Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜூன் 11 முதல் பக்தர்களுக்கு அனுமதி


திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் ஜூன் 11ஆம் தேதி முதல் ஒரு நாளைக்கு 6 ஆயிரம் பேருக்கு ஏழுமலையான் தரிசனம் வழங்கத் தேவஸ்தானம் முடிவு செய்துள்ளதாக தேவஸ்தான செயல் அதிகாரி அனில்குமார் சிங்கால் தெரிவித்தார்.

இதுகுறித்து திருமலை அன்னமய்ய பவனில் வெள்ளிக்கிழமை மதியம் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் மேலும் கூறியதாவது.

''மத்திய, மாநில அரசுகளின் உத்தரவின்படி வரும் ஜூன் 8ம் தேதி முதல் ஏழுமலையான் தரிசனம் திருமலையில் தொடங்கப்பட உள்ளது. ஜூன் 8 மற்றும் 9 தேதிகளில் தேவஸ்தான ஊழியர்களும், ஜூன் 10ம் தேதி திருமலையில் வசிக்கும் உள்ளூர் வாசிகளுக்கும் தரிசன அனுமதி வழங்கப்பட உள்ளது. அதன்பின் ஜூன் 11ம் தேதி முதல் இதர மாநிலங்களிலிருந்து வரும் அனைத்து பக்தர்களுக்கும் தரிசனம் தொடங்கப்பட உள்ளது.

6 ஆயிரம் பேர்

திருமலையில் தினசரி 6 ஆயிரம் பேருக்கு தரிசனம் வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. காலை 6.30 மணிமுதல் மாலை 7 மணிவரை ஒரு மணி நேரத்திற்கு 500 பேர் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளது. முதல் ஒரு மணி நேரம் வி.ஐ.பி தரிசனமும், அதற்கு பின் சர்வ தரிசனமும் தொடங்கப்பட உள்ளது. 3 ஆயிரம் பேருக்கு ஆன்லைன் மூலமாகவும், அலிபிரியில் உள்ள டிக்கெட் கவுண்டர் மூலம் 3 ஆயிரம் பேருக்கு நேரடி தரிசன டிக்கெட் வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அலிபிரி நடைபாதை மார்கத்தில் காலை 5 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டுமே பக்தர்கள் திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுவர். ஸ்ரீவாரிமெட்டு மார்கம் முற்றிலும் மூடப்பட்டுள்ளது. மலைபாதைகள் அதிகாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 65 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் 10 வயதிற்கு உட்பட்டவர்களுக்கும் தரிசன அனுமதி இல்லை. நாட்டில் தனிமைபடுத்தப்பட்ட பகுதிகளிலிருந்து பக்தர்கள் தயவு செய்து ஏழுமலையான் தரிசனத்திற்கு வரவேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

ஆன்லைன் முன்பதிவு

வரும் ஜூன் 8ம் தேதி முதல் ஆன்லைன் முன்பதிவுகள் தொடங்க உள்ளது. ஜூன் மாத தரிசன கோட்டா தேவஸ்தான இணையதளத்தில் வைக்கப்பட்டுள்ளது. நேரடியாக திருப்பதிக்கு வந்து டிக்கெட் பெற விரும்பும் பக்தர்கள் ஒருநாள் முன் அலிபிரியில் தரிசன அனுமதி பெற வேண்டும். வெளி மாநிலங்களிலிருந்து வருபவர்கள் தங்கள் மாநில அரசிடமிருந்து உரிய அனுமதி பெற்று வரவேண்டும். புரோட்டோகால் வி.ஐ.பிக்களுக்கு மட்டுமே வி.ஐ.பி தரிசனம் வழங்கப்படும்.

சோதனைகள்

ஏழுமலையான் தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் அலிபிரி சோதனை சாவடியில் முழுமையாக தெர்மல் ஸ்கேனிங் செய்த பின் திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுவர். அதற்காக அலிபிரியில் சோதனை மையம் ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்கு 200 பக்தர்களுக்கு ராண்டம் சோதனை செய்யும் விதம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் மட்டுமல்லாமல் பக்தர்கள் வரும் வாகனங்கள், அவர்களின் உடைமைகள் உள்ளிட்டவையும் சானிடேஷன் செய்யப்பட உள்ளது.

அறைகள் முன்பதிவு

திருமலைக்கு வரும் பக்தர்கள் அறைகள் பெற்றுக் கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் டிக்கெட் பெற்றவர்கள் தங்கள் அறைகளை ஆன்லைன் மூலமாகவே முன்பதிவு செய்து கொள்ளலாம். ஒரு அறையில் 2 பேர் மட்டுமே தங்க அனுமதிக்கப்படுவர். ஒருநாள் ஒற்றை எண் கொண்ட அறைகளும், மறுநாள் இரட்டை எண் கொண்ட அறைகளும் பக்தர்கள் தங்க வழங்கப்படும். திருமலையில் ஒருநாள் தங்குவதற்கு மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். அவர்கள் காலி செய்த பின் அறைகள் முழுவதும் சானிடைஸ் செய்யப்பட்டு மற்றவர்களுக்கு அளிக்கப்படும்.

தரிசனம்

பக்தர்கள் தரிசனத்திற்குச் செல்ல 2 வழிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. முககவசம் அணிந்து கைகளை சானிடைசரால் சுத்தம் செய்த பின் பக்தர்கள் தரிசன வரிசையில் செல்ல அனுமதிக்கப்படுவர். தரிசன வரிசையிலும் பக்தர்கள் தெர்மல் ஸ்கேனிங் செய்யும் விதம் மருத்துவ ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் செல்லும் தரிசன வரிசைகள், காத்திருக்கும் அறைகள் உள்ளிட்டவை 2 மணிநேரத்திற்கு ஒருமுறை சானிடைஸ் செய்யப்பட உள்ளது. பக்தர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் தேவஸ்தான ஊழியர்களுக்கு பிபி கிட் வழங்கப்படும்.

ரத்து

தரிசன வரிசையில் பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் விதம் கோடுகள் வரையப்பட்டுள்ளது. ஏழுமலையான் தரிசனம் முடிந்த பின் தீர்த்தம், சடாரி வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. ஏழுமலையான் கோயிலுக்குள் உள்ள உப ஆலயங்கள் தரிசனமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. உண்டியல் காணிக்கை செலுத்தும் இடங்களில் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இவற்றை முடித்து கோயிலை விட்டு வெளியில் வரும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குவது குறித்து ஆந்திர அரசிடம் தேவஸ்தானம் அனுமதி கோரியுள்ளது. அனுமதி கிடைத்த பின் சுகாதாரமான முறையில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்படும்.


5 மொழிகளில் திருமலைக்கு வரும் பக்தர்கள் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் உள்ளிட்டவை குறித்து 5 மொழிகளில் அறிவிப்புகள் வெளியிடப்பட உள்ளது. மத்திய, மாநில அரசுகளின் வழிமுறைகளும் அதில் குறிப்பிடப்பட உள்ளது.

அன்னதானம்

தரிசனம் முடித்த பக்தர்கள் லட்டு கவுண்டருக்குச் சென்று லட்டு பிரசாதம் பெறுவர். அங்கும் சமூக இடைவெளியைப் பின்பற்றும் விதம் கோடுகள் வரையப்பட்டுள்ளது. அன்னதான கூடத்தில் சமூக இடைவெளியுடன் பக்தர்களுக்கு சுகாதாரமான முறையில் அன்னதானம் வழங்கப்படும். ஆனால் திருமலையில் உள்ள இதர அன்னதான கவுண்டர்களில் உணவு வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. காத்திருப்பு அறையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு அவர்களின் காத்திருப்பு நேரத்தைக் கணக்கிட்டு அன்னதானம் வழங்குவது குறித்து முடிவு மேற்கொள்ளப்படும்.

பக்தர்கள் தங்கள் காலனிகளை தாங்களே கையாலும் விதம் பல இடங்களில் காலனி அறைகள் நிறுவப்பட்டுள்ளது. அங்குப் பக்தர்கள் தங்கள் காலனிகளை வைத்து அவர்களை எடுத்துச் செல்லலாம். முடிக்காணிக்கை செலுத்தும் இடத்திலும் சமூக இடைவெளி கடைப்பிடிக்கும் விதம் கோடுகள் வரையப்பட்டுள்ளது.

திருப்பதி

திருப்பதியில் உள்ள தேவஸ்தானத்திற்கு சொந்தமான வாடகை அறை வளாகங்களிலும் திருமலையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் கடைப்பிடிக்கப்படும். திருப்பதி மற்றும் இதர பகுதிகளில் உள்ள தேவஸ்தான கோயில்களிலும் பக்தர்களைத் தரிசனத்திற்கு அனுமதிக்க டோக்கன் முறை அமல்படுத்தப்பட உள்ளது. எனவே, பக்தர்கள் மத்திய, மாநில அரசுகளின் அறிவுரைகளைக் கடைப்பிடித்து, திருமலைக்கு வந்து ஏழுமலையானை மன நிறைவுடன் தரிசனம் செய்து செல்ல வேண்டும்’’, என்று அவர் கூறினார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive