குழந்தைகள் தான் படிக்க வேண்டும். ஆசிரியர்கள், அலுவலர்கள், அதிகாரிகள்
படிப்பதில்லை. இது சரியல்ல. எல்லோரும் படிக்க வேண்டும். தொடர்ந்து கற்க
வேண்டும். தொடர்ந்து படிப்பது மட்டுமே நமது அறிவை உயிர்த்துடிப்போடு
வைத்திருக்கும். அறிவினை உயிர்த்துடிப்போடு வைத்திருக்கும் ஆசிரியரே
குழந்தைகளை ஆகர்ஷிக்க முடியும். அத்தகைய ஆசிரியர்களாலேயே சாதிக்க முடியும்.
ஒரு நாள் வகுப்பில் சம்பங்கி என்ற வார்த்தையைச் சொல்லி ஆசிரியர் கரும்பலகையில் பூ படம் ஒன்றை வரைகிறார். உடனே குழந்தைகள் சம்பங்கின்னா மீன் டீச்சர்ன்னு சொல்றாங்க. ஒரு பையன் அந்த மீனை வரைந்து காட்டுகிறான். இன்னொரு பையன் பொறிச்சு சாப்பிட முடியாது. குழம்பு தான் வைக்கமுடியும் என்கிறான். அதை வச்சு சாப்பிட முடியாது டீச்சர பொடிப்பொடியாய் போயிடும் என்கிறாள் இன்னொரு குழந்தை. ஆனாலும் மறுபடி மறுபடி அந்த டீச்சர் பூவைப் பற்றியே சொல்றாங்களே தவிர, அந்தக் குழந்தைகள் சொன்ன தகவல்களைக் கண்டு கொள்ளவே இல்லை.
அரசுப் பள்ளிகளில் எவ்வளவு குறைகள் இருந்தாலும் அரசுப்பள்ளிகளுக்கு மாற்றாக வேறு பள்ளிகளைப் பொறுத்திப் பார்க்க முடியாது என்கிறார் நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அமர்த்தியாசென்.
எத்தனை நலத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தினாலும் அரசுப்பள்ளிகளின் சரிவைத் தடுத்த நிறுத்தமுடியவைல்லையே ஏன்? அரசுப்பள்ளி என்றாலே மோசம், ஆங்கிலமே அறிவு, தனியார் பள்ளிகளே தரமானவை, சிறந்தவை என்ற கருத்துருவாக்கம் திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது. பரப்பப்படுகிறது. இதையே சமூகத்தின் உளவியலாகவும் பொதுக்கருத்தாகவும் மாற்றிட முயற்சிக்கப்படுகிறது. அதன் விளைவாக, தனியார் பள்ளிகளில் சேர்க்க வழியில்லாதவர்களும் சமூகத்திலும் பொருளாதாரத்திலும் ஒடுக்கப்பட்டவர்கள் மட்டுமே படிக்கும் பள்ளிகளாக அரசுப்பள்ளிகள் மாற்றப்பட்டுள்ளன.
அரசுப் பள்ளிகளைப் பாதுகாக்கத் தவறியதில் ஆசிரியர் சமூகத்திற்கும் பெரும் பொறுப்பு இருக்கிறது. சம்பளம், டி.ஏ., பென்சன், பதவி உயர்வு போன்ற பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அளவிற்கு சமூகம் சார்ந்து கல்வி சார்ந்து இயங்குவது கிடையாது.
கல்வியால் நமது பார்வை விசாலமாகிறது. கல்வி நம்மை உணர்த்துகிறது. நமக்கு உலகை உணர்த்துகிறது. நம்மை நாமே சுயவிமர்சனம் செய்வது எப்படி என கல்வி வழி கற்பிக்கும் போது இன்றைய உலகில் பரவியிருக்கும் சண்டை, அமைதியின்மை ஆகியவற்றைத் தீர்க்க முடியும். அல்லது அந்தப் பிரச்சனைகள் தீர்க்கக் கூடியனவாக மாற்ற முடியும். இன்னொரு புறம் கல்விக்கும் கல்வி இலக்குகளுக்கும் நடைமுறைக்கும் உள்ள இடைவெளி குறைய வேண்டும்.
நவீன முற்போக்கு கல்வியியலின் பார்வையில் குழந்தைகளிடம் சுயசிந்தனையை வளர விடுவதே கல்வியின் இலக்கும் நோக்கும் ஆகும். பேசுவதில் மன உறுதி, பிறர் பேசுவதைக் கேட்டு உள்வாங்குதல், சுயமாக சிந்தித்து முடிவெடுத்தல், ஆசிரியரும் மாணவரும் இணைந்து உரையாடுதல். இவையே நவீன முற்போக்குக் கல்வியின் இலட்சியம்.
2005 தேசிய கலைத்திட்டம், கற்றல் என்பது பாடநூலுக்கு அப்பால் செல்லுதல் வேண்டும் என வலியுறுத்துகிறது. ஆகவே தான் எல்லா கற்றலும் அனுபவத்தின் அடிப்படையிலும் குழந்தைகளின் செயல்பாட்டின் அடிப்படையிலும் அமைய வேண்டும் என வலியுறுத்துகிறது.
தான் கடந்து செல்லும், தன்னைப் பயன் கொள்ள வைக்கும் அனைத்திற்கும் தனக்குமான தொடர்பை தனது சொந்த இருப்பின் வழிநின்று தனது சொந்த மொழியில் பெயரிட்டு அர்த்தப்படுத்துதலைத் தான் உலகைப் பெயரிடுதல் என்று கல்வியின் அடிப்படைகளில் ஒன்றாக பாவ்லோ பிரைரே முன்வைக்கிறார். ஒட்டுமொத்த சமூக விடுதலைக்கான கல்வியாக, விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட நமது நாட்டின் நலன் பேணும் கல்வியாக நமது அடிப்படைகளை அப்படித் தான் மாற்ற வேண்டும்..
கற்பித்தலுக்கும் உரை நிகழ்த்துவதற்கும் இடையே வேறுபாடுகள் உள்ளன. விரிவுரை என்பது கற்பித்தல் அல்ல. கற்பித்தல் என்பது உறவாடும் செயல். கற்போரும் கற்பிப்போரும் ஒருவருக்கொருவர் உறவாடவில்லை என்றால் கற்பித்தல் நடைபெறாது. வகுப்பறையில் சப்தம் எழலாம். அவை படைப்புக்கு இட்டுச் செல்லும் இரைச்சல்.
மாணவர் என்பவர் ஏற்கனவே அனுபவ அறிவு பெற்றே வகுப்பிற்கு வருகிறார். அவர் ஏதும் அறியாதவர், ஆசிரியர் அல்லாம் அறிந்தவர் எனும் ஆண்டான் அடிமை முறையில் மாணவர் தலையைத் திறந்து தகவல்களைக் கேள்வி பதில்களாய் வங்கியில் பணம் போடுவது போல கத்தி நிரப்புவது கல்வியே அல்ல.
கார் ஓட்டக் கற்றுக் கொள்கிறோம் என்றால் எப்பொழுது பயிற்சியாளரின் உதவியின்றி நாமே கார் ஓட்ட முடிகிறதோ, அப்பொழுது தான் நாம் அதனை முழுமையாகக் கற்றுக் கொண்டவராகிறோம். அதுபோல கல்வியிலும் ஆசிரியர் துணையின்றி நாமே சொந்தக் காலில் நின்று கற்கும் திறன் அடையும் போது தான் நாம் மெய்யாகக் கல்வி கற்றுள்ளோம் என்று பொருள்.
1984 85ல் அமைக்கப்பட்ட சட்டோபத்தியாயா கமிஷன் ஆசிரியர்களுக்கு நூல் கூப்பன் வழங்க வேண்டும். நூலகங்களுக்கு மட்டுமல்ல ஆசிரியர்களும் தாமே நூல்களை சேகரித்துப் படிக்கும் பழக்கத்தைத் தூண்ட வேண்டும் என்று பரிந்துரை அமலாக்கப்பட வேண்டும்.
ஆசிரியர்களின் மத்தியில் வாசிப்புப் பழக்கம் தீவிரமடைய வேண்டும். அது தன்னிச்சையாக அவர்களது வகுப்பறைகள், மாணவர்கள் மூலமாக சமூகத்தை வந்தடையும். எனவே ஆசிரியர், மாணவர் இயக்கங்கள் வாசிப்பைத் தீவிரப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அந்த வாசிப்பு நல்ல மாற்றங்களை வகுப்பறைகளிலும் பாடநூல் உருவாக்கங்களிலும் பொதுவாக கல்வியிலும் உருவாக்கும்..
அனைத்து அரசுப்பள்ளிகளிலும் மழலையர் வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும். யஷ்பால் உள்ளிட்ட கல்வியாளர்கள் பலரும் வலியுறுத்திய மழலையர் வகுப்பு முதல் தாய்மொழிவழிக் கல்வி அமலாக்கப்பட வேண்டும்..
1960களில் கோத்தாரி கமிஷன் முன்மொழிந்தபடி கல்விக்கு 6% நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.
உலகத் தொடர்பு மொழியாக இருக்கின்ற ஆங்கில மொழியை ஒரு பாடமொழியாக, திறமையான ஆசிரியர்களையும் சிறப்புப் பயிற்சியாளர்களையும் கொண்டு கற்றுக் கொடுக்க வேண்டும்.
வகுப்பிற்கு ஒரு ஆசிரியர் நியமிக்கப்பட வேண்டும். பாடவாரியான ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரம் மாற்றியமைக்கப்பட வேண்டும்.
பள்ளி நிர்வாகங்கள் அதிகாரிகளின் கைகளில் இருந்து எடுக்கப்பட்டு சமூகத்தின் பொறுப்பாக மாற்றப்பட வேண்டும்.
சமச்சீர் பாடத்திட்டமும் பாடப்புத்தகங்களும் மட்டுமே சமச்சீர் கல்வி ஆகாது. இது மட்டுமே சமநிலையை உருவாக்காது. நான்கு வகையான கல்வி வாரியங்கள் கலைக்கப்பட்டு அதிகாரம் கொண்ட ஒரே வாரியமாக தமிழ்நாடு மாநில பள்ளிக்கல்வி வாரியமாக உருவாக்கப்பட வேண்டும்.
உண்மையான அர்த்தத்தில் CCE கடைப்பிடிக்கப்படும்போது மாணவர்களைப் பேச வைக்கிறது. கல்வியில் வெறுமனே பார்த்துக் கொண்டிருப்பவராக அல்லாது பங்கு கொள்வதில் சம உரிமை பெற்றவராக அது அவரை நடத்துகிறது.. எனவே சரியான புரிதலுடன் அமல்படுத்தப்பட வேண்டும்.
வாசிக்கச் சிரமமாக இருந்தால் அது தீவிரமான இலக்கியம். குழந்தைகள் படிப்பதற்கு சிரமமாக, எடையில் கனமாக இருந்தால் அது தரமான பாடநூல் என்பவை ஒரு வகையில் மூடநம்பிக்கைகளே. இரண்டுமே தவறு. களையப்பட வேண்டும்.
மாணவர்கள் தான் நல்லாசிரியர்களைத் தேர்ந்தெடுக்கும் சிறந்த நடுவர்களாக இருக்க முடியும். சிறந்த ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்படுவதில்லை என்பதை விட தவறான நபர்களுக்கு வழங்கப்படும் போது தான் அதிகம் விமர்சனத்திற்கு உள்ளாகிறது. எனவே நல்லாசிரியர் தேர்விற்கான தனித்துச் செயல்படும் குழு உருவாக்கப்பட வேண்டும். தேர்வில் ஆசிரியர்களின் முன்னாள், இந்நாள் மாணவர்களின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். தேர்வு வெளிப்படைத் தன்மையுடன் இருக்க வேண்டும்.
1980களில் புதிய கல்விக் கொள்கை அறிமுகமான பிறகு, பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் கல்வியிடமிருந்து அந்நியப்பட்டுப் போனார்கள். டியூசனுக்குக் கொண்டு விடுபவராகவும் பணத்தைத் தேத்திக் கட்டுபவராகவும் மாறிப்போனார். தனியார்மயம் அவர்களைப் பயன்படுத்திப் பணம் பறிக்கத் தொடங்கிவிட்டது. பெற்றோர் கல்வியில் ஈடுபடுபவராக அல்லாது தன் குழந்தையின் கல்வி மதிப்பெண் தரத்தில் தலையீடு செய்பவராக மட்டுமே உருமாற்றம் கண்டுள்ளார்.
ஆசிரியர்கள், கல்வியாளர்கள், இவர்களுக்குத் துணையாக பெற்றோர்களும் மாணவர்களும் இணைந்து கல்விக் கொள்கையைத் தீர்மானிக்கும் சமூகமே கல்வியில் சிறந்த சமூகமாக இருக்க முடியும்.
சுதந்திரம் அடைந்த பிறகும் கூட ஆளும் வர்க்கத்திற்கு அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்வி கொடுக்க வேண்டும் என்பதில் உடன்பாடு இல்லைஉ. அதனால் தான் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்வியை பத்தாண்டுகளுக்குள் உறுதிப்படுத்த வேண்டும் என வழிகாட்டு நெறிமுறைகளில் பிரிவு 45ல் வைக்கப்பட்டது.
சுதந்திரம் அடைந்து 63 ஆண்டுகள் கொண்டுவரப்பட்ட கல்வி உரிமைச் சட்டமும் உருப்படியான சட்டமாக இல்லாமல் ஆயிரம் ஓட்டைகள் நிரம்பிய சட்டமாக ஏராளமான குளறுபடிகளுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு என்ற பெயரில் அரசுப்பள்ளிகளுக்கு வரவேண்டிய இலட்சக்கணக்கான குழந்தைகள் தனியார் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். கோடிக்கணக்கில் அரசின் நிதி தனியார் பள்ளிகளுக்கு தாரை வார்க்கப்படுகிறது.
புதிய தனியார் கல்வி நிறுவனங்கள் தொடங்குவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். ஏற்கனவே இருக்கிற தனியார் கல்வி நிறுவனங்கள் முறைப்படுத்தப்பட வேண்டும். கட்டணங்கள் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும்.
பாகுபாடற்ற கல்வி அருகமைப் பொதுப்பள்ளி மூலமே சாத்தியம். எனவே அரசு தன் முழுப்பொறுப்பிலும் செலவிலும் அருகமைப் பள்ளி மூலமாக கல்வி வழங்க வலியுறுத்தி ஒரு மக்கள் கூட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.
இவற்றை மொத்தமாகத் தொகுத்துப் பார்க்கும் போது கல்விக்கான ஒரு ஆவணம் போல தெரிகிறது இல்லையா. கல்விக் கொள்கை, கலைத்திட்டம், கல்வி உரிமை, நிதி, பாடத்திட்டம், வகுப்பறை, நடைமுறைப் பிரச்சனைகள், நிரந்தர தீர்வு அனைத்தையும் முன்வைக்கும் பள்ளிக்கல்வி : புத்தகம் பேசுது நேர்காணல்கள் எனும் இந்நூல் பாரதி புத்தகாலயத்தால் வெளியிடப்பட்டுள்ளது.. நாம் தலையிட வேண்டிய, அல்லது நாம் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டிய கல்வி சார் பிரச்சனைகளைத் தொகுத்துப் புரிந்துகொள்வதற்கும் செயல்படுவதற்கும் பேருதவியாக, கல்விக்கான ஒரு கையேடாக இந்நூல் விளங்கும்.
முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, கல்வித்துறை இணை இயக்குநர்கள் பொன்குமார் மற்றும் லதா, என்.சி.ஆர்.டி.இ. முன்னாள் இயக்குநர் கிருஷ்ணகுமார், ஆயிஷா நடராஜன், பிரின்ஸ், பேரா.நா.மணி, ஜெ.கே. உள்ளிட்ட கல்வியாளர்கள், ஆசிரியர் அமைப்பில் இருந்து தோழர் கண்ணன், மாணவர் அமைப்பின் ராஜ்மோகன், கனகராஜ் ஆகியோரின் நேர்காணல்களின் தொகுப்பு இந்நூல். புத்தகம்பேசுது இதழில் வெளிவந்தவை.
– தேனி சுந்தர்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...