Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

குழந்தைகள் விரும்பும் பள்ளிக்கூடம்…


இந்நூலை முன்வைத்து ஒரு உரையாடல்....

இந்த நூலின் நேரடிப்பயன்பாடு கருதி இந்த நூலின் ஒவ்வொரு அத்தியாயத்தைப் பற்றி தனித்தனிப் பதிவாக இடுகிறேன்…

குழந்தைகளின் கல்வியின்பால் நேசம் கொண்ட, நீண்ட பதிவுகளை வாசிக்க முயல்பவர்கள் மட்டும் தொடரலாம்.....

அத்தியாயம்:1

பள்ளிக்கூடத்தின் தேவை என்ன?

சமூக, பொருளாதார, அரசியல் காரணங்களைத்தாண்டி பள்ளிக்கூடம் என்ற கற்பிக்கும் இடத்தின் தேவைக்கான உளவியல் காரணத்தை அறிய இந்த முதல் அத்தியாயம் உதவுகிறது.

மூளை, அதன் செயல்பாடு, கல்வி கற்றலில் மூளையின் அடிப்படைகளை இது  விளக்குகிறது.
மூளை என்பது நியூரான் எனப்படும் நரம்புச் சிற்றறைகளால் ஆனது. இது உடலெங்கும் தகவல்களைச் சுமந்து செல்கிறது. ஒரு காரில் இருக்கும் வெவ்வேறு பாகங்கள் வெவ்வேறு வேலைகளைச் செய்வது போல மூளையின் ஒவ்வொரு பகுதிக்கும் குறிப்பிட்ட பணிகளுண்டு. உடலியல் செயல்களான சுவாசம், எதிர் வினைகள், இதயத்துடிப்பு, நுண்தசை அசைவு, பசி தூக்கம் போன்றவற்றைக் கட்டுப்படுத்தும் மூளையின் பகுதிகளாக கோர்ப்பஸ் கலோசம், பேசல் காங்லியா, மெடுல்லா, செரிபல்லம் போன்றவை உள்ளன.

விலங்குகளிடமிருந்து மனிதன் பிரிந்து பகுத்தறிவு  கொண்ட உயர்ந்த மூளைத்திறனுடன் இருப்பதற்கு மூளையின் நியோ கார்டெக்ஸ் பகுதியே காரணம். ஆசிரியர்கள் மாணவர்களிடம் எதிர்பார்க்கும் திறன்களான,
புரிந்து கொள்வது, நினைவுபடுத்துவது, தொடர்புபடுத்துவது, கருத்துப்பரிமாற்றம் செய்வது, தகவல்களை அலசி சில கருத்துக்ளை கண்டறிவது, பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது, கண்டுபிடிப்பது போன்றவைகளுக்கு அடிப்படையாக நியோ கார்டெக்ஸ் பகுதியே உள்ளது.

நூற்றாண்டு கால ஆராய்ச்சியில்,

• பின்பக்க மூளையின் கீழ்ப்பகுதியில் கண்ணால் காணும் காட்சிகளைத் தகவல்களாக மாற்றுகிறோம்.
• நமது இடது காதின் அருகில் அமைந்திருக்கும் மூளையின் பகுதியில் மொழியைப் புரிந்து கொள்கிறோம்.
• மூளையின் மேற்பகுதியிலுள்ள கோடு போன்ற பகுதியில் உடலின் அசைவுகளையும், ஐம்புலன்களின் தூண்டலையும் அறிந்து கொள்கிறோம்.
• மூளையின் முன் வலது பக்க கோடு போன்ற பகுதி தூண்டல்களைத் தகவல்களாக்கி உடலுறுப்புகளுக்கு அனுப்புகிறது.
• மூளையின் நடுப்பகுதியில் இருக்கும் ஹிப்போகாம்பஸ் பகுதியில் நிகழ்வுகளை ஞாபகப்படுத்துகிறோம்; புதிய நிகழ்வுகளைப் பதிவு செய்கிறோம்.

