சாலையில் ஸ்பீட் பிரேக் போடுவதைப் போலவே, கரோனா தொற்றுப் பரவலை ஒழிக்க
சென்னையில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் எடப்பாடி
கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியில் கரோனா மையத்தை நேரில்
ஆய்வு செய்த முதல்வர் பழனிசாமி, பிறகு செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறியதாவது, நாட்டிலேயே தமிழகத்தில்தான் 83 கரோனா பரிசோதனைக்
கூடங்கள் உள்ளன. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகளவில் கரோனா பரிசோதனை
மேற்கொள்ளப்படுகிறது.
கரோனாவை ஒழிக்க அமல்படுத்தப்பட்டிருக்கும் பொதுமுடக்கத்துக்கு, பொதுமக்கள் ஒத்துழைப்பு மிக மிக அவசியம்.
சென்னையில் ஏன் மீண்டும் முழு முடக்கம் என்று சில எதிர்க்கட்சிகள் கேள்வி
எழுப்புகிறார்கள். கரோனா பரவலைத் தடுக்கவே முழு முடக்கம்
அமல்படுத்தப்பட்டுள்ளது. கரோனா பரவலைத் தடுக்கும் முயற்சிக்கு அனைத்துக்
கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கவே முழு பொது முடக்கமே தவிர, மக்களை
சிரமத்துக்கு உள்ளாக்க அல்ல. மருத்துவ வல்லுநர்கள் கூறும் வழிமுறைகளை அரசு
கடைப்பிடித்து வருகிறது.
கரோனாவால் பாதிக்கப்படுபவர்களில் 80 சதவீதம் பேருக்கு அறிகுறிகள் ஏதும்
தெரிவதில்லை. 20 சதவீதம் பேருக்கு மட்டுமே அறிகுறி தெறிகிறது. அதிலும் 7
சதவீதம் பேருக்குத்தான் தீவிர சிகிச்சை தேவைப்படுகிறது என்று முதல்வர்
தெரிவித்துள்ளார்.
கரோனா தொற்று எப்போது ஒழியும் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, "கடவுளுக்குத்தான் தெரியும்" என்று முதல்வர் பதிலளித்தார்.
ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா? என்று செய்தியாளர்கள் கேள்வி
எழுப்பியதற்கு, ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்து இதுவரை முடிவு
செய்யவில்லை என்று பதில் அளித்துள்ளார்.
அமைச்சர் அன்பழகனுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதா என்ற கேள்விக்கு,
"இல்லை, தனக்கு கரோனா பாதிப்பு ஏற்படவில்லை என்று அமைச்சர் அன்பழகனே
மறுத்துள்ளார்" என்றும் முதல்வர் விளக்கம் அளித்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...