Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஊர்ப் பெயர்கள் நமது நிலத்தின் அடையாளங்கள்!

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறையின் ஏப்ரல் 1, 2020 நாளிட்ட அரசாணை நிலை எண் 36-இன் மூலம் தமிழ்நாட்டிலுள்ள ஊர்ப்பெயர்களை தமிழ் உச்சரிப்பைப் போன்றே ஆங்கிலத்திலும் அமைத்து செயல்படுத்துதல் பற்றிய அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 
 
இது மிகுந்த மகிழ்ச்சிகரமானதும் வரவேற்கத் தகுந்ததும் ஆகும். கொரோனா நச்சுயிரின் பேரிடர் காரணமாக ஊரடங்கால் மக்கள் பெரும் அவதியுற்றுவரும் இவ்வேளையில் இத்தகைய ஊர்ப்பெயர் திருத்தம் சமூக ஊடகங்களில் பரவலாகக் கிண்டலுக்கு உள்ளாகியிருக்கிறது. இருந்தபோதிலும் இந்த திருத்தங்களை ஏற்காமல் போவதோ சரியான விவாதத்திற்கு உட்படுத்தாமல் இருப்பதோ தமிழ்மொழிக்கு நல்லதல்ல.
 
திராவிடக் கட்சிகளின் ஆட்சி அமைந்து ஐம்பதாண்டுகாலம் கடந்துவிட்ட நிலையில் ஊர்ப் பெயர்களை ஆங்கிலத்தில் இவ்வளவுகாலம் தவறான உச்சரிப்பிலேயே எழுதி அந்தத் தவறான உச்சரிப்பையே சரியானது என்று ஏற்றுக்கொண்டு பழகிவிட்ட மனநிலையை நாம் பலரிடம் பார்க்க முடியும். அத்தகைய ஆங்கில எழுத்தில் அமைந்த தவறான உச்சரிப்பிலேயே ஊர்ப்பெயர்களை விளிப்பதைப் பெருமிதமாக நினைக்கும்படியான ஒரு தலைமுறையே வளர்ந்துவிட்டதை நாம் இன்று வருத்தத்துடன் கவனித்துக் கொண்டிருக்கிறோம்.

இந்நிலையில் “திருவல்லிக்கேணி என்பதை ட்ரிப்ளிக்கேன் எனக் குறிப்பிடாமல் திருவல்லிக்கேணி என்றே அமையவும் இதுபோன்ற எண்ணற்ற ஊர்களின் பெயர்கள் தமிழ் உச்சரிப்பைப் போன்றே ஆங்கிலத்திலும் அமைய உயர்நிலைக் குழு அமைத்து திருத்தியமைக்கப்படும்” என்று கடந்த 2018-2019-ஆம் ஆண்டிற்கான தமிழ் வளர்ச்சித் துறைக்கான மானியக் கோரிக்கையில் அமைச்சரால் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

தற்போதுள்ள ஊர்ப்பெயரின் ஆங்கில எழுத்துக் கூட்டலுக்கு மாவட்ட வாரியாக அந்தந்த மாவட்ட ஆட்சியர் தலைமையிலான உயர்நிலைக்குழுக்கள் திருத்தப்பட வேண்டிய ஆங்கில எழுத்துக்கூட்டலைப் பரிந்துரை செய்துள்ளன. அதனைத் தொடர்ந்து தமிழ் ஒலி வடிவங்களுக்கு ஏற்ப மாற்றப்பட வேண்டிய ஊர்ப்பெயரின் ஆங்கில எழுத்துக்கூட்டலை அமைச்சரின் தலைமையிலான ஆலோசனைக் குழு பரிந்துரை செய்துள்ளது. மாவட்ட ஆட்சியர்களால் பரிந்துரை செய்யப்பட்ட பல பெயர்கள் அப்படியே ஆலோசனைக் குழுவால் ஏற்கப்பட்டுள்ளன. சிலவற்றுக்கு ஆலோசனைக் குழு திருத்தங்களை அளித்து முதல் கட்டமாக 1018 ஊர்ப்பெயர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு உறுதிப்படுத்தப்பட்ட பெயர்களின் ஆங்கில எழுத்துக்கூட்டல் சில பெயர்களுக்கு அதன் தமிழ் ஒலிப்பு வடிவத்தின் சரியான உச்சரிப்பில் அமையவில்லை. சில பெயர்களின் ஒரே மாதிரியான ஒலிப்பு மாவட்டத்திற்கு மாவட்டம் ஆங்கில எழுத்தில் மாறிமாறி வந்துள்ளன. சேலம், தஞ்சாவூர் போன்ற முக்கியமான சில ஊர்ப்பெயர்களின் திருத்தமான ஆங்கில எழுத்துக்கூட்டல் வடிவங்கள் வெளியிடப்படவே இல்லை. ஏதோ ஒரு பணிமனையில் குழுப் பணி (GROUP ASSIGNMENT) கொடுத்து அதையே அரசாணையாக வெளியிட்டதைப் போன்று உள்ளது.

