கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே பழநி பஞ்சாமிர்தம், மதுரை மல்லிகை, சுங்குடி சேலைகள், கொடைக்கானல் மலைப்பூண்டு, பத்தமடை பாய், காஞ்சிபுரம் பட்டு, பவானி ஜமுக்காளம், தஞ்சாவூர் தட்டு, தஞ்சாவூர் ஓவியம், தஞ்சாவூர் வீணை, ஈரோடு மஞ்சள், மகாபலிபுரம் சிற்பங்கள், திண்டுக்கல் பூட்டு, காரைக்குடி செட்டிநாடு கண்டாங்கி சேலை, திருவில்லிபுத்தூர் பால்கோவாவுக்கு மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கி இருக்கிறது. தற்போது கோவில்பட்டி கடலைமிட்டாய்க்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
நெல்லைக்கு அல்வா போல், கோவில்பட்டி என்றாலே நினைவிற்கு வருவது கடலைமிட்டாய்தான். கோவில்பட்டியில் 100க்கும் மேற்பட்ட கடலை மிட்டாய் தயாரிப்பு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. குடிசை தொழிலாக நடக்கும் இதன்மூலம் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். இங்கு தயாரிக்கப்படும் கடலை மிட்டாயை அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறவர்களும் மறக்காமல் வாங்கிச் செல்கின்றனர்.
எனவே கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசார் குறீயிடு கோரி உற்பத்தியாளர்கள், கடந்த 2014ம் ஆண்டு விண்ணப்பித்திருந்தனர். அதனை பரிசீலனை செய்து ஏற்றுக்கொண்ட மத்திய அரசின் புவிசார் குறியீடு பதிவுத்துறை, கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசார் குறீயிடு வழங்கி உள்ளது. இதன் மூலம் கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு சர்வதேச மதிப்பு கிடைத்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...