கரோனா நோய்த் தொற்றுப் பரவலால் உலகம் முழுவதும் பயங்கர நிதி நெருக்கடி - நம்பர் ஒன் மனிதர்களில் தொடங்கி சமுதாயத்தின் கடைசி வரிசையில் நிற்பவர்கள் வரை!
ஊரடங்கு, பொது முடக்கம், முழுவதுமாக அல்லது பகுதி பகுதியாக. தொழில் இல்லை, வணிகம் இல்லை, வேலை இல்லை, வேலை இருந்தாலும் பழைய ஊதியம் இல்லை, சம்பளத்தில் வெட்டு, பணப் புழக்கம் அவுட். நடுத்தர மக்களுடைய நிலைமைதான் மிகவும் மோசம்.
இதற்காகவெல்லாம் சோர்ந்துபோய்விட முடியுமா, என்ன? வாழ்ந்துதானே ஆக வேண்டும். கரோனா காலம் முடிந்து நிதி நிலைமை சீராகும் வரை - பணத் தட்டுப்பாட்டை, சம்பள வெட்டைச் சமாளிக்க என்னென்ன செய்யலாம்? இதோ யோசனைகளின் பட்டியல்:
► முதலில் நம்முடைய வருவாய்க்குத் தக்க விதத்தில் செலவுகளைத் திட்டமிட்டுக் கொள்ள வேண்டும் (பட்ஜெட்!). முன்னதாகவே ஒரு பட்டியலைத் தயாரித்து வைத்துக்கொண்டால்கூட தப்பில்லை. இவ்வளவு வரும், இவ்வளவு செலவு செய்யலாம், மருத்துவம் போன்ற அவசரத் தேவைக்காக இவ்வளவு வைத்துக் கொள்ள வேண்டும் என்று.
► நமக்கு - வீட்டுக்கு உடனடியாக மிகவும் அவசியம் என்றில்லாத எதையுமே வாங்கக் கூடாது. குறிப்பாக, விலை உயர்ந்த - ஆடம்பரப் பொருள்கள் வேண்டவே வேண்டாம்.
► கடன் அட்டைதானே, மாதாமாதம்தானே, கட்டிக் கொள்ளலாம் என்ற கண்மூடித்தனமான துணிச்சலில் பொருள்களை மாதத் தவணைகளில் குளிர்சாதனப் பெட்டி, சலவை எந்திரங்கள், தொலைக்காட்சிப் பெட்டிகள் வாங்குவதை முற்றிலுமாகத் தவிர்ப்பது நல்லது. இப்போதைக்கு இருப்பதை வைத்துப் பிழைத்துக் கொள்ள வேண்டியதுதான் - எனவே, இனி நோ கிரெடிட் கார்டு, நோ இஎம்ஐ.
► வெள்ளிக்கிழமை அல்லது சனிக்கிழமை மாலை அல்லவா, ஜாலியாக குடும்பத்துடன் ஒரு ரவுண்ட் ஷாப்பிங் போய்விட்டு, அப்படியே ஹோட்டலில் எல்லாருமாக டின்னரை முடித்துவிட்டுத் திரும்பிவிடலாம் - என்ற எண்ணமே இப்போதைக்கு வரக் கூடாது. கையிலிருக்கிற காசை அல்லது கடன் அட்டையில் செலவு செய்வதில் என்ன ஜாலி வேண்டிக் கிடக்கிறது? முடிந்தால் ஹோட்டலுக்குச் சென்று சாப்பிடும் பழக்கத்தையே நிலைமை சரியாகும்வரை தள்ளிவைத்தால் நல்லது, இருபது ஆண்டுகளுக்கு முன்னர் இப்படித்தானா எல்லா நாளும் ஹோட்டலுக்குச் சென்று சாப்பிட்டுக் கொண்டிருந்தோம்?
► கார்கள், இரு சக்கர வாகனங்கள் வாங்கவே வேண்டாம். புதிதாக வாங்கத் திட்டமிருந்தால் அந்த யோசனையையே தள்ளிவையுங்கள், ஏற்கெனவே இருப்பதை மாற்ற வேண்டும் என்று நினைப்பிருந்தால் ஒத்திவையுங்கள், இப்போதைக்கு இருப்பதை வைத்தே சமாளித்துக்கொள்ளுங்கள், நிலைமை சீரடையட்டும். இல்லை, இல்லை, ஒரு வாகனம் வாங்கியேதான் தீர வேண்டும் என்ற நிலையிருந்தால், வாங்குங்கள், செகண்ட் ஹேண்ட்டில், இரண்டாவது விற்பனையில்.
► பிறகு சுற்றுலாக்கள், வீக் என்ட் ஷார்ட் டிரிப்கள் போன்றவையெல்லாம் தேவையே இல்லை, காசுக்குப் பிடித்த கேடு. இருக்கவே இருக்கிறது, டிவி பாருங்கள், புத்தகங்கள் படியுங்கள், ஒன்றுமில்லாவிட்டால் காலாற நடந்துவிட்டு வாருங்கள்.
► கோவில் குளங்களுக்கான பக்திப் பயணங்கள் எல்லாம் வேண்டாம். ஏதாவது வேண்டுதல்கள் என்றாலும்கூட ஆறு மாதங்கள் கழித்துகூட நிறைவேற்றிக் கொள்ளலாம், கடவுளர்கள் கோபித்துக்கொள்ள மாட்டார்கள், அவர்களுக்கும் தெரியும்தானே, நம்முடைய நிலைமை?
► வீட்டில் ஒவ்வொருவரும் ஆளுக்கொரு வாகனத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம். கார் என்றால், சற்று முன் பின் என்றாலும், சேர்ந்து சென்றுவரலாம். ஒரே இரு சக்கர வாகனத்தில் இருவர் சென்றுவரலாம். பெட்ரோல், டீசல் விற்கிற விலையில், உயருகிற வேகத்தில் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே எரிபொருள் நிரப்பிக் கொண்டிருப்பது தேவைதானா? சில கிலோ மீட்டர்கள் என்றால் சைக்கிளில் செல்லலாம். அதைவிடவும் அருகில் என்றால் நடந்தும் செல்லலாம். வீட்டை விட்டு வெளியே புறப்பட்டாலே இரு சக்கர வாகனங்களைத் தேடுவதற்குப் பதிலாக நடந்து சென்றுவரும் பழைய பழக்கத்தை மீட்டெடுக்கலாம். யாரோ எவரோ என்று சென்றுகொண்டிருந்த தெருக்காரர்களும் நன்றாக அறிமுகமாவார்கள்.
► பலசரக்குகள் வாங்க ஆகும் செலவைத் தேவைக்குத் தகுந்ததாக மாற்றிக் கொள்ள வேண்டியது அவசியம். கடைக்குச் சென்றுவிட்டோம் என்பதற்காக எல்லாவற்றிலும் ஒவ்வொரு பாக்கெட்டை எடுத்துவந்து, மாதக்கணக்கில் வைத்திருந்து, கெட்டுப் போனதும் தூக்கிவெளியே எறிவதற்கு... எதற்காக இப்போது செலவு செய்ய வேண்டும். வீட்டில் என்னவெல்லாம் இருக்கின்றன, என்னென்ன தேவைப்படுகின்றன என்று ஒருமுறை பார்த்துக் குறித்துக்கொண்டு சென்றால் செலவை இறுக்கிப் பிடிக்கலாம்.
► அடுத்தது, மின் கட்டணம். எவ்வளவு முடியுமோ அவ்வளவு குறைக்க வேண்டும். வழக்கமாக இரு மாதங்களுக்கு ஒரு முறைதான் மின் கட்டணத்தை நினைத்துப் பார்ப்போம், இனி எல்லா நாள்களிலுமே மின் கட்டணத்தை மனதில் வைத்துக்கொண்டு, மின்சார, மின்னணு சாதனங்களைத் தேவைக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும், இல்லாவிட்டால் நிறுத்திவைத்துவிட வேண்டும். 24 மணி நேரமும் ஏசி எந்திரம் ஓடிக் கொண்டிருக்க வேண்டியதில்லை, விளக்குகள் ஒளிர்ந்துகொண்டிருக்க வேண்டியதில்லை, மின்விசிறிகள் சுழன்றுகொண்டிருக்க வேண்டியதில்லை.
► வீட்டில் இரு கேபிள் இணைப்புகள் இருந்தால், இரண்டு டிஷ்கள் இருந்தால்... இனி ஒன்றே போதும், ஒன்றைக் கைவிட்டுவிடலாம், பிறகு பார்த்துக் கொள்ளலாம். எல்லாரும் ஒரே இடத்தில் அமர்ந்து டி.வி. பார்த்துக்கொள்ள வேண்டியதுதான்.
► வீட்டில் மகன்கள், மகள்கள் எல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்குத் தனித்தனி இரு சக்கர வாகனங்களில் செல்கிறார்களா? நிறுத்துங்கள். பள்ளி, கல்லூரிப் பேருந்துகளில் செல்வதைப் பரிசீலிக்கலாம். இல்லாவிட்டால் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவது பற்றியும் சிந்திக்கலாம். சைக்கிள், தி பெஸ்ட்! உடற்பயிற்சியுமாச்சு. எவ்வளவு தொலைவு என்பதை மட்டும் பார்த்துக் கொள்ள வேண்டும்.
► கொஞ்ச காலத்துக்கு 'நாமெல்லாம் எப்பவுமே பிராண்டட்தான்' என்ற வெட்டி டயலாக்கை விட்டுவிடலாம். எந்தப் பொருளாக இருந்தாலும், தேவையாக இருந்தால், நல்லதைத் தேடி வாங்கினால் போதும். இந்த பிராண்ட், அந்த பிராண்ட் என்று ஒன்றையே பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்க வேண்டாம்.
► அப்புறம் பள்ளி, கல்லூரிக் கட்டணங்கள். இவற்றுக்குத்தான் என்ன செய்வதென்றே தெரியவில்லை. நம்முடைய கையிலும் இல்லை, அவர்கள் சொல்வார்கள், நாம் கட்டிதான் தீர வேண்டும். அவரவர் சொந்த உத்திகளைப் பயன்படுத்தி எதையாவது செய்து சமாளிக்க வேண்டியதுதான்.
இவையெல்லாம் செலவுகளைப் பற்றி... வழக்கமான வருவாயில் வெட்டு விழுந்த நிலையில், புதிதாக ஏதேனும் வருவாயைத் தேட முடியுமா என்றும் பார்க்கலாம். இந்த வேலை பார்த்துக்கொண்டே, இன்னொரு வேலை, பகுதி நேரமாக. அல்லது வீட்டிலிருக்கும் நேரத்தில் வேறொரு வேலை... கொஞ்சம் பணம் கிடைத்தாலும் நல்லதுதானே.
இந்த யோசனைகள் எல்லாமும் எல்லாருக்கும் அல்ல. இருப்பதில் எதையெல்லாம் குறைத்துக் கொண்டு செலவைச் சமாளிக்கலாம் என்பதற்கான சின்ன திசைவழிகள்தான்.
ம். வாழ்ந்துதானே ஆக வேண்டியிருக்கிறது!
Source Dinamani
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...