அறிவிக்கையில் உள்ள 1018 பெயர்களில் நூற்றுக்கு மேற்பட்ட பெயர்களில் இருந்த சிறப்பு ‘ழ’கர ஒலியானது ஆங்கில எழுத்துக்கூட்டலில் ‘LA’ என்றிருந்தவை ‘ZHA’ என்றவாறு மாற்றியமைக்கப்பட்டிருப்பதும், பெரும்பாலான ஊர்ப்பெயர்களில் வரும் ‘ஊ’கார ஒலிக்கு இதுவரை பயன்படுத்தப்பட்டு வந்த ‘UR’ என்பதற்கு மாற்றாக ‘OOR’ என்ற ஆங்கில ஒலி பயன்படுத்தப்பட்டுள்ளதும் சிறப்பானது. மேலும் ட்ரிப்ளிகேன், பூனமல்லி, டூட்டிகொரின், கொய்ம்பட்டூர் என்ற ஒலிக்கூட்டில் இருந்த திருவல்லிக்கேணி, பூவிருந்தவல்லி, தூத்துக்குடி, கோயம்புத்தூர் போன்ற ஊர்ப்பெயர்கள் அதனதன் தமிழ் ஒலிக்கூட்டிலேயே ஆங்கிலத்திலும் அமைக்கப்பட்டிருப்பதும் வரவேற்கத் தகுந்ததே.

என்றாலும் மொத்தமுள்ள 38 மாவட்டங்களில் 25 மாவட்டங்களில் மட்டுமே அதுவும் மிகவும் மேம்போக்கான வகையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக திருத்தப்பட்டு தொகுக்கப்பட்டுள்ளன. இவற்றில் சென்னை, திருச்சி போன்ற ஒருசில மாவட்டங்களில் மட்டுமே ஓரளவு பரவலான ஊர்ப்பெயர்கள் திருத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. மேலும் 13 மாவட்டங்களில் ஒரே ஊர்ப்பெயர் கூட திருத்தப்படவில்லை.

மாவட்டத் தலைநகரங்களின் பெயர்களை மட்டும் எடுத்துக்கொண்டால், கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், நாகப்பட்டினம், நாமக்கல், பெரம்பலூர், சேலம், தென்காசி, தஞ்சாவூர், தேனி, திருவள்ளுர், திருநெல்வேலி, திருப்பூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, உதகமண்டலம், மயிலாடுதுறை போன்ற ஊர்ப்பெயர்கள் முறையே KADALOOR, KALLAKKURICHCHI, KAANJIPURAM, NAAGAPPATTINAM, NAAMAKKAL, PERAMBALOOR, SAELAM, THENKAASI, THANJAAVOOR, THAENI, THIRUVALLOOR, THIRUNELVAELI, THIRUPPOOR, THIRUPPATHTHOOR, THIRUVANNAAMALAI, UDHAGAMANDALAM, MAYILAADUTHURAI என்றவாறு ஆங்கில எழுத்துக்கூட்டலில் தமிழின் ஒலிப்பு மாறாமல் திருத்தியமைக்கப்பட வேண்டும். இப்பெயர்கள் எவையும் அறிவிக்கையில் காணக்கிடைக்கவில்லை.

