இதயம் ஒரு தசைக்கோளம்; தானாகவே துடிக்கும் தன்மையுள்ள சிறப்புத் தசைகளால்
ஆனது. இதயத்தில் மேற்புறம் இரண்டு; கீழ்ப்புறம் இரண்டு என மொத்தம் நான்கு
அறைகள் உள்ளன. இதயத்தின் வலது பக்க அறைகளில் அசுத்த ரத்தமும், இடது பக்க
அறைகளில் சுத்த ரத்தமும் ஓடுகின்றன. இதற்கு இதயத்தின் இயக்கம் உதவுகிறது.
அதாவது, மேலறைகள் சுருங்கும்போது கீழறைகள் விரிகின்றன; கீழறைகள்
சுருங்கும்போது மேலறைகள் விரிகின்றன. இப்படி ஒருமுறை இதயம் சுருங்கி
விரிவதை ‘இதயத் துடிப்பு’ (Heart beat) என்கிறோம்.
இப்படி ஒவ்வொரு முறை துடிக்கும்போதும் உடலிலிருந்து அசுத்த ரத்தத்தைப்
பெறுவதும், சுத்த ரத்தத்தை உடலுக்குத் தருவதுமாக இருக்கிறது இதயம். இது
ஓய்வில்லாத சுழற்சியாக நிகழ்கிறது. இதன் பலனால், நம் உடலுக்குத் தேவையான
ஆக்ஸிஜன் எந்த நேரமும் கிடைத்துக் கொண்டிருக்கிறது. நாம் உயிர் வாழ்வதற்கு
இந்தத் துடிப்பும் ரத்த சுழற்சியும் மிகவும் அவசியம்.
ஓர் இயந்திரம் இயங்கவேண்டுமானால், அதற்கு மின்சக்தி தேவைப்படுவதைப்போல,
இதயம் துடிப்பதற்கும் சிறிதளவு மின்னோட்டம் தேவைப்படுகிறது. அதை இதயமே
தயாரித்துக்கொள்கிறது என்பதும் வியப்பே!இதயத்தின் வலது மேலறையில் ‘சைனோ
ஏட்ரியல் நோட்’ (Sino Atrial Node) என்று ஒரு இதயக் கணு உள்ளது.
இது ‘ஏட்ரியோ வென்டிரிகுலர் நோட்’ (Atrio Ventricular Node) மற்றும்
`ஹிஸ்-பர்கின்ஜி தசை நார்க்கற்றைகள்’ (Bundle of His-Purkinje) ஆகியவற்றின்
வழியாக இதயத் தசைகளுடன் பிணைக்கப்பட்டுள்ளது. இக்கணுவில்தான் மின்சாரம்
உற்பத்தியாகிறது. இதுதான் இதயத்தைத் துடிக்கச் செய்கிறது. இந்த
மின்னோட்டமானது ஒரே சீராகவும், முறையான நேரப்படியும் இதயத்தசைகளுக்கு
விநியோகிக்கப்படுவதால், இதயம் ஒரே சீரான எண்ணிக்கையிலும் இயல்பான
லயத்துடனும் துடிக்கிறது.
இதயத்தில் ஏற்படுகிற பிரச்னைகள் காரணமாகவோ, பிற நோய்களின் பாதிப்பினாலோ
இந்த மின்னோட்ட உற்பத்தியில் தடங்கல் ஏற்பட்டாலோ, அதிக அளவு மின்னோட்டம்
உற்பத்தி ஆகிவிட்டாலோ, இதன் விநியோகத்தில் தவறு நேர்ந்தாலோ, இதயத்
துடிப்பில் மாற்றங்கள் உண்டாகும். அப்போது, துடிப்பின் எண்ணிக்கை
அதிகரிக்கலாம்... குறையலாம்... லயத்தில் வேறுபடலாம். இப்படி மாற்றம் காணும்
இதயத் துடிப்பே `பிறழ்வுத் துடிப்பு’ (Arrhythmia).
