ஒரு ஆசிரியரின் உண்மையான வேலை என்ன?
“ஆசிரியரின் வேலை எப்படியானது, வெறும் தகவல்களைப் பகிர்வதா?” என்ற
கேள்வியை வகுப்பாசிரியரிடம் எழுப்பினாள் ஒரு மாணவி.
“தகவல்களைத் தெரிவிப்பதென்பது ஆசிரியரின் குறைந்தபட்ச வேலை. ஏனென்றால்,
இந்தச் சமூகத்தில் பிழைக்க எப்படியும் ஒரு பணி கிடைத்தாக வேண்டும். அதற்கு
மாணவனுக்கும் மாணவிக்கும் சில விஷயங்களையாவது ஆசிரியர் கற்பித்தாக
வேண்டும். வாழ்க்கையை எதிர்கொள்ள மாணவர் தயாராக வேண்டுமல்லவா!” என்று
பதிலளித்தார் ஆசிரியர்.
“அது சரிதான். ஆனால், நாம் கண்டுபிடிக்க முயன்றுகொண்டிருப்பது
ஆசிரியர் வேலை என்னவென்பதைத்தானே? வேலைவாய்ப்புக்கு மாணவரைத்
தயார்படுத்துவதா அவர் வேலை, அதைக் காட்டிலும் அவருக்கு வேறெந்த
முக்கியத்துவமும் இல்லையா?” என்றாள் மாணவி “நிச்சயமாக இருக்கிறது. தன்னுடைய
வாழ்க்கை, நடத்தை, அணுகுமுறை, சிந்தனையின் வழியாக மாணவர் மீது அவர்
தாக்கம் செலுத்தலாம், மாணவரை ஊக்கப்படுத்தலாம். முன்மாதிரியாகத் திகழலாம்”
என்றார் ஆசிரியர்.
“மாணவருக்கு முன்மாதிரியாகத் திகழ்வது ஆசிரியரின் வேலையா என்ன?
அதற்குத்தான் ஏற்கெனவே பல வரலாற்றுக் கதாநாயகர்களும் தலைவர்களும்
இருக்கிறார்களே! முன்மாதிரியை முன்னிறுத்துவதா கல்வி? சுதந்திரமாகவும்
படைப்பாற்றலோடும் மாணவர் திகழ உதவுவதல்லவா கல்வி!
முன்மாதிரியைப் பின்தொடர்வதில் என்ன சுதந்திரம் இருக்க முடியும்?
ஒன்றைப் பின்பற்றும்படி மாணவர் ஊக்குவிக்கப்படும்போது அவருக்குள் அச்சம்
என்பது ஆழமாகவும் நுட்பமாகவும் விதைக்கப்படுகிறதல்லவா?
அப்படியானால் தற்போது மாணவர் என்னவாக இருக்கிறார், எதிர்காலத்தில் அவர்
என்னவாக வேண்டும் என்பதற்கு இடையில் அவருக்குள் நிகழும் மனப்போராட்டத்தை
நீங்கள் ஊக்கப்படுத்தவில்லை என்றுதானே அர்த்தம்? தான் என்னவாக இருக்கிறோம்
என்பதை ஒரு மாணவர் உணர உதவுவது ஆசிரியரின் வேலை இல்லையா?” என்றாள் மாணவி.
‘ஒரு ஆசிரியரின் உண்மையான வேலை என்ன?’ என்ற தலைப்பில் தத்துவ
அறிஞர், கல்வியியல் சிந்தனையாளர் ஜே.கிருஷ்ணமூர்த்தி ஆற்றிய உரையின் ஒரு
பகுதி இது. அவர் விவரித்திருக்கும் இதுபோன்ற பல விவாதங்கள் அவர் உருவாக்கிய
ரிஷிவேலி பள்ளியில் இன்றும் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. அங்கு
மாணவர்களுக்கும் ஆசிரியர்களும் ஒன்றுகூடிக் கல்வி
கற்றுக்கொண்டிருக்கிறார்கள்.