திருத்தப்பட்ட பெயர்களிலும் பல குழப்பங்களும் முன்பின் முரண்களும் நிலவுகின்றன. அறிவிக்கையில் ஊர் என முடியும் பல பெயர்கள் திருத்தப்பட்டிருக்கையில் திருவில்லிபுத்தூர் THIRUVILLIPUTHTHOOR என்றில்லாமல் THIRUVILLIPUTHTHUR என்றும், வேதாரண்யம் VAEDHAARANYAM என்றில்லாமல் VETHARANYAM என்றும், வேலூர் VAELOOR என்றில்லாமல் VEELOOR என்றும் உள்ளதையும் குறிப்பிட்டு சமூக வளைதளங்களில் பலரும் பகடி செய்வதைக் காண முடிகிறது.

எகரத்தின் குறில் நெடில்களான ‘எ’, ‘ஏ’ ஆகிய இரண்டு ஒலிகளுக்கும் ஆங்கிலத்தில் ‘E’ என்பதே பல இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன. வேலூரில் வரும் ஏகார ஒலிக்கு ‘EE’ என்ற ஆங்கில எழுத்துக்கூட்டு பயன்படுத்தப்பட்டிருப்பதால் வேலூர், வீலூர் என்று படிக்கத்தக்க வகையில் அமைந்துள்ளது. மாறாக எகர ஒலிக்கு ‘E’ வும், ஏகார ஒலிக்கு ‘AE’ வும் அமையும்படி அனைத்து ஊர்ப்பெயர்களிலும் பயன்படுத்துவதே சரியாக இருக்கும். TRIPLICANE என்பது THIRUVALLIKKENI என்று மாற்றப்பட்டுள்ளது கூட சரியாகப் படித்தால் திருவல்லிக்கெணி என்றே படிக்கப்படும். திருவல்லிக்கேணி என்று படிக்கப்பட வேண்டுமானால் THIRUVALLIKKAENI என்றே ஆங்கில எழுத்துக்கூட்டு அமைக்கப்பட வேண்டும். ஈரோடு என்பதற்கு ‘ERODU’ என்பதை ஏற்றால் ‘எரோடு’ என்றே படிக்க வேண்டி வரும். மாறாக ‘EERODU’ என்ற எழுத்துக்கூட்டே ஈரோடு என்று படிக்கச் சரியாக இருக்கும்.

பேட்டை என்று முடியும் பல ஊர்ப்பெயர்கள் ஆங்கிலத்தில் ‘PET’ என்று எழுதப்பட்டு வந்தன. இவை அனைத்தும் ‘PETTAI’ என்று மாற்றப்பட்டுள்ளன. இந்த எழுத்துக்கூட்டு ‘பெட்டை’ என்றே படிக்கத்தகும். இவையனைத்தையும் ‘PAETTAI’ என்று திருத்தப்பட வேண்டும். ராணிப்பேட்டை என்பது ‘RANIPETTAI’ என்று ஏற்கப்பட்டுள்ளது. இது ரணிப்பெட்டை என்றே படிக்கப்படும். ஆகவே ‘RAANIPPAETTAI’ என்று திருத்தப்பட வேண்டும்.

இவைபோன்ற பல குழப்பங்கள் கிராமப்பெயர்களில் கணக்கில்லாமல் உள்ளன. சேலம் மாவட்டத்தின் கிராமப்பெயர்களில் பட்டி என்று முடியும் பெயர்களுக்கு ‘PATTY’ என்றும், கரூர், திருச்சி மாவட்டங்களின் பெயர்களுக்கு ‘PATTI’ என்றும் உள்ளன. இரண்டுமே சரியென்றாலும் பட்டி என முடியும் அனைத்து ஊர்ப்பெயர்களுக்கும் ஒரேமாதிரியான ஆங்கில எழுத்துக் கூட்டு அமைத்து எழுதுவதே குழப்பத்தைத் தவிர்ப்பதற்கான வழி.