தூண்டும் காரணிகள்
சில நோய்களும் நம் வாழ்க்கைமுறைகளும் இதயத்தில் பிறழ்வுத் துடிப்பு ஏற்படக் காரணிகளாக அமைகின்றன. அவை...
1. மாரடைப்பு
2. இதய வால்வு நோய்கள்
3. உயர் ரத்த அழுத்தம்
4. தைராய்டு மிகைச்சுரப்பு அல்லது குறைச்சுரப்பு
5. நீரிழிவு
6. இதயத்தசை நோய்
7. பிறவி இதயநோய்கள்
8. நுரையீரல் தமனி ரத்த உறைக்கட்டி
9. நுரையீரல் அழற்சி
10. நுரையீரல் வெளியுறை அழற்சி நோய்
11. இதயக்கணு நோய்.
12. முதுமை
13. பரம்பரை.
14.உடற் பருமன்
15. சில மருந்துகள்
16. புற்று நோய்
17 மிகை மது
18. அதிக காபி குடிப்பது
19. அயனிகளின் அளவு மாறுவது
20. சுவாசத் தடை
உறக்கம்.
பொதுவான அறிகுறிகள்
இதயத் துடிப்பில் மாற்றங்கள் ஏற்படும்போது ஆரம்பத்தில் எந்த அறிகுறியும்
வெளியில் தெரியாமல் இருக்கலாம். போகப் போக, லேசாக தலை வலிக்கும். தலை
சுற்றும். படபடப்பு வரும். மூச்சுத்திணறல் ஏற்படும். நெஞ்சு வலிக்கும்.
காரணம் தெரியாமல் அதிகம் வியர்க்கும். சோர்வாகும். அறிகுறிகள் தோன்றியதும்
சிகிச்சை எடுத்துக்கொண்டால் பல பிரச்னைகளை தடுத்துவிடலாம்.
பரிசோதனைகள் என்னென்ன?
பொதுவாக, இதயம் துடிப்பதை ஸ்டெதஸ்கோப் கொண்டு அறிய முடியும். ஆனால்,
இதயத்தில் ஓடுகிற மின்னோட்டத்தை ‘இசிஜி’ (Electro Cardio Gram - ECG)
எனப்படும் இதய மின்னலை வரைவுப் பரிசோதனையில்தான் காணமுடியும். மேலும்
துடிப்பில் மாற்றம் ஏற்பட்டதற்கான காரணத்தைக் கண்டறிய மார்பு எக்ஸ்-ரே,
எக்கோ பரிசோதனை, ட்ரெட்மில் பரிசோதனை, `ஹோல்டர் மானிட்டர்’ பரிசோதனை
(Holter monitor Test), டில்ட் டேபிள் பரிசோதனை மற்றும் பொதுவான ரத்தம்,
சிறுநீர் பரிசோதனை
களும் மேற்கொள்ளப்படும்.
பாதிப்புகள் என்னென்ன?
இதயம் முறையாகத் துடிக்காதபோது இதயத் தசைகள், நுரையீரல், மூளை, கல்லீரல்,
சிறுநீரகம் போன்ற முக்கிய உறுப்புகளுக்கு ரத்தம் போதுமான அளவுக்குச்
செல்லாமல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். குறிப்பாக, பக்கவாதம்,
இதயச்செயலிழப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
முதலுதவியும் சிகிச்சை முறைகளும்மாத்திரை, ஊசி மருந்துகள், இதய மின்
அதிர்ச்சி சிகிச்சை, ஆக்ஸிஜன் மற்றும் சிரைவழி நீர்மங்களைச் செலுத்துதல்,
கதீட்டர் அபலேசன் சிகிச்சை, பேஸ் மேக்கர், அறுவை சிகிச்சை என பலதரப்பட்ட
சிகிச்சைகள் உள்ளன. பாதிக்கப்பட்ட நபருக்கு எந்த வகை துடிப்பு மாற்றம்
என்பதைப் பொறுத்தே சிகிச்சை.