ஆசிரியர்களுடன் உரையாடுகிறோமா?
21-ம் நூற்றாண்டில் மாணவர்களுக்குத் தேவையான திறன்கள் குறித்துத்
தொடர்ந்து விவாதிக்கிறோம். அதற்கு எப்படியெல்லாம் அவர்கள் தங்களைத்
தகவமைத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் அறிவுரைகளை வாரியிறைக்கிறோம்.
அதேபோல ஆசிரியரின் முக்கியத்துவத்தை மாணவர்களுக்கு உணர்த்த உலகின்
தலைசிறந்த ஆசிரியர்களின் வாழ்க்கைச் சம்பவங்களை அடுக்குகிறோம். ஆனால்,
ஆசிரியப் பணி என்பது என்னவென்று ஆசிரியர்களுடன் உரையாடுகிறோமா?
ஜே.கிருஷ்ணமூர்த்தி சுட்டிக்காட்டியதுபோல மாணவர்கள் தன்னிலையை அறிய
தூண்டுகோலாகவும், சுதந்திரமாகச் செயல்பட கிரியாஊக்கியாகவும்,
படைப்பாற்றலோடு மிளிர வழிகாட்டியாகவும் ஆசிரியர் திகழ வேண்டாமா? இவை
சாத்தியப்பட ஆசிரியருக்கு என்ன தேவை? வாழ்நாள் முழுவதும் கற்றலில்
ஈடுபடுபவர்தானே கற்பித்தலிலும் சிறப்பாக ஈடுபட முடியும்.
தன்னுடைய அறிவின் பரப்பளவை விரிவுபடுத்தத் துடிப்பவர்தானே
மாணவருக்குள் ஒளிந்திருக்கும் சாதனையாளரை, படைப்பாளியைத் தட்டியெழுப்ப
முடியும். சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளையாக மாணவர்களை வார்க்காமல்
அவர்களுக்குத் தூண்டுகோலாகத் திகழும் இத்தகைய ஆசிரியர்கள் உலகெங்கிலும்
இருக்கிறார்கள். கல்வி என்பது கற்பிப்பது அல்ல, கற்பனையைக் கிளறுவது என்ற
புரிதலுடன் செயல்படுகிறார்கள். அப்படிப்பட்ட ஆசிரியர்கள் கையாளும்
புதுமையான கற்பித்தல் முறைகளில் சில:
உலகமே பாடசாலை
வகுப்பறையில் மட்டும்தான் கற்பித்தல் நிகழும் என்ற மாயையை
ரவீந்திரநாத் தாகூர் முதல் ஜே.கே.வரை கல்வியியல் அறிஞர்கள் பலர்
மறுதலித்திருக்கிறார்கள். எதிர்காலத்தில் உலகை எதிர்கொள்ள மாணவப்
பருவத்திலேயே பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும். அதற்கு நிஜ உலகச் சூழலை
மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தலாம். உதாரணத்துக்கு, வங்கிக்குச் சென்று
அதிகாரிகளோடு உரையாடுதல், விண்ணப்பப் படிவங்களைப் பூர்த்திசெய்தல்.
ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு நாள் சுற்றுப்பயணம் என்பதே பல நிதர்சனங்களைக்
கற்றுத் தரும்.
வகுப்பறைக்குள் உலகம்
சிக்கலான நிஜ வாழ்க்கைச் சம்பவங்களைக் கேள்விகளாக முன்வைத்து
அவற்றுக்குத் தீர்வு காணச் சொல்லுதல். உதாரணத்துக்கு, பள்ளிக்கு
நேரமாகிவிட்டது. மிதிவண்டியை அதிவேகமாக மிதித்துச் சென்றுகொண்டி
ருக்கிறீர்கள். மாற்றுத்திறனாளியான சக வகுப்பு மாணவர் ஒருவர் தன்னுடைய
ஊன்றுகோலை ஊன்றித் தெருவில் நடந்துகொண்டிருக்கிறார். அவரையும் வண்டியில்
ஏற்றிக்கொண்டு சைக்கிளை மிதித்தால் மேலும் தாமதமாகும். இப்போது என்ன
செய்யலாம்?