இதேபோல ஒகர, ஓகார ஒலி வேறுபாட்டிற்கு முறையே ‘O’, ‘OA’ என்ற ஆங்கில எழுத்துக்கூட்டு சரியாக இருக்கும். கோயம்புத்தூர் ‘KOYAMPUTHTHOOR’ என்று திருத்தப்பட்டுள்ளதை ‘கொயம்புத்தூர்’ என்றே படிக்க வேண்டும். மாறாக ‘KOAYAMPUTHTHOOR’ என்பதே கோயம்புத்தூர் என்று சரியாக படிப்பதற்கான ஆங்கில எழுத்துக்கூட்டு ஆகும். நாகர்கோவில் NAGERKOVIL என்று ஏற்கப்பட்டுள்ளது. இது NAAGARKOAVIL என்று மாற்றியமைக்கப்பட வேண்டும்.

தட்டு, தாவரம் போன்ற சொற்களில் வரும் ‘த’கர ஒலிக்கு ‘THA’ என்பதையும், தண்டனை, பந்து போன்ற சொற்களில் வரும் ‘த’கர ஒலிக்கு ‘DHA’ என்பதையும் பயன்படுத்துவது போல ஊர்ப்பெயர்களிலும் மதுரைக்கு ‘MADHURAI’ என்றும் தருமபுரிக்கு ‘DHARUMAPURI’ என்றும் எழுத்துக்கூட்டுவதே சரியாக இருக்கும்.

காலணி என்று முடியும் பல பெயர்கள் குடியிருப்பு என்றே ஆங்கிலத்திலும் மாற்றப்பட்டிருப்பதைப் போலவே FIRKA-வையும் ‘KURUVATTAM’ குறுவட்டம் என்றே மாற்றியிருக்கலாம். கிருட்டினகிரி என்று வடமொழிக் கலப்பு தமிழ்ப்படுத்தியிருப்பதை ஏற்பதைப் போலவே பல ஊர்ப்பெயர்களின் வடமொழிக்கலப்பு மாற்றுவது குறித்தும் சிந்திக்க வேண்டும்.

இதற்கெல்லாம் மேலாக வடநாட்டவர்கள் நமது மாநிலத்தின் பெயரை ‘டமில்நடு’ என்று படிக்கும் கொடுமையிலிருந்து மீட்கும்படியாக நமது மாநிலத்தின் சரியான ஆங்கில எழுத்துக்கூட்டை ‘THAMIZH NAADU’ என்றவாறு திருத்தம் செய்ய வேண்டும். மேற்கொள்ளப்படும் அனைத்து திருத்தங்களும் அரசிதழில் வெளியிட்டு அனைத்து அரசு மற்றும் தனியார் துறைகளிலும் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இந்த மாற்றங்கள் அனைத்தும் ‘GOOGLE MAP’-இலும் பிரதிபலிக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

முதல் கட்டமாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் திருத்தப்பட வேண்டிய சில பெயர்கள் இங்கு குறிப்பிடப்பட்டிருந்தாலும் இந்த அறிவிக்கையிலேயே இன்னும் பல பெயர்கள் இவ்வாறு கூராய்வு செய்யப்பட வேண்டிய தேவை உள்ளதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இனி அடுத்தகட்டமாக வெளியிடவுள்ள அரசாணைகளிலும் இவற்றை ஆக்கப்பூர்வமாகக் கையாண்டு, ஊர்ப்பெயர்கள் என்பவை நமது நிலத்தின் மொழியின் பண்பாட்டின் அடையாளங்கள் என்பதை உணர்ந்து, வரலாற்றறிஞர்கள் மற்றும் தமிழறிஞர்களின் துணைகொண்டு விரிவான முறையில் கள ஆய்வு செய்து தேவையான சரியான திருத்தங்களை மேற்கொள்ள அரசு முன்வர வேண்டும்.

-மாணிக்க முனிராஜ்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive