'தமிழகத்தில், கொரோனா நோய் தொற்றின் தீவிரம் கருதி, 10ம் வகுப்பு பொதுத் தேர்வை, ஜூலையில் நடத்த அரசு முன்வர வேண்டும்; பள்ளிகளை ஆகஸ்டில் திறக்கலாம்' என, கல்வியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
கல்வியாளர்கள் கூறியதாவது:
மஹாராஷ்டிரா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில், கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றன. 'இம்மாநிலங்கள், அடுத்தஇரண்டு மாதங்கள், கூடுதல் எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்' என, மத்திய சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.தமிழகத்தில், ஜூன் 15ல், 10ம் வகுப்பு தேர்வு நடத்துவது சவாலாக இருக்கும். தேர்வு சார்ந்து மாணவர்கள், ஆசிரியர்கள் என, 10 லட்சம் பேர் வெளியே அலைய வேண்டி வருவதால், நோய் தொற்று இன்னும் அதிகரிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.ஒத்தி வைக்கப்பட்ட, சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வே, ஜூலை 1ல் தான் துவங்குகிறது. தமிழக கல்வித் துறை மட்டும், இதில் அவசரம் காட்டுவது புதிராக உள்ளது.
தேர்வு நடத்துவதற்கான சூழ்நிலை குறித்து, கல்வி அதிகாரிகள், மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசித்து, முடிவு எடுக்க வேண்டும்.ஜூலையில், பள்ளிகள் திறப்பதை தள்ளி வைப்பதே நல்லது. இதிலும், அரசு நிதானமாக செயல்பட வேண்டும். வைரஸ் தாக்கத்தை கருத்தில் கொண்டு, எல்.கே.ஜி., முதல் ஐந்தாம் வகுப்பு வரை, ஆகஸ்ட் மூன்றாவது வாரத்தில் திறக்கலாம்.
பிற வகுப்புகளை, ஆகஸ்ட் முதல் வாரத்தில் துவங்குவதும், தற்போதைய சூழ்நிலையில் ஆரோக்கியமானதாக இருக்கும். இதே கருத்தை, பல்வேறு ஆசிரியர் சங்கங்களும் தெரிவித்துள்ளன. இதில், அஜாக்கிரதை வேண்டாம்.
கல்லுாரிகளில், ஏப்ரல் தேர்வுகளை, ஜூலையில் நடத்தவும், 2020 - 2021 கல்வியாண்டில், செமஸ்டர் தேர்வை, ஆக., 3ல் துவங்கவும் உயர்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. இதுபோல, பள்ளிக்கல்வி துறையும், நிதானமாக முடிவுகள் எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...