ஹிப்போ காம்பஸ் பற்றி இன்னும் கொஞ்சம் அறிவோமா?.....

மூளையின் நடுப்பகுதியில் அமைந்துள்ள சிறிய, கவர்ச்சியான இந்தப் பகுதிதான் புதிய ஞாபகங்களை உருவாக்கும் பொறுப்பை வகிக்கிறது. கற்றல், ஞாபகம் உருவாவது தொடர்பான இந்தப் பகுதி சமீபத்திய ஆய்வுகளில் கவனம் பெற்றுள்ள பகுதி.. ஹிப்போ காம்பஸ் என்பது சுய உணர்வோடு நினைவுபடுத்திக் கொள்ளவும், சொற்களால் வெளிப்படுத்தவுமான பொறுப்பைக் கொண்டது. ஒரே ஒருமுறை ஏற்பட்ட அனுபவத்தைக் கூட நினைவுகளாகப் பதிவுசெய்வதே இதன் சிறப்பு ஆகும். இப்பகுதியில் புதிய நினைவுகளைப் பதிவு செய்யும்போது புதிய நியூரான்கள் உற்பத்தியாகின்றன. சிலகாலம் கழியும்போது இந்த நியூரான்கள் அழிந்துபோகின்றன. அது அழிவதற்குள் அப்பதிவுகளை மூளையின் பிற்பகுதியிலுள்ள நியோகார்டெக்ஸ் எனப்படும் நியூரான் வலைப்பின்னல்  பகுதிக்கு நிலையாக இடம் மாற்றம் செய்து விடுகின்றன. எனவே தான் ஹிப்போகாம்பஸ் பகுதி பாதிக்கப்படும்போது, நிலைத்த பகுதிக்கு அனுப்பப்பட்ட நினைவுகள் மறக்காது, ஆனால் சமீபத்தில் ஹிப்போகாம்பஸ் பகுதியில் பதியப்பட்டு, இன்னும் நிலைத்த பகுதிக்கு மாற்றப்படாத நினைவுகள் அழிந்து போகும்.
ஹிப்போகாம்பஸ் பகுதியில் எவ்வளவுக்கு எவ்வளவு புதிய நியூரான்கள் உற்பத்தி ஆகிறதோ அதைப்பொறுத்து கற்றல் விரைவாக நிகழும். ஆனால் முதுமை மற்றும் நீண்ட கால மன அழுத்தம் போன்றவை இப்பகுதியில் நியூரான் உற்பத்தியை வெகுவாகக் குறைத்துவிடுகிறது. ஏனெனில் நீண்ட மன அழுத்த காலங்களில் உடலில் உற்பத்தியாகும்  வேதிப்பொருளான க்ளுகோகோர்டி கோயிட்ஸர்ஸ் புதிய நியூரான் உற்பத்தியைக் குறைக்கிறது. எனவேதான் குழந்தைகள் நன்கு கற்க பள்ளியிலும், வீட்டிலும் மன அழுத்தம் இல்லாத சூழலை உருவாக்க வேண்டியது அவசியமாகிறது.

மூளையிலுள்ள மாட்யூல்களின் பரிணாமம்…..

மனித மூளை மிகவும் பழமை வாய்ந்தது. மனித இனம் தோன்றி வெறும் முப்பது இலட்சம் ஆண்டுகள்தான் ஆகிறது. இக்கால அளவில் மனிதன் தனது மூளையின் 99.9% பகுதியை வேட்டையாட, உணவு தேட, பலவிதமான ஆபத்துகளையும், சவால்களையும் சமாளிக்கப் பயன்படுத்தினான். இருப்பினும் நீண்டகால அளவில் நான்கு கால் உயிரியிலிருந்து இரண்டுகால் உயிரியாக எழுந்து நடந்தது, மொழியை உருவாக்கியது போன்றவைதான் மனிதனை குரங்கிலிருந்து பிரிக்கின்றன.

