடர்ந்து, மருத்துவ படிப்பில் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களை எதிர்மனுதாரர்களாக சேர்க்க உத்தரவிட்டு, திமுக கோரிக்கையை ஏற்று வழக்கின் விசாரணையை திங்கட்கிழமைக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...