பேரிடர் காலங்களில் பொதுத்தேர்விற்கு மாற்றாக என்ன செய்யலாம் என கல்வியாளர் மற்றும் ஆசிரியர்களின் கருத்துக்களைப் பார்க்கலாம்.
உமா , கல்வியாளர்
கல்வி முறையில் குழந்தைகளுக்கு விருப்பம் இருக்கிற துறைகளில் படிக்கும் காலம் வரவேண்டும் . அது தொடர்பான திறன்களை மட்டும் சோதிக்கக்கூடிய சூழல் பள்ளிகளில் வேண்டும் . இதுவொரு கனவுதான் . ஆனால் அதற்கு ஒரு வடிவம் கிடைத்துவிட்டால் மிகப்பெரிய கல்வி வளர்ச்சியையும் தகுதியான மனிதவளத்தையும் நாம் பெறமுடியும் . இன்று மருத்துவம் படிக்க விரும்