திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழக அனைத்து ஆண்டு பருவ தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று சென்னையிலும், சில மாவட்டங்களிலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நோய் தொற்று வல்லுநர்கள், நோய் தொற்று குறுகிய காலத்தில் குறைய வாய்ப்பில்லை என கருத்து தெரிவித்துள்ளனர். இதனால், கொரோனாவை கட்டுப்படுத்த வரும் 30-ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு கடந்த 19-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் மூடக்கப்பட்டுள்ளன.
இதனால், முதலில் 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது. இருப்பினும், கொரோனா தாக்கம் குறையாத காரணத்தினாலும், பெற்றோர்களின் கோரிக்கையையும், நோய் தொற்றின் தற்போதைய போக்கையும் கருத்தில் கொண்டு, மாணவர்களை நோய் தொற்றிலிருந்து காக்க, நடைபெறவிருந்த 10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகளும், 11-ம் வகுப்புக்கான விடுபட்ட பாடங்களுக்கான தேர்வுகளும் முழுமையாக ரத்து செய்யப்பட்டது.
இதற்கிடையே, முதுகலை இறுதியாண்டு மாணவா்களுக்கு ஜூலை 1-ம் தேதி முதல் ஆன்லைன் தேர்வுகள் நடத்தப்படும் என திருவாரூா் மத்தியப் பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது. புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகம், ஹைதராபாத் மத்தியப் பல்கலைக்கழகம் போன்ற பல்வேறு நிலையங்கள் தோ்வு நடத்தாமல் அக மதிப்பீடு மதிப்பெண் போன்ற காரணிகளைக் கொண்டு மாணவர்களின் இறுதித் தோ்வு மதிப்பை வெளியிடுவதாகக் கூறப்படுகிறது. எனவே, ஆன்லைன் தேர்வை ரத்து செய்துவிட்டு மற்ற பல்கலைக்கழகங்களைப் போல அக மதிப்பீடு உள்ளிட்ட காரணிகளைக் கொண்டு தோ்வு மதிப்பெண்ணை வெளியிட வேண்டும் என மாணவா்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில், திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழக அனைத்து ஆண்டு பருவ தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதலாம் ஆண்டு, 2-ம் ஆண்டு மாணவர்களின் பருவத் தேர்வும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இறுதியாண்டு மாணவர்களுக்கு முந்தைய பருவ தேர்வு முடிவுகளின் அடிப்படையில் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...