பழைய மனித மூளையானது மின்விளக்கில்லாத, வெள்ளை சீனியில்லாத, பள்ளிக்கூடம் இல்லாத சூழலில் வாழ்வதற்குத்தான் பழக்கப்படுத்தப்பட்டுள்ளது.

டேவிட் கீயரியின் மாடுலர் கோட்பாடு….

“இதுவரை சந்திக்காத சவாலான சூழல்களைச் சமாளிக்க அனைத்து உயிரினமும் தேவையான புதிய மாட்யூல்களை உருவாக்கும்”

இப்போது கல்வி என்பதனை இரண்டாகப் பிரிப்போம்…

1. பிறவி சார்ந்த கல்வி உளவியல்.
2. பிறவி சாராத கல்வி உள்வியல்.

இதனை இன்னும் கொஞ்சம் விளக்கிப் பார்ப்போம்….

1.பிறவி சார்ந்த கல்வி என்பது மூன்று பகுதிகளை உடையது.

அ. முறைசாரா இயற்பியல்..

முப்பரிமாண இயற்பியல் பொருட்களுக்கு இடையே சென்று வருவது, வழியிலுள்ள மேடு பள்ளங்களைப் புரிந்து கொள்வது, அசைவுகளை மதிப்பிடுவது, பொருட்களை கற்பனை செய்வது, ஒரு பொருளை வேறொன்றாகக் கருதுவது(கருவிகளைக் கையாளும்போது இந்தத் திறன் மிக அவசியம்).

ஆ.முறைசாரா உயிரியல்.

தாவரங்களையும், விலங்குகளையும் உண்ணத்தகுந்தவை, தகாதவை, மருந்தாகப் பயன்படுபவை எனவும் புலால் உண்ணிகள், அவற்றின் இரைகள் எனவும் வகைப்படுத்தப்படுகிறது.

இ. முறைசாரா உளவியல்

சமூகச் சூழலில் வாழ்வது(அவர்கள் குழுவாக வாழ்ந்திருந்தனர்), முகங்களை அடையாளம் காண்பது, முகத்தைப் பார்த்து உணர்ச்சிகளைப் புரிந்து கொள்வது, உறவினரை அடையாளம் காண்பது, உலகை உறவினர் குழு, உறவினர் அல்லாதவர்களின் குழு என பிரிப்பது,மொழியைப் பயன்படுத்துவது, அடுத்தவர்  மனநிலையைப் புரிந்து கொள்வது.

உளவியலாளர்களும் மேலுள்ள  மூன்று முறைசாரா உளவியலுக்கும் மூளையில் மாட்யூல்களைக் கண்டறிந்துள்ளனர்.

A..இயற்பியல் உலகைக் கற்பனை செய்வதில் மூளையின்  பரைட்டல் கார்டெக்ஸ் மற்றும் ஹிப்போ காம்பஸின் பகுதிகளின் பங்கு.
B.உயிரினங்களுக்குப் பெயரிடுவதில் பங்குபெறும் போஸ்டீரியர் நியோ கார்டெக்ஸின் பங்கு(ஆனால் உயிரற்றப் பொருட்களைப் பெயரிடுதலில் இவை பயன்படுவதில்லை)
C.முகங்களை இனம்காண உதவும் பியூஸிபோ(ர்)ம் கைரஸ், பிரிஃப்ரன்டல் கார்டக்ஸ் ஆகியவை.

இவ்வாறாக குழந்தைகள் பள்ளிக்கு வருவதற்கு முன்பே இவை மூன்றிலும் ஆழமான கருத்துக்களை வளர்த்துள்ளனர். ஆனால் அந்த அடிப்படை அறிவைப் புறக்கணித்து விட்டு புதிய பாடத்திட்டங்களை அவர்கள் மூளைக்குள் திணிக்கிறோம்.

