உடல் நலம்....
கல்லீரலில் கொழுப்பு தேங்குவதால் எந்த மாதிரியான பிரச்சனைகள் உண்டாகும் தெரியுமா?
நம் உடலில் உள்ள மிகப்பெரிய உறுப்பு இந்த கல்லீரல். கல்லீரல் தான் நம்
உடலில் ஏகப்பட்ட வேலைகளை செய்கிறது. ஆனால் அப்படிப்பட்ட கல்லீரலில்
கொழுப்பு படிந்தால் என்னவாகும்?
கல்லீரலில் கொழுப்பு படியும் நிலையை கல்லீரல் ஸ்டீடோசிஸ் என்று
அழைக்கின்றனர். கல்லீரலில் சிறிய அளவு கொழுப்பு இருப்பது இயல்பான ஒரு
விஷயம். ஆனால் அதுவே அதிகப்படியான கொழுப்பு காணப்பட்டால் உடல்நலப்
பிரச்சினையாக மாறிவிடும்.
கல்லீரலில் கொழுப்பு தேங்குவதால் கல்லீரலில் அழற்சி, சேதம் மற்றும்
வடுக்களை உண்டாக்க வாய்ப்புள்ளது. இந்த சேதமே பின்னாளில் கல்லீரல்
செயலிழப்புக்கு காரணமாகிவிடுகின்றன.
கல்லீரலில் ஏற்படும் நோய்களை இரண்டு வகைகளாக பிரிக்கின்றனர். நிறைய
ஆல்கஹால் குடிக்கும் ஒருவருக்கு ஏற்படும் நோய் ஆல்கஹால் கொழுப்பு கல்லீரல்
நோய் ஆகும். இதுவே மதுப்பழக்கம் இல்லாத ஒருவருக்கு கல்லீரலில் கொழுப்பு
படிந்தால், அதை ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் என்று
கூறுகின்றனர்.
இந்த கல்லீரல் நோயால் வயதானவர்கள் பாதிக்கப்பட்ட காலம் போய் இப்பொழுது
தவறான உணவுப் பழக்கத்தால் இளம் வயதினர் கூட பாதிப்படையும் நிலை ஏற்பட்டு
உள்ளது.
கல்லீரலில் கொழுப்பு தேங்க என்ன காரணங்கள்?
நாம் உணவில் சாப்பிடும் கொழுப்பை சரியாக வளர்ச்சிதை மாற்றம் செய்யாத போது
கொழுப்பு கல்லீரல் ஏற்படுகிறது. இந்த கொழுப்பு கல்லீரல் நோய் ஏற்பட
கீழ்கண்ட காரணிகள் காரணமாகின்றன.
* மதுப்பழக்கம்
* உடற்பயிற்சியின்மை
* அதிக உடல் பருமன்
* தவறான உணவுப் பழக்கம்
* அதிக இரத்த சர்க்கரையை கொண்டிருப்பது
* இன்சுலின் சுரப்பு பிரச்சினைகள்
* இரத்தத்தில் கெட்ட கொழுப்புகள் அதிகமாக தேங்கி இருத்தல்
* ஹெபடைடிஸ் சி போன்ற கல்லீரல் சம்பந்தமான நோய்த்தொற்றுகள்
* கல்லீரலில் நச்சுத்தன்மை உண்டாதல்
மருந்துகளின் பக்க விளைவுகள் போன்றவை கல்லீரலில் கொழுப்பு தேங்க காரணமாக அமைகின்றன.
கல்லீரலை ஆரோக்கியமாக வைக்க உதவும் உணவுகள்:
மீன்..
மீனில் ஓமேகா 3 மற்றும் ஓமேகா 6 போன்ற கொழுப்பு அமிலங்கள் காணப்படுகிறது.
இது கல்லீரலில் உள்ள கொழுப்பை கரைக்க உதவுகிறது. எனவே சால்மன்,
கானாங்கெளுத்தி போன்ற மீன் வகைகளை சாப்பிடலாம்.
வால்நட்ஸ்..
வால்நட்ஸில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் நல்ல கொழுப்பு சத்துக்கள் உள்ளன.
இவை கல்லீரலில் தேங்கும் ட்ரை கிளிசரைடு போன்ற கொழுப்பை கரைக்க உதவுகிறது.
காய்கறிகள் மற்றும் பழங்கள்..
தினசரி உங்க உணவில் 5 விதமான காய்கறிகள் 3 விதமான பழங்களை சேர்த்து
வாருங்கள். காய்கறிகள் மற்றும் பழங்களில் நார்ச்சத்துகள் அதிகளவில் உள்ளன.
இது கல்லீரலில் தேங்கும் கொழுப்பை கரைக்க உதவுகிறது.
பூண்டு..
பூண்டில் அல்லிசின் என்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இது அழற்சி,
நச்சுக்களை வெளியேற்றுதல், கெட்ட கொழுப்புகளை குறைத்தல் போன்ற வேலைகளை
செய்கிறது. எனவே உணவில் பூண்டு சேர்ப்பது உங்க கல்லீரலுக்கு சிறந்தது.
க்ரீன் டீ..
க்ரீன் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள்
உள்ளன. மேலும் இது உங்க உடல் எடையை குறைக்க பயன்படுகிறது. எனவே ஒரு
நாளைக்கு 3-4 கப் வரை டீ பருகி வரலாம். இதன் மூலம் உங்க கொழுப்புகளை கரைக்க
முடியும்.
ப்ராக்கோலி..
ப்ராக்கோலியை அடிக்கடி உணவில் சேர்த்து வருவது கல்லீரலில் தேங்கி இருக்கும்
நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இது
உங்க கல்லீரலில் அழற்சியை ஏற்படுத்தும் வைரஸ்களில் இருந்தும் கல்லீரலின்
கொழுப்பை குறைக்கவும் உதவி செய்கிறது. இதன் மூலம் உங்க கல்லீரலை நீங்கள்
ஆரோக்கியமாக வைக்க முடியும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...