அண்மையில்
உலகம் முழுவதும் பேரிடரை விளைவித்து வரும் தீநுண்மி - 19 இலிருந்து மக்கள்
விடுபடும் நாள் எந்நாளோ? தெரியவில்லை. ஒவ்வொருவரும் இக்கொடும்
நோய்த்தொற்றுப் பீடிப்பதிலிருந்து தப்பிக்க தங்கள் இன்னுயிரைக் கையில்
பிடித்துக்கொண்டு உழலும் அவலம் கொடுமையானது. இக்கொடிய சூழலில் அதிகம்
பாதிக்கப்பட்ட பிரிவினராக மாணவச் சமுதாயம் காணப்படுகிறது. ஒரு நாட்டின்
வளமும் நம்பிக்கையும் மாணவர்களே ஆவர். கல்வி இனி செல்ல வேண்டிய பாதை
அடர்ந்த இருள்வெளியாக இருப்பது கண்கூடு.
இத்தகு
கடின சூழலில் இணையவழியிலான கற்றல் மற்றும் கற்பித்தல் வகுப்புகள் மிகுந்த
முக்கியத்துவம் பெறுகின்றன. மாறிவரும் புதிய சூழலுக்கு ஆசிரியச் சமூகத்தைப்
பழக்கவும் இயற்கைப் பேரிடரைத் திறம்படக் கையாளும் ஆளுமையை அடையவும்
பயிற்சிகள் இன்றியமையாதவை. பயிற்சிகளின் குறிக்கோள்கள் முழுமையடைய சுய
முயற்சி அவசியம். ஆசிரியர்களிடையே இதனைத் தூண்டித் துலங்க செய்ய தன்னலம்
கருதாத முன்மாதிரிகள் ஒரு சிலர் தேவைப்படுகின்றனர்.
இத்தகையோரில்
பலர் தம் மேல் பேரொளி ஒன்றை செயற்கையாகப் பரவ விட்டுக்கொண்டு பள்ளிப்
பிள்ளைகள் மற்றும் சமூகத்தின்மேல் அக்கறைக் துளியுமின்றி தம்பட்டம்
அடித்துக் கொண்டு திரியும் கும்பலில் ஆட்படாமல் அகப்படாமல் பிறர் நலம்
காப்பதையே முழுமூச்சாகக் கொண்டு விளங்கும் தூண்டுகோல்கள் மிக சொற்பம்.
அந்த
வகையில் மன்னையின் மைந்தராகப் பிறந்து தற்போது செங்கல்பட்டு மாவட்டத்தில்
சிங்கபெருமாள்கோவிலில் வசித்துக்கொண்டு கருநிலம் ஊராட்சி ஒன்றிய
தொடக்கப்பள்ளியின் இடைநிலை ஆசிரியரும் முனைவருமான ப. இரமேஷ் என்பவர்
தனித்துவமானவர். இவரை ஆசிரியர்களின் ஆசிரியர் என்று அழைப்பது சாலப்
பொருத்தம். நாம் அறிந்து வைத்திருக்கும் இவர் போன்ற பல ஆளுமைகள் ஆசிரியர்
மற்றும் அலுவலர்கள் இதயங்களில் மட்டும் வீற்றிருந்தால் போதாது. பிஞ்சு
உள்ளங்களில் நெஞ்சங்களில் நீங்காமல் நிறைந்திருப்பது இன்றியமையாதது அல்லவா?
ஊர்க்குருவி உயரப் பறந்தாலும் சின்னஞ்சிறு கிளையில் அதற்காகவே இருக்கும்
குட்டிக்கூடு மிக முக்கியம். அதுபோல் தான் ஒவ்வொரு ஆசிரியருக்கும்
அவருக்கென்று தவமிருக்கும் பள்ளிப் பிள்ளைகளின் கல்வி நலன் மிக முக்கியம்.
அந்த
வகையில் இவர் ஆசிரிய இனத்திற்கு மட்டுமல்ல மாணவ சமுதாயத்திற்கும் பெரிய
கொடுப்பினை. இவர் வகுப்பில் பயிலும் அனைத்து தொடக்கநிலை மாணவர்களும்
முழுமையாகத் தமிழ் மற்றும் ஆங்கிலம் வாசிக்க தொடர்ந்து பயிற்சி அளித்தன்
விளைவாக வாசிக்கக் கற்றுக் கொண்டுள்ளனர். ஒவ்வொரு வகுப்பிலும் ஆசிரியர்கள்
அனைவருக்கும் அறைகூவலாக இருப்போர் மெல்லக் கற்கும் மாணவர்கள்தான்.
அவர்களையும் கல்வியில் முழுமையடைய வைப்பதே ஒரு சிறந்த ஆசிரியரின்
கடமையாகும்.
அத்தகு,
மெல்லக் கற்கும் மாணவர்களை வாசிக்க வைப்பதற்கு தொழில்நுட்ப உலகில்
அனைத்துக் குழந்தைகளும் விரும்பும் செல்பேசி, கைக்கணிணி, மேசைக்கணிணி
ஆகியவற்றைப் பயன்படுத்தி தமிழ், ஆங்கில எழுத்துக்கள் வாசிக்கத் தெரியாத
மாணவர்களுக்கும் விளையாட்டு முறையில் பல்வேறு செயலிகள் மூலம், எழுத்துக்களை
வாசிக்கவும் உச்சரிக்கவும் கற்றுத்தருவது வாடிக்கை. ஆங்கில வாசிப்பிற்கு
ஒன் நோட் (One Note) இல் காணப்படும் ஆழ் வாசிப்பு (Immersive Reader)
மற்றும் குழுக்கற்றலை மேம்படுத்த பகுப்புமுறை (SPLITTER METHOD)
மென்பொருள்களை ஏழை எளிய மாணவர்களிடம் அறிமுகம் செய்து வைத்து கற்றலை
மேம்படுத்தியது அனைவரின் பாராட்டைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
மேலும்,
ஊருக்கு வெளியே ஏரிக்கரை ஓரமாக பல குடிசைகளில் தங்கி இருந்த பழங்குடியின
மக்களின் பள்ளி செல்லாக் குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்க எடுத்த
முயற்சியின் விளைவாக 15 பேர் பள்ளியில் புதிதாகச் சேர்க்கப்பட்டனர்.
