உத்தரபிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்களில் கஸ்தூரிபா
காந்தி சிறுமிகள் பள்ளி (கேஜிபிவி) எனும் பெயரில் நடுநிலைப்பள்ளிகள்
நடைபெறுகின்றன. தங்கிப் பயிலும்வசதிகளுடனான இந்த பள்ளிகளில் ரூ.30,000
ஒப்பந்த ஊதியத்தில் ஆசிரியைகள் நியமிக்கப்படுகின்றனர்.
இவர்களின் விவரங்களை மாநில அடிப்படைக் கல்வித்துறை டிஜிட்டல் முறையில் தொகுத்து வருகிறது. இந்நிலையில் அனாமிகா சுக்லா என்ற ஆசிரியை 25 பள்ளிகளில் 13 மாதங்களாக ரூ.1 கோடி ஊதியம் பெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து,மே 6-ல் காஸ்கஞ்ச் மாவட்ட காவல்துறையால் அனாமிகா சுக்லா என்ற பெயரில் ஒருவர் கைதானார். இவரிடம் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், நேற்று முன்தினம் உண்மையான அனாமிகா சுக்லா, தன் கணவர் துர்கேஷ் குமார் சுக்லாவுடன் கோண்டா மாவட்ட அடிப்படைக் கல்வி அதிகாரியான இந்திரஜித் சிங் முன் ஆஜரானார்.
உண்மையான அனாமிகா புகார்
அப்போது அனாமிகா சுக்லா, தனக்கு இதுவரை வேலை கிடைக்கவில்லை என்றும், தனது சான்றிதழ்மூலம் பல பெண்கள் கேஜிபிவி பள்ளிகளில் பணியாற்றி ஊதியம்பெற்று ஊழல் செய்து வருவதாகவும் புகார் தெரிவித்தார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த இந்திரஜித் சிங் பிரஜாபதி, உண்மையான அனாமிகா சுக்லாவிடம் விசாரணை நடத்தி முதல்கட்ட அறிக்கையை அரசுக்கு அளித்துள்ளார். இதில்பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
பள்ளிப்படிப்பு முதல் ஆசிரியர் பயிற்சிப்பள்ளியில் பட்டம் பெற்றது வரையில் சிறந்த மாணவியாக நல்ல மதிப்பெண் பெற்றுள்ளார் அனாமிகா. 2017 முதல் அவர் உத்தரபிரதேசத்தின் பல்வேறு மாவட்ட கேஜிபிவி பள்ளிகளுக்கு விண்ணப்பித்துள்ளார். ஆனால்நேர்முகத்தேர்வுக்கு அனாமிகாவால் ஆஜராக முடியாத நிலைஏற்பட்டுள்ளது. இதை பயன்படுத்திஅனாமிகா பெயரில் ஆள்மாறாட்டம் செய்து வேறு பெண்கள் அப்பணியை பெற்றுள்ளனர். இதில் ஒருவராக காஸ்கஞ்ச் காவல் துறையினரால் கைதான பெண்ணின் உண்மையான பெயர்பிரியா சிங் என்பது தெரியவந்துள்ளது. இவரை போல பணியில்சேராமலே மேலும் பலர் ஆசிரியைகளின் பெயரில் ஊதியம் மட்டும் பெற்று வந்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்குஅடிப்படைக் கல்வித் துறை அதிகாரிகள் ஆதரவு பெற்ற ஒரு கும்பல் உறுதுணையாக இருந்துள்ளது.
இதனால், கேஜிபிவியில் பணியாற்றி வரும் 5,000 ஆசிரியர்களை பற்றியும் விசாரிக்க அமைச்சர் சதீஷ் துவேதி உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே, தான் வசிக்கும் கோண்டா நகரப் பகுதியின் காவல் நிலையத்திலும் அனாமிகா சுக்லா புகார் அளித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...