இதயத் துடிப்பு கோளாறுகளால் ஒருவருக்கு மயக்கம் ஏற்பட்டு சுய நினைவை
இழந்துவிட்டால் உடனே `இதய சுவாச மறு உயிர்ப்பு சிகிச்சை’ (Cardio Pulmonary
Resuscitation - CPR) என்கிற உயிர் காக்கும் முதலுதவியை உடனடியாகத் தர
வேண்டும். தொடர்ந்து தாமதிக்காமல் மருத்துவ சிகிச்சை தரப்பட வேண்டும்.
துடிப்பின் வகைகள்
இயல்பான இதயம் நிமிடத்துக்கு 72 முறை துடிக்கிறது. எனினும், நிமிடத்துக்கு
60 முதல் 100 வரை இருப்பதையும் `நார்மல்’ என்றோம். நிமிடத்துக்கு 60க்கும்
கீழ் குறைந்தால், அதைக் `குறைத் துடிப்பு’ (Bradycardia) எனவும், 100க்கும்
மேல் அதிகரித்தால், அதை `மிகைத் துடிப்பு’(Tachycardia) எனவும், துடிப்பு
முறையற்ற லயத்தில் இருந்தால் அதை `உதறல் துடிப்பு’ (Fibrillation) எனவும்
அழைக்கிறோம்.
இயல்பான குறைத் துடிப்பு(Sinus Bradycardia)
நாம் உறங்கும்போது இயல்பாகவே இதயத் துடிப்பின் எண்ணிக்கை குறையும்.
விளையாட்டு வீரர்களுக்கும் முதியோர்களுக்கும் இதயத் துடிப்பு குறைவாகவே
இருக்கும்.இதற்கு சிகிச்சை தேவையில்லை. முறையற்ற குறைத் துடிப்பு
(Bradycardia) இதயக்கணுவில் மின்விசையின் உற்பத்தி குறையும்போது, உடலின்
வெப்பம் குறையும்போது, மாரடைப்பு ஏற்படும்போது, பித்தப்பை அடைப்புக் காமாலை
உண்டாகும்போது, தைராய்டு ஹார்மோன் சுரப்பு குறையும்போது, மூளை உறைநீர்
அதிகரிக்கும்போது, பீட்டா தடை மருந்துகள், வெரப்பாமில், டிஜாக்சின் ஆகிய
மருந்துகளை அதிகமாகப் பயன்படுத்தும்போது இதயத் துடிப்பின் எண்ணிக்கை
குறையும்.
இயல்பான மிகைத் துடிப்பு(Sinus Tachycardia)
இயல்பாகவே, கைக்குழந்தைகளுக்கு இதயத் துடிப்பின் எண்ணிக்கை நிமிடத்துக்கு
100 முதல் 120 வரை இருக்கும். புகை பிடிப்பவர்களுக்கும், கடின
உழைப்பின்போதும், ஓடுதல், உயரம் தாண்டுதல், விளையாடுதல் போன்ற கடுமையான
உடற்பயிற்சிகளின் போதும், அச்சம், பதற்றம், கோபம், கவலை, மன அழுத்தம்,
உணர்ச்சிவசப்படுதல் போன்ற உளவியல் காரணங்களாலும் இதயத் துடிப்பின்
எண்ணிக்கை இயல்பாகவே அதிகரித்துவிடும். இவற்றுக்கும் சிகிச்சை தேவையில்லை.
