பசியைக் கட்டுப் படுத்தும் பல
உணவுப் பொருட்கள், வீட்டின் சமையலறையிலேயே இருக்கும். ஆனால் நமக்கு அது
தெரிவதில்லை. வற்றல் குழம்பு, உருளைக்கிழங்குப் பொரியல், எண்ணெய்யில் பொரித்து
எடுக்கப்படும் அப்பளம், முருங்கைக்காயும், சின்ன வெங்காயமும் போட்டுத்
தயாரிக்கப்படும் சாம்பாரின் நறுமணம், மைசூர் ரஸம் போன்றநம்மை நேரடியாகச்
சமையலறைக்கு அழைத்துக் கொண்டு போய், ருசிக்கச் செய்யும் சில உணவு வகைகளால்,
பசியானது மேலும் கூடுகிறது.
இவை அனைத்தும் அத்தனை ருசியாக, விடுதியில் கிடைக்குமா
என்பது சந்தேகமே. வீட்டிலுள்ள வயதானவர்களுக்கே ருசி பார்க்கத் தூண்டும் உணவுவகைகளான
இவற்றுக்கு முன்னால், உங்களைப் போன்ற இளைஞர்களின் நிலையைக் கூறவும்
வேண்டுமா?உங்களுடைய அகோரப் பசியை அடக்கநீங்கள் கீழ்க்காணும் சிலவற்றை முயற்சித்துப்
பார்க்கலாம்: காய்ந்த (உலர்) திராட்சையை நெய்யில் பொரித்துச் சாப்பிடப் பசி
அடங்கும்.
பட்டினியால் ஏற்படும் வயிற்றுக் கொதிப்பு அடங்கும். கபம் இறுகி வறண்டு
வரும். இருமல் குணமாகும். பன்னீரில் ஊற வைத்துப் பிழிந்து வடிகட்டிச்
சாப்பிட,பசியின் தீவிரத்தால் ஏற்படும்இதயப் படபடப்பு, அதிக இதயத்துடிப்பு ஆகியவை
குணமாகும். சிலருக்கு பலவீனத்தால் இது போன்ற நிலை ஏற்பட்டால், அவர்களும் இதைச்
சாப்பிடலாம்.
இனிப்பும், குளிர்ச்சியும் நிறைந்த தேங்காயைத் துருவி, தண்ணீர்விட்டு
மிக்ஸியில் அரைத்துப் பிழிந்து, அந்த தேங்காய்ப் பாலைக் குளிர்ச்சியாகக் குடிக்க,
பசியின் தீவிரமானது அடங்கி ஜீரணிக்கத் தாமதமாகும்.
தொண்டை, மேலண்ணம், நாக்கு,
கன்னத்தின் உள்சதை இவற்றில் ஏற்படுகிற எரிச்சல் ஆகியவற்றுக்கு இதன் பாலை
வாயிலிட்டுக் கொப்பளிக்கலாம். இந்தப் பாலுடன் கசகசா சேர்த்து அரைத்துப் பாயசம்
செய்து சாப்பிடலாம். புஷ்டி வீர்யம் தரும். நெல்லிக்காயைச் சாறு பிழிந்து
சர்க்கரையோ கற்கண்டோ சேர்த்து பாகாக்கி மைசூர்பாகு போல் வில்லைகளாக்கி வெட்டி
வைத்திருந்து சாப்பிட, வயிற்றுக் கொதிப்பு, படபடப்பு, தலையிலும் மார்பிலும்
வலியுடன் எரிச்சல், பலக்குறைவு இவை நீங்கும்.
இனிப்பும் குளிர்ச்சியு முள்ள
ஜவ்வரிசியை கஞ்சி கூழ், பாயசம் என்ற வகைகளிலெல்லாம் சாப்பிட, இனியபுஷ்டி தரும்
உணவுப் பொருளாகவும், நீர்த்தாரை, பசியினால் ஏற்படும் இரைப்பை அழற்சி ஆகியவற்றை
நீக்கும். நீர்சுருக்குள்ளவர்களுக்கு ஏற்ற உணவு. கசகசாவை பசுவின் பால்
விட்டரைத்துப் பிழிந்து பனங்கற்கண்டு சேர்த்துச் சாப்பிடலாம்.
கஞ்சியாக்கிப்
பருகலாம். பசியை மட்டுப்படுத்தி சூடற்புண்ணை ஆற்றும். உடலிற்கு வலிவு தரும். மணம்
தரும் பொருளாகப் பட்சணங்களில் சேர்க்கப்படும் பன்னீர்ப் பூ, ரோஜாப் பூ போன்றவற்றில்
துவர்ப்புள்ளதால் - இதயம், கல்லீரல், ரத்தக் குழாய்களுக்கு வலிவு தரும். வயிற்றில்
வாயு சேரவிடாது. குடலுக்குக் குளிர்ச்சியும் மன அமைதியும் சந்தோஷமும் தரும்.
பானகமாக, பன்னீராக, மணப்பாகாக, குல்கந்தாக, அத்தராகப் பயன்படுகிறது.
நீங்கள்
குல்கந்தைப் பயன்படுத்தி, அகோரப் பசியை மட்டுப்படுத்தலாம். அதிகம் பசியுள்ளவர்கள்
பீர்க்கங்காய், புடலங்காய் ஆகியவற்றைச்சாப்பிட மிகவும் நல்லது. பீர்க்கங்காயைத்
துவையலாகவும், புடலங்காயைப் பொரியலாகவும் பயன்படுத்தலாம். முந்திரிப் பருப்பை
நெய்விட்டு வறுத்துச் சாப்பிட, பசி மந்தமடையும். தேன் சற்று தூக்கலாகவும்,
நெய்சற்று குறைவாகவும் சேர்த்துச் சாப்பிட, வயிற்றில் ஏற்படும் பசிச் சூடானது
குறைந்துவிடும்.
வாழைப்பழம் - திராட்சை - முலாம்பழம் - ஆப்பிள் - சப்போட்டா -
சீதாப்பழம் ஆகியவை நீங்கள் சாப்பிட உகந்தவை. வயிற்றில் பித்த ஊறலால் ஏற்படும்
தீவிரப் பசியைக் கட்டுப்படுத்தி, அந்த பித்த ஊறலை வெளியேற்றும் ஆயுர்வேத
மருந்துகளாகிய திரிவிருத் லேஹ்யம் - அவிபத்தி சூரணம் - கல்யாணகுலம் போன்றவற்றை,
மருத்துவர் ஆலோசனைப்படி சாப்பிடலாம்.
திரிபலா சூரணத்தை ஐந்து கிராம் எடுத்து, நூறு
மில்லி லிட்டர் வெதுவெதுப்பான பாலுடன், இரவில் படுக்கும் முன் சாப்பிட, மறு நாள்
காலை, நன்கு மலமிளக்கியாக செயல்பட்டு, பித்த சீற்றத்தைக் குடலில் கட்டுப்படுத்தும்.
சங்கபஸ்மம், அப்ரகபஸ்மம், வராடிகாபஸ்மம், காமதுகாதஸம் போன்ற நல்ல மருந்துகளைப்
பயன்படுத்தி பசியின் தீவிரத்தைக் குணப்படுத்தலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...