கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு
பிறப்பிக்கப்பட்டது. அதனால் கல்வி உள்ளிட்ட அனைத்துத் துறைகளும்
முடங்கியுள்ளன. இருப்பினும் ஜூன் 1ம் தேதி முதல் கேரளாவில் கல்வி தொடர்பான
செயல்பாடுகளைத் தொடங்கியுள்ளது கேரள அரசு. 'ஃபர்ஸ்ட் பெல்' என்ற பெயரில்
ஜூன் 1-ம் தேதி அதிகாரபூர்வமாக ஆன்லைன் வகுப்புகள் தொடங்கியுள்ளன.
இந்த வகுப்புகளில் அனைத்து மாணவர்களும் பயன்பெற வேண்டும் என அரசு முடிவுசெய்திருந்தது. எனினும் கணக்கெடுப்பு முடிவுகளின் படி ஒன்றாம் வகுப்பு முதல் 12 -ம் வகுப்பு வரை பயிலும் 2.42 லட்சம் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்வதற்கான ஸ்மார்ட்போன் அல்லது தொலைக்காட்சி வசதிகள் இல்லை. இதனால் அரசு மற்றும் தன்னார்வளர்களும் இணைந்து, அனைத்து மாணவர்களின் கல்வி மற்றும் எதிர்காலத்தைக் காக்கும் பொருட்டு மாணவர்களுக்கு தேவையான ஏற்பாடுகளைச் செய்யக் களமிங்கியுள்ளனர். நாட்டின் கல்விக்கான இந்த மிக முக்கிய தேவையைப் புரிந்துகொண்டு கட்சிகளைக் கடந்து அரசையும் தாண்டி வணிக நிறுவனங்கள், முன்னாள் மாணவர் சங்கங்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் உதவ முன்வந்துள்ளனர்.
பெரும்பாலும் கேரளாவின் கிராமங்களில் உள்ள மாணவர்களே ஆன்லைன் வகுப்புகளை அணுகுவதில் சிக்கல் நிலவுவதனால் கிராமங்களில் உள்ள மாணவர்களுக்கு அவர்களது உள்ளூர்களிலே மாணவர்கள் சேர்த்து வகுப்புகளைக் காண்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. ``இப்படி ஊர்களில் பொதுவான வகுப்பறைகளை உருவாக்குதல் மூலம் மாநிலத்தின் அனைத்துப் பள்ளி மாணவர்களும் ஆன்லைன் வகுப்புகளில் கலந்துள்ளதை உறுதிப்படுத்த முடியும்" என 'சர்வ சிக்ஷா அபியான் திட்ட இயக்குநர் டாக்டர் ஏ பி குட்டிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சில கிராமங்களில் முன்னாள் மாணவர் சங்கங்கள் மற்றும் வாட்ஸ் அப் குழுக்கள் மூலம் நிதி திரட்டப்பட்டு மாணவர்களுக்கு தொலைக்காட்சி முதலிய வசதிகள் செய்யப்படுகின்றன. இதனை ஊக்குவிக்கும் விதமாக மாநில தொழில்துறை சார்பில் அறிவிக்கப்பட்ட "டிவி சேலஞ்ச்" என்ற திட்டத்தின் பகுதியாக உள்ளூர் தொழிலதிபர்கள் மூலம் மாணவர்களுக்கு தொலைக்காட்சி வசதிகள் செய்ய நிதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பொது வகுப்பறைகளுக்குத் தேவையான தொலைக்காட்சி மடிக்கணினி முதலிய பொருள்களை வாங்கும் செலவீனங்களை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து செய்து கொள்ளவும் மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்தியாவின் பாரம்பர்யமாக அறியப்படும் அங்கன்வாடி, படிப்பகம், உடற்பயிற்சிக் கூடம் எனக் கேரளாவின் அனைத்து கிராமங்களிலும் குறைந்தது அனைத்து மக்களும் பயன்படுத்தக்கூடிய பொதுவான இடம் உள்ளது. தற்போது இந்த இடங்களிலேயே மாணவர்களுக்கான போது வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. அரசு மற்றும் அரசு சார்ந்த தனியார் பள்ளிகளில் வேலை செய்யும் ஆசிரியர்கள் இந்த இடங்களில் பயிலும் மாணவர்களுக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
உதாரணமாக வயநாடு பகுதியில் அதிகபட்சமாக 9,200 மாணவர்கள் தனிப்பட்ட முறையில் தொலைக்காட்சி அல்லது கைபேசி மூலம் ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்ள இயலாத சூழலில் உள்ளனர்.
வயநாட்டின் ஆளும் சிபிஎம் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ, சி.கே.சசீந்திரன், "1,331 புதிய பொதுவான கல்வி மையங்களை ஏற்பாடு செய்துள்ளார். பெரும்பாலும் பழங்குடியினர் வசிக்கும் காலனிகளில் அமைத்துள்ளனர். "நாங்கள் ஈடுபட்டுள்ள பணி மிகப் பெரியது, மின் இணைப்புகள் மற்றும் தொலைக்காட்சி வசதிகள் மாணவர்களுக்குக் கிடைக்கப்பெருவதனை உறுதி செய்கிறோம். இந்த வார இறுதிக்குள் அனைத்து வசதிகளும் பொது கல்வி மையங்களில் கிடைக்கும்’’ என்கிறார்.
"மடிக்கணினிகள், ப்ரொஜெக்டர்கள் மற்றும் டிவி போன்ற உபகரணங்கள் பள்ளிகளிலிருந்து புதிதாக அமைக்கப்பட்டுள்ள பொது மையங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன. சில மாணவர்களுக்கு வீடுகளிலேயே பெற்றோர்கள் ஸ்மார்ட்போன் வைத்திருந்தாலும் அதனை அவர்கள் பணியிடங்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டியுள்ளது. எனினும் சிலர் வீட்டிற்கு வந்ததும் அவர்களின் பிள்ளைகளின் வகுப்பிற்காக ஸ்மார்ட்போனைக் கொடுக்கிறார்கள்" எனக் கேரள உள்கட்டமைப்பு மற்றும் கல்விக்கான தொழில்நுட்பத்தின் (KITE) மாவட்ட ஒருங்கிணைப்பாளர், அரசு பள்ளிகளில் தகவல் தொழில்நுட்பம் இயக்கப்பட்ட கல்விக்கான நோடல் நிறுவனத்தைச் சேர்ந்த வி.ஜே.தாமஸ் கூறியுள்ளார்.
இந்தக் கல்வி மையங்களில் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தொலைக்காட்சி சேனலில் குறிப்பிட்ட நேரத்திற்குக் குறிப்பிட்ட வகுப்புகளுக்கு என அனைத்துப் பள்ளி வகுப்புகளுக்கும் கற்பிக்கப்பட்டு வருகிறது. ஆரம்ப காலத்தில் அனைவரும் கற்க முடியாத சூழலில் வெளியான பாடப் பிரிவுகள் மீண்டும் ஒளிபரப்பப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வகுப்புகளில் ஒன்றாம் வகுப்பிற்குப் பாடல்கள் மூலம் பாடம் எடுத்து கடந்த வாரங்களில் இணையத்தில் பிரபலமான சுவேதா டீச்சர் தான் அரசின் இந்த முயற்சிகள் எந்த அளவிற்கு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது என்பதற்கான சிறந்த உதாரணம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...