முறையற்ற மிகைத் துடிப்பு (Tachycardia)
காய்ச்சல், கர்ப்பம், ரத்தசோகை, ரத்தம் இழப்பு, இதயத்தசைக் கோளாறுகள்,
பிறவி இதயக்கோளாறுகள், இதயச்செயலிழப்பு உள்ளிட்ட இதய நோய்கள், தைராய்டு
மிகைச்சுரப்பு போன்றவற்றால் துடிப்பின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
இதயமேலறை மிகைத் துடிப்பு (Supra Ventricular Tachycardia)
60 வயது கடந்தவர்களுக்கு அதிலும் உயர் ரத்த அழுத்தம், இதய நோய்
உள்ளவர்களுக்கு இது ஏற்படுவது வழக்கம். இசிஜியில் இதய மேலறைத் துடிப்பின்
எண்ணிக்கை நிமிடத்துக்கு 140லிருந்து 220 வரை காணப்படும்.
இதயமேலறை நடுக்கத் துடிப்பு (Atrial Flutter)
இதயமேலறைத் துடிப்பின் எண்ணிக்கை நிமிடத்துக்கு 300க்கும்
அதிகரித்துவிட்டால் இந்த நிலைமை ஏற்படும். இதயமேலறை மிகைத் துடிப்பு,
இதயமேலறை நடுக்கத் துடிப்பு இவை இரண்டுக்கும் `இதய மின்னதிர்ச்சி’ சிகிச்சை
கொடுக்கப்படும். `டீபைபிரிலேட்டர்’ (Defibrillator) எனும் கருவி கொண்டு
மிகக் குறைந்த அளவில் இதயத்துக்கு மின்சாரம் பாய்ச்சுவார்கள். உடனே இதயம்
சிறிது நேரத்துக்கு
நின்று விடும். பிறகு மீண்டும் துடிக்கும்போது சீரான லயத்துடன் இதயம் துடிக்கும்.
சிலருக்கு அடிக்கடி இந்த நிலைமை ஏற்படுவதுண்டு. அவர்களுக்கு நிரந்தரமாக கருவியை உடலில் பொருத்தி விடுவார்கள். நடுக்கத்
துடிப்பு உண்டாகும்போது, இக்கருவி தானாகவே செயல்பட்டு, இதயத் துடிப்பை சரிசெய்து விடும்.
இதயமேலறை உதறல் துடிப்பு
(Atrial Fibrillation)
இதயமேலறைத் துடிப்பு மிக வேகமாகவும், அதிகமாகவும், ஒழுங்கில்லாமலும்
காணப்படும் நிலைமையே `இதயமேலறை உதறல் துடிப்பு’. இதைக் கவனிக்கத் தவறினால்
பக்கவாதம் ஏற்படும். இப்பாதிப்பு உள்ளவர்களுக்கு நெஞ்சில் எப்போதும்
படபடப்பு இருக்கும். வெரப்பாமில், டிஜாக்சின், பீட்டா தடை மருந்துகள்
ஆகியவற்றைப் பயன்படுத்தி இந்த நிலைமையை சரிசெய்யலாம்.
அத்துடன் இந்த நிலைமை ஏற்பட்டதற்கான அடிப்படை காரணத்தையும் கண்டறிந்து,
அதற்குரிய சிகிச்சைகளையும் தர வேண்டும். பக்கவாதம் வருவதைத் தடுக்கவும்
மருந்துகள் தர வேண்டும்.
இதயக்கீழறை மிகைத் துடிப்பு (Ventricular Tachycardia)
இதயத் துடிப்புக் குறைபாடுகளில் ஆபத்தானது இது. இதயக் கீழறைகள் அதிவேகமாகத்
துடிக்கும் நிலைமை இது. இத்துடிப்பின் எண்ணிக்கை நிமிடத்துக்கு 140 முதல்
220 வரை இருக்கும். இது
இதயக்கீழறை உதறல் துடிப்புக்கு வழிவிடும்.
இதயக்கீழறை உதறல் துடிப்பு (Ventricular Fibrillation)
இதயத் துடிப்புக் குறைபாடுகளில் மிகவும் ஆபத்தானது இதுதான். இதயக்கீழறை
மிகைத் துடிப்பு வேகமாகவும், முறையற்றும், ஒழுங்கு தவறியும் துடிக்கத்
துவங்கினால், உதறல் துடிப்பு உண்டாகிவிடும். இதயத் துடிப்பின் எண்ணிக்கை
நிமிடத்துக்கு 300க்கு மேல் அதிகரித்துவிட்டதென்றால், இது இதய இயக்கத்தை
மேலும் மோசமாக்கும்; மனிதனை மரணவாசலுக்கு அழைத்துச் செல்லும்.
மிகக் கடுமையான மாரடைப்பு, இதயத்தசை அழற்சி நோய், இடது இதயக்கீழறைச்
செயல்திறன்குறைவு ஆகியவற்றால் இந்தத் துடிப்பு தோன்றும். ரத்தத்தில்
பொட்டாசியம், மெக்னீசியம் அயனிகள் மிகவும் குறைந்துவிட்டாலும் இந்த நிலைமை
ஏற்படும். உடனடியாக சிகிச்சை கொடுக்காவிட்டால் மரணம் உறுதி.
`அமியடரோன்’ மருந்தை சிரைக்குழாய் வழியாகச் செலுத்தி இந்நிலைமையை
சரிசெய்யலாம். இதய மின்னதிர்ச்சி கொடுத்தும் சரிசெய்யலாம். இது
ஏற்பட்டதற்கான அடிப்படைக் காரணத்தையும் கண்டறிந்து, அதற்குரிய
சிகிச்சைகளையும் தரவேண்டும். இதயத் துடிப்பு இயல்புத்தன்மைக்குத்
திரும்பும் வரை இதயத் துடிப்பை இசிஜியிலும், தொடர் மின்னலைக் காட்சியிலும்
(ECG Monitoring) கவனித்து வர வேண்டும்.
இதய மின்விசைக் கடத்தல் குறைபாடுகள்(Conduction disorders)
இதய மேலறைக் கணுவில் தொடங்கும் மின்விசையானது கீழறைகளுக்குச் செல்லும்
தடத்தில் ஏதேனும் தடை ஏற்பட்டால் இதயத் துடிப்பு உண்டாவதிலும் தடை
ஏற்படும். இது இதயத்தில் இரு இடங்களில் ஏற்படலாம். ‘சைனோ ஏட்ரியல்
நோடுக்கும்’ ‘ஏட்ரியோ வென்டிரிகுலர் நோடுக்கும்’ இடைப்பட்ட இடத்தில்
தடை ஏற்படுவது ஒரு வகை. `ஹிஸ்-பர்கின்ஜி தசைநார்க் கற்றை’களில் தடை
தோன்றுவது அடுத்த வகை.
இதயத் துடிப்புத் தடைகளால் திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்படும். தலை
சுற்றும்; குறுமயக்கம், நெடுமயக்கம், நெஞ்சு படபடப்பு முதலிய தொல்லைகள்
தோன்றும். இசிஜியில் இதற்குரிய அலைமாற்றம் தெரியும்.
பேஸ்மேக்கர் கருவி ஒரு வரப்பிரசாதம்!
குறைத் துடிப்பு உள்ளிட்ட துடிப்புத் தடைகளுக்கு அடிப்படை காரணங்களை
சரிசெய்ய முதலில் சிகிச்சை தரப்படும். இதில் பிரச்னை சரியாகவில்லை என்றால்
நிரந்தரமாகத் தீர்வு காண ‘பேஸ்மேக்கர்’ கருவி (Pacemaker)
பயன்படுத்தப்படுகிறது. பேட்டரியில் இயங்கும் இக்கருவியில் இரண்டு பகுதிகள்
உள்ளன. 1. மின்விசையைத் தரும் பகுதி 2. மின்இணைப்பு வயர்.