உனக்குள் ஒருவன்
வரலாறு, இலக்கியப் பாடங்களை மாணவர்களுக்கு இனிப்பாக்கச் சிறந்த வழி
கதாபாத்திரங்களை ஏற்று நடிப்பது, கதாபாத்திரமாக மாறி உரையாடுவது போன்ற
நுட்பங்களைக் கையாள்வது. தாங்கள் படித்துக்கொண்டிருக்கும் பாடமாகவே
மாணாக்கரை மாற்றும் சூட்சுமம் இதில் உள்ளது.
புதிய கருத்துகளுக்கு வரவேற்பு
உங்களுடைய கற்பித்தல் முறை, அணுகுமுறை குறித்து மாணவர்களின் கருத்தை
வெளிப்படையாக அறியும் அமர்வு. இதைப் பொதுவாக வகுப்பில் எல்லோர்
முன்னிலையிலும் செய்யலாம் அல்லது தனித்தனியாக எழுத்துவடிவில் பெறலாம். இதன்
மூலம் நீங்கள் எப்படிப்பட்ட ஆசிரியர் என்பதையும், என்னவெல்லாம் புதிய
மாற்றங்கள் தேவை என்பதையும் மாணவர்கள் வழியாகக் கற்றுக்கொள்ளலாம்.
ஒன்றுகூடிப் பயில்வோம்
வாசிப்பு வட்டம், சூழலியல் குழு, திரைப்பட ஆர்வலர் அமைப்பு போன்றவை
குழுவாக ஒன்றிணைந்து ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபடவும் கற்றலைப்
புத்துணர்வூட்டும் செயலாக மாற்றவும் கைகொடுக்கும். இதுபோன்று மேலும் பல
புதுமையான கற்பித்தல் முறைகள் உலகின் தலைசிறந்த பள்ளிகளில்
கையாளப்பட்டுவருகின்றன. பாடத்தை நடத்துவதற்குத்தானே எனக்குச் சம்பளம்
தரப்படுகிறது. இவற்றையெல்லாம் செய்ய வேண்டுமா என்று ஆசிரியர்கள்
யோசிக்கலாம். ஆனால், தகவல்களின் நூற்றாண்டில் வாழ்ந்துகொண்டிருக்கும்
இன்றைய மாணவர்களுக்கு, அடிப்படைத் தகவல்களைக் கற்பிக்க ஆசிரியர்கள் தேவை
இல்லை.
விரல்நுனியில் கோடிக்கணக்கான தகவல்கள் அவர்கள் முன்பு
குவிந்துவிடுகின்றன. அதைத் தாண்டி சமூக அரசியல் குறித்த கூர்மையான
விமர்சனப் பார்வையை, யாரையும் பிரதி எடுக்காமல் தனித்துவத்தை
வளர்த்தெடுக்கும் பாங்கை, தன்னைப் போல் பிறரையும் நேசிக்கும்
மனப்பக்குவத்தை, சூழலை எதிர்கொள்ளும் சமயோஜிதப் புத்தியை, தோல்வியை
எதிர்கொள்ளும் தன்னம்பிக்கையை, எதையும் ஆழமாக அலசி ஆராய்ந்து
புரிந்துகொள்ளும் அணுகுமுறையை, சக மனிதர்களுடன் ஒத்துழைத்து ஒன்றுகூடி
செயல்படும் குழு மனப்பான்மையை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துபவராக
இருப்பவரே 21-ம் நூற்றாண்டின் ஆசிரியர்.
கட்டுரையாளர்,
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...