இப்போது நாம் ஏற்கனவே குறிப்பிட்ட கல்வியின் இரண்டு வகைகளில் இரண்டாவதாக உள்ள பிறவி சாராத கல்வி உளவியலைப் பற்றிப் பார்ப்போம்..

2.பிறவி சாராத கல்வி உளவியல்.
இவை பயிற்சியளிப்பதால் வளர்த்தெடுக்கப்படும் திறன்கள். நாம் சில் செயல்களைச் செய்வதற்கு விலங்குகளைப் பயிற்றுவிக்கிறோம். ஆனால் மனிதக் குழந்தைகள் கற்றுக்கொள்ளும் அளவையும், புதுமையையும் விலங்குகளுடன்  ஒப்பிட்டால் குழந்தை மிக முன்னணியில் உள்ளார்கள். மனித மூளை சற்று வேறுபட்டது. மனித மூளையால் இயல்பற்ற திறமைகளையும் கற்றுக்கொள்ள முடியும் என்பதுதான் அந்த வேறுபாடு.

நியூரல் பிளாஸ்டிசிடி…..

பிறவி சாரா கல்வித்திறன்களை கற்றுக்கொள்ள மனிதனால் முடியும். குறிப்பாக மூளையின் செரிபிரல் கார்டெக்ஸுக்கு இந்தப் பண்பு உண்டு. மூளையின் இந்தத் திறனையே நியூரல் பிளாஸ்டிசிடி என்று அழைக்கிறார்கள். மனித மூளையில் ஏராளமான உபரி நியூரான் சுற்றுகள் உள்ளன. இதனால் புதியவற்றை ஒன்றோடொன்று இணைக்கவும், அவற்றுக்கிடையே புதிய தொடர்புகளை கண்டுபிடிக்கவும் முடிகிறது. காலந்தோறும் இத்திறனாலேயே கற்கால மனித மூளை பல்வேறு திறன்களை உடைய நாகரீக மனித இனமாக வளர்ச்சியுற்றது. தற்காலத்திலும் இதே நியூரல் பிளாஸ்டிசிடிதான் வயலினை இசைக்கவும், இயற்கணித பிரச்சினைக்குத் தீர்வு காணவும் பயன்படுகிறது.

கீயரி தத்துவம்….

இந்தப் பிறவி சார்ந்த, பிறவி சாராத கற்றலைத்தான் உயிரியல் முதன்மைத் திறமை, உயிரியல் இரண்டாம் திறமை என்கிறோம். உயிரியல் முதன்மைத் திறமையை விளையாட்டுப் போக்கிலான பரிமாற்றங்கள் மூலமும், தனக்குத்தானே பயிற்சியளிப்பதன் மூலமும் மிக விரைவில் வளர்த்துக் கொள்வார்கள் (குழந்தைகள் மொழி கற்றுக்கொள்வது மிகச்சிறந்த எடுத்துக்காட்டு).
இந்த உயிரியல் இரண்டாம் திறமையையும் தன்வயப்படுத்த முடியும். ஆனால் இங்குதான் “கல்வி” தனது பரிவாரங்களான கற்றல் , கற்பித்தல், பள்ளிக்கூடம், புத்தகங்கள்,-தேர்வுகள் எல்லாவற்றோடும் வருகிறது.
இவற்றைப் பயன்படுத்தி மாணவர்களின் மனம் நோகச்செய்யாமல், தற்கொலைக்குத் தூண்டாமல், பள்ளியை விரட்டாமல் இந்த உயிரிய் இரண்டாம் திறமையை வளர்த்தெடுக்கிறோமா?
இரண்டாம் அத்தியாயத்தில் சந்திப்போம்….

நன்றி

மூலநூல்:  குழந்தைகள் விரும்பும் பள்ளிக்கூடம் (கமலா.வி.முகுந்தா)
தமிழில்: இராஜேந்திரன். கிழக்கு பதிப்பகம்.
இவண்
இராமமூர்த்தி நாகராஜன்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive