இனிமை, எளிமை நிறைந்த புதிய கல்வி முறையை
அறிமுகப்படுத்திய இத்தாலி மருத்துவரும், கல்வியாளருமான மரியா மான்டிசோரி
(Maria Montessori) மறைந்த தினம் - மே 6.
இத்தாலியின் கிராவல்லே நகரில் கற்றறிந்த நடுத்தரக் குடும்பத்தில் (1870) பிறந்தார். ரோம் நகருக்கு குடும்பம் குடிபெயர்ந்தது. பெண் கல்விக்கான முக்கியத்துவமும், வாய்ப்புகளும் குறைவாக இருந்ததால் ஆண்களுக்கான தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் சேர்ந்தார்.
பெண் என்பதால் மருத்துவப் படிப்பில் சேர அனுமதி மறுக்கப்பட்டது. போப் 13-ம் லியோவின் சிபாரிசுடன் ரோம் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் 1896-ல் சேர்ந்தார். மருத்துவப் படிப்பில் சிறப்பாகத் தேர்ச்சியடைந்து, இத்தாலியின் முதல் பெண் மருத்துவர் என்ற பெருமையைப் பெற்றார். பல்கலைக்கழக மருத்துவமனையில் மருத்துவராக நியமிக்கப்பட்டார்.
குழந்தைகள் நலன், உளவியலில் அதிக கவனம் செலுத்தினார். சான் லாலென்சோ நகரில் ஏழைத் தொழிலாளர் குழந்தைகளின் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார். குழந்தைகளின் இயல்பான உளவியல் பண்புகளுக்கு ஏற்ப, சுதந்திரமான சூழலில் அவர்களுக்குக் கல்வி அளிக்கும் முறையை மேம்படுத்தினார்.
நோட்டுப் புத்தகங்களுக்கு பதிலாக பொம்மை, வண்ண அட்டை, ஒலி எழுப்பும் கருவிகள், ஓவிய, வண்ணத்தாள்கள், புட்டிகள் போன்றவற்றைக் கொண்டு, கற்றலை சுவாரஸ்யமாக மாற்றினார். குழந்தைகளும் பாடங்களை எளிதாகக் கற்றனர். இது உலகெங்கும் பரவியது.
அமெரிக்கா, சுவிட்சர்லாந்து, ஸ்பெயின், நெதர்லாந்து, பிரிட்டன் ஆகிய நாடுகள் அழைப்பு விடுத்தன. அங்கெல்லாம் சென்று இந்த புதிய கல்வி முறை குறித்து விளக்க உரை நிகழ்த்தினார். உலகம் முழுவதும் சிறுவர் கல்வி முறையில் ஒரு புதிய உளவியல் புரட்சி மலர்ந்தது.
கற்பித்தல் குறித்து ரோம் பல்கலைக்கழகத்தில் பயின்றார். சுமார் 200 ஆண்டுகளின் கல்வி முறை குறித்து ஆராய்ந்தார். பல நூல்களை எழுதினார். பல்வேறு இடங்களில் இவர் ஆற்றிய உரைகள் தொகுக்கப்பட்டும் நூல்கள் வெளியாகின.
புதுமைக் கல்வித் திட்டத்துக்கான கோட்பாடுகளை 1897-ல் உருவாக்கினார். குழந்தை பிறந்தது முதல் 3 வயது வரை, 3-6 வயது, 6-12 வயது, 12-18 வயது என அவரவருக்கு ஏற்ற கல்வி முறைகள் குறித்து பகுப்பாய்வு செய்தார்.
தனது புதிய கல்வி முறையின் அடிப்படையில் ரோம் நகரில் 1907-ல் முதல் வகுப்பைத் தொடங்கினார். இது ‘மான்டிசோரி கல்வி முறை’ என பிரபலமடைந்தது. அமெரிக்காவில் 1925-ல் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மான்டிசோரி பள்ளிகள் தொடங்கப்பட்டன. தன் வாழ்நாள் முழுவதும் இந்த கல்வி முறையை மேம்படுத்தி வந்தார்.
மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளின் கற்கும் திறனையும் மேம்படுத்தினார். 1939-ல் இந்தியாவுக்கு வந்த இவர் 8 ஆண்டுகள் தங்கியிருந்து ஏராளமான ஆசிரியர்களுக்கு மான்டிசோரி முறையில் பயிற்சி அளித்தார். பல மாநாடுகளில் பங்கேற்றார். ‘இந்தியா என் 2-வது வீடு’ என்பார்.
இனிமை, எளிமை, உற்சாகம் நிறைந்த கல்வி முறையை அறிமுகப்படுத்தி, அதன்மூலம் குழந்தைகளின் படைப்பாற்றலை மேம்படுத்திய மரியா மான்டிசோரி 82-வது வயதில் (1952) மறைந்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...