கொரோனா பாதிப்பால் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ள பள்ளி, கல்லூரிகளை திறக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
தற்போது நான்காம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இது 31ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. அடுத்தபடியாக பொதுத் தேர்வுகள் நடத்துவது, விடைத்தாள் திருத்துவது உள்ளிட்ட பணிகள் தொடர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆய்வு செய்ய, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் சில தினங்கள் முன்பு தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடந்தது. இதில் பள்ளிக்கல்வித்துறையின் முதன்மை செயலாளர் தீரஜ்குமார், பள்ளிக் கல்வித்துறை ஆணையரின் செயலாளர், பள்ளிக் கல்வி இயக்குநர், அரசுத் தேர்வுகள் இயக்குநர், தொடக்க கல்வித்துறை இயக்குநர் உள்ளிட்ட உயரதிகாரிகள் பங்கேற்றனர்.
தமிழகத்தில் எஸ்எஸ்எல்சி தேர்வு ஜூன் 15ம் தேதி, துவங்க உள்ளது. விடைத்தாள் திருத்தும் பணிக்காக 200 மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இது குறித்தும் அந்த பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்தும் அதிகாரிகள் அப்போது அமைச்சரிடம் தெரிவித்தனர்.
இதையடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்தார். தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்துவருவது குறித்தும், அதன் காரணமாக ஏற்படும் பலிகள் குறித்தும் இருவரும் ஆலோசித்துள்ளனர். இப்போது பள்ளிகளை திறந்தால் மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்படும் என்று ஆலோசித்ததாக தெரிகிறது. எனவே எப்போது பள்ளிகளை திறக்கலாம் என்பது குறித்த திட்டத்தை செங்கோட்டையன் முன்வைத்தாராம்.
மேல் நிலைப் பள்ளி வகுப்புகள் ஆகஸ்ட் மாதமும், அதற்கு கீழேயுள்ள வகுப்புகளை செப்டம்பர் மாதமும் தொடங்கலாம் என்ற யோசனை முன் வைக்கப்பட்டுள்ளது. சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்புவரை படிக்கும் மாணவர்களுக்கு காலை ஷிப்டில் வகுப்புகளும், 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மதிய ஷிப்டில் வகுப்புகள் நடத்தக் கூடும் என்றும், எல்கேஜி முதல் 5ம் வகுப்புகளுக்கு செப்டம்பர் மாதம் முதல் வகுப்புகள் தொடங்கலாம் என்றும் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அறிவிப்புகள் வெளியிடப்படக் கூடும் என்று தெரிகிறது.
Source: One India Tamil
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...