'கொரோனா ஊரடங்கு காலத்தில், 4,000த்துக்கும் மேற்பட்ட கவுரவ விரிவுரையாளர்களுக்கு, அரசு சம்பளம் வழங்கவில்லை' என, புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து, 'நெட், செட்' பேராசிரியர்கள் சங்க பொதுச்செயலர், தங்க முனியாண்டி, முதல்வரின் தனிப்பிரிவுக்கு அனுப்பிஉள்ள கடிதம்:கொரோனா ஊரடங்கிலும், மாணவர்களுக்கு, 'ஆன்லைன்' வழியில், பாடங்கள் நடத்தப்படுகின்றன. விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர், தொடர்ந்து பணியில் உள்ளனர்.எனவே, கல்லுாரி பணியாளர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு, பாக்கி வைக்காமல் ஊதியம் வழங்க வேண்டும் என, பல்கலை கழக மானிய குழு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், அரசு கல்லுாரி மற்றும் பல்வேறு பல்கலைகளின் உறுப்பு கல்லுாரிகளில் பணியாற்றக்கூடிய, 4,084 கவுரவ விரிவுரையாளர் களுக்கு, ஏப்ரல் மாத ஊதியம்,இதுவரை வழங்கப்படவில்லை.எனவே, ஏப்ரல் சம்பளத்தை வழங்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல, கல்லுாரிகளில் வகுப்புகள் மீண்டும் துவங்கும் வரை, மே மற்றும் ஜூன் மாதங்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும். அரசு உதவி பெறும் கல்லுாரிகளின், சுயநிதி பிரிவில் பணியாற்றும் ஆசிரியர்கள், நுாலகர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர்களுக்கும், ஊரடங்கு காலத்தில் சம்பளம் கிடைக்கவில்லை.
பல்கலைகளின் உறுப்பு கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், நுாலகர்களுக்கும், ஏப்ரல் மாத சம்பளம் வழங்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...