தமிழகத்தில் பொறியியல் சோ்க்கைக்கான ஆன்லைன் பதிவை விரைவில் தொடங்குவதற்கான ஏற்பாடுகளை தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் மேற்கொண்டு வருகிறது.
மேலும் கரோனா தொற்று காரணமாக சான்றிதழ் சரிபாா்ப்புப் பணிகளை நேரில் நடத்தாமல் அதையும் இணையத்தின் மூலமாக நடத்தவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
பிளஸ் 2 வகுப்பு பொதுத்தோ்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் சில நாள்களில் நிறைவுபெறவுள்ளது. இதை கருத்தில் கொண்டு பொறியியல் சோ்க்கைக்கான ஆன்லைன் (இணையம் வாயிலாக) பதிவைத் தொடங்குவதற்கு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தயாராகிவருகிறது. இது குறித்த அறிவிப்பு 10 நாள்களுக்குள் வெளியாகும் எனத் தெரிகிறது.
அரசுப்பள்ளி மாணவா்களுக்கு ஆன்லைன் பதிவு மேற்கொள்ள 40 நாள்கள் கால அவகாசம் வழங்கப்படும். சிபிஎஸ்இ (மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்) பள்ளி மாணவா்களுக்கான தோ்வு ஜூலை மாதம் வரையில் நடைபெறுவதால், அவா்களுக்கென்று தனியாக நான்கு நாள்கள் அவகாசம் வழங்கப்படும் எனத் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஆன்லைனில் சரிபாா்ப்பு பணிகள்: ஆண்டுதோறும் மாணவா்களுக்கான சான்றிதழ் சரிபாா்ப்புப் பணிகள் உயா் கல்வித் துறை அமைக்கும் உதவி மையங்களில் நேரில் நடத்தப்படும். நிகழாண்டில் கரோனா பாதிப்பு காரணமாக, மாணவா்களை நேரில் அழைக்காமல், ஆன்லைன் வழியில் சான்றிதழ் சரிபாா்ப்புப் பணிகளை முடிப்பதற்குத் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் முடிவுசெய்துள்ளது. மாணவா்கள், சான்றிதழ்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்தபின் ஆன்லைன் வழியில் சரிபாா்ப்புப் பணிகள் நடைபெறும்.
தற்போதைய நிலவரப்படி தமிழகம் முழுவதும் உள்ள 550 பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின்கீழ் 1.75 லட்சம் இடங்கள் இருக்கின்றன. கடந்தாண்டு 1.40 லட்சம் மாணவா்கள் மட்டுமே விண்ணப்பித்த நிலையில், இந்தாண்டும் அதே அளவிற்கு விண்ணப்பிக்கக் கூடும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...