நாளையுடன் 5-ம் கட்ட ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில்
மருத்துவ நிபுணர்கள் குழுவுடன், எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை
நடத்துகிறார். இந்த கூட்டத்தில் ஊரடங்கு குறித்து முக்கிய முடிவு
எடுக்கப்படுகிறது.
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அரசு உரிய நடவடிக்கை எடுப்பதற்கு, தேவையான ஆலோசனை மற்றும் பரிந்துரைகளை வழங்கும் வகையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் துணை இயக்குனர் பிரதீப் கவுர் தலைமையில் 19 பேர் கொண்ட மருத்துவ நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது.இந்த குழு, தாங்கள் செய்த ஆய்வுகளின் அடிப்படையிலான முடிவுகளை, முதல்அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி அடுத்து செய்யவேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆய்வறிக்கையை அளித்து வருகிறது. அதன் அடிப்படையில் தமிழக அரசு முக்கிய நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.தமிழகத்தில் தற்போது 5-ம் கட்ட ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர், மதுரை உள்ளிட்ட சில முக்கிய மாவட்டங்களிலும் ஊரடங்குக்குள் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு நாளை (செவ்வாய்க்கிழமை) நிறைவடைய உள்ளது.
இந்த நிலையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் இன்று (திங்கட்கிழமை) ஆலோசனை நடத்துகிறார்.சென்னையில் உள்ள தலைமைச்செயலகத்தில் காலை 10 மணிக்கு நடைபெற உள்ள இந்த ஆலோசனை கூட்டத்தில், மருத்துவ நிபுணர்கள் குழுவினர் தங்கள் ஆலோசனைகளை, எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவிக்க உள்ளனர். இதன் அடிப்படையில் முக்கிய முடிவுகள் குறித்து தமிழக அரசு அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது.தமிழகத்தில் தற்போது அமலில் உள்ள ஊரடங்கினை மேலும் நீட்டிப்பதா? அல்லது பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை தளர்த்துவதா? என்பது குறித்து முக்கிய முடிவுகள் இந்த கூட்டத்துக்கு பின்னர் எடுக்கப்பட உள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் ஊரடங்குமேலும் நீட்டிப்பதற்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்து மருத்துவ நிபுணர்கள் குழு உடனான ஆலோசனை கூட்டத்துக்கு பின்னர் தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடும் என்று தெரிகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...