அடுத்ததாக, பள்ளியின் வகுப்பறைச் சூழலை மாற்றியமைக்க வேண்டும் என்ற
கனவுகளோடு வேல்ட் விஷன் நிறுவனத்தை அணுகிக் கேட்டதன் விளைவாக இரண்டரை
இலட்சம் நிதியுதவியில் கனவினை நனவாக்கிக் கொண்டது சிறப்பு.
தமிழ்நாடு
டிஜிட்டல் டீம் என்ற வாட்சப் குழு மூலமாக கொரோனா கால ஊரடங்கில் வீட்டில்
இருக்கக்கூடிய ஆசிரியர்கள் பயன் பெறும் வகையில் ஜூம் ஆப் வழியாக ICT (
கணினி தொழில்நுட்பம்) ஆன்லைன் பயிற்சியை ஏப்ரல் மாதம் 01.04.2020 முதல்
13.04.2020 வரை 13 நாட்கள் ஆசிரியர்களுக்கு இலவச ஆன்லைன் பயிற்சி
வழங்கியதும் இந்த பயிற்சியில் 27 தலைப்புகளில் 27 வகுப்புகள் 25
கருத்தாளர்கள் கலந்து கொண்டு பயிற்சி அளித்ததும் ஒரு வகுப்புக்கு 100
ஆசிரியர்கள் வீதம் தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாவட்ட ஆசிரியர்கள்
2700 பேர் இந்த பயிற்சியின் வாயிலாக தொழில்நுட்பம் சார்ந்த பாட
கருத்துக்களைக் கற்றுப் பயன் அடைந்ததும் ஒரு மைல்கல் எனலாம். பின்னர்
20.04.2020 முதல் 22.04.2020 வரை மூன்று நாட்கள் 3 வகுப்புகள்,
மைக்ரோசாப்ட் மென்பொருள் கருவிகள் மூலம் வகுப்பறை கற்பித்தல் என்னும்
தலைப்பில் வழங்கிய பயிற்சியில் 500 ஆசிரியர்கள் பயன்பெற்றது அறியத்தக்கது.
மூன்றாம்
கட்டமாக மே மாதம் 08.05.2020 முதல் 17.05.2020 வரை 10 நாட்கள்
மைக்ரோசாப்ட் டீம்ஸ் ( Microsoft Teams Application) செய்தி வழியாக
வழங்கப்பட்ட பயிற்சியில் முதல் நான்கு நாட்கள் TNTP, DHIKSHA, E LEARN
முதலான கற்றல் கற்பித்தல் வள வலைத்தளங்களில் ஆசிரியர்கள் எவ்வாறு
பயன்படுத்துவது, எப்படி பங்களிப்பு செய்வது என்பது குறித்தும் பயிற்சிகள்
வழங்கப்பட்டன. அதன்பின், பாடங்களை எவ்வாறு மின் பாடப்பொருள் (e-Content)
காணொலியாகத் தயாரிப்பது, வகுப்பறையில் தொழில்நுட்பக் கருவிகளைப்
பயன்படுத்திப் பாடங்களை எவ்வாறு கற்பிப்பது என்பது குறித்தும் பயிற்சிகள்
இவரால் நடத்தப்பெற்றன. இந்த பயிற்சியில் 2000 ஆசிரியர்கள் பயன்பெற்றனர்.
மொத்தமாக 26 நாட்களில் 50 இணையவழிப் பயிற்சி வகுப்புகள் இவரது
ஒருங்கிணைப்பில் பல்வேறு கருத்தாளர் பெருமக்களின் உதவியோடு நடைபெற்றதும்
பயிற்சியில் பங்குபெற்ற அனைவருக்கும் மின் சான்றிதழ் (e-Certificate)
வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.
ஆசிரியர்களைப்
பணி சார்ந்து வளப்படுத்துவது என்பது காலத்தின் கட்டாயம். மாறிவரும் புதிய
புதிய மாற்றங்களுக்கேற்ப தம்மைத் தகவமைத்துக் கொள்ளும் ஆசிரியப் பெருமக்கள்
மாணவர்களுக்குக் கிடைத்த வரம் ஆகும். அதற்கு திறன்மிகு பயிற்சியும்
தன்னார்வ முயற்சியும் உரம் எனலாம். நண்பர் இரமேஷ் தம் அயராத முயற்சியினால்
நாடு முழுவதிலும் உள்ள ஆசிரியர்களுக்கு வழிகாட்டியாகவும் ஏழை, எளிய,
பழங்குடியின மாணவர்களின் இருண்ட வாழ்க்கையில் ஒளிரும் ஆசிரியராகவும்
விளங்கி வருவது பெருமையாகும்.
முனைவர் மணி கணேசன்
நன்றி: திறவுகோல் ஆனி மாத மின்னிதழ்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...