மின்விசையை உற்பத்தி செய்யும் பகுதியில் ஒரு பேட்டரி இருக்கும். இது மின்
தூண்டல்களை ஏற்படுத்தும். இதிலிருந்து மின் இணைப்பு வயர் ஒன்று அல்லது
இரண்டு கிளம்பும். இக்கருவியை நோயாளியின் தேவைக்கேற்ப தற்காலிகமாகவும்,
நிரந்தரமாகவும் உடலில் பொருத்தப்படும்.
தற்காலிக பேஸ்மேக்கர்
இக்கருவி உடலின் வெளிப்பக்கத்தில் இருக்கும். அதிலிருந்து புறப்படும்
மின்இணைப்பு வயரை கழுத்துச் சிரைக்குழாய் (Carotid Vein) வழியாகவோ, தொடைச்
சிரைக்குழாய் (Femoral Vein) வழியாகவோ இதயத்துக்குச் செலுத்துவார்கள்.
கருவியிலிருந்து புறப்படும் மின்தூண்டல் இதயத் துடிப்பை சரிப்படுத்தும்.
நிரந்தர பேஸ்மேக்கர்
இக்கருவியை மார்பின் மேற்புறத்தில், காரை எலும்பிற்கு (Clavicle) அருகில்,
சிறிய அறுவை சிகிச்சை செய்து, சருமத்துக்கு அடியில், அதிக ஆழம் இல்லாதபடி
புதைத்து, தோலைத் தையல் போட்டு மூடி விடுவார்கள். மின்இணைப்பு வயரைக்
கழுத்துச் சிரைக்குழாய் வழியாக இதயத்துக்குள் செலுத்தி, இதயத்தசைகளின்
மீது நன்றாகப் படும்படி இணைப்பார்கள். பேஸ்மேக்கர் ஒரு கடிகாரத்தைப் போல்
இயங்குகிறது. இதில் இதயம் எத்தனை முறைத் துடிக்க வேண்டும் என
முறைப்படுத்தப்பட்டிருக்கும்.
கருவி இயங்கத் தொடங்கியதும், குறிப்பிட்ட இடைவெளியில் மின்தூண்டல்கள்
கிளம்பி இதயத்தை அடையும். இதனால் இதயம் துடிக்கும். பேஸ் மேக்கரிலிருந்து
மின்தூண்டல் குறிப்பிட்ட அளவில் இதயத்துக்குச் சென்று கொண்டே இருப்பதால்
இதயம் தொடர்ந்து துடிக்கிறது. நோயாளியின் தேவைக்கேற்ப இதயத்துடிப்பின்
வேகத்தை வெளியிலிருந்தே மாற்றியமைக்கவும் இக்கருவியில் வசதியுள்ளது.
இதன் மூலம் நோயாளிக்கு இதயத் துடிப்புத் தடை எப்போதும் ஏற்படாமல்
பார்த்துக்கொள்ள முடியும். ஒருமுறை பொருத்தப்படும் இக்கருவி குறைந்தது 10
ஆண்டுகளுக்கு நல்ல நிலைமையில் இயங்கும். அதற்குப் பிறகு புதிய கருவியைப்
பொருத்திக்கொள்ள வேண்டும். இப்போது வயரில்லாத பேஸ்மேக்கர் கருவி
வந்துள்ளது. நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்யப்படாமலே இது
பொருத்தப்படுவதால் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இயல்பாகவே, கைக்குழந்தைகளுக்கு இதயத் துடிப்பின்எண்ணிக்கை நிமிடத்துக்கு
100 முதல் 120 வரை இருக்கும்.புகை பிடிப்பவர்களுக்கும், கடின
உழைப்பின்போதும், ஓடுதல், உயரம் தாண்டுதல், விளையாடுதல் போன்ற கடுமையான
உடற்பயிற்சிகளின் போதும், அச்சம், பதற்றம், கோபம், கவலை, மன அழுத்தம்,
உணர்ச்சிவசப்படுதல் போன்ற உளவியல் காரணங்களாலும் இதயத் துடிப்பின்எண்ணிக்கை
இயல்பாகவே அதிகரித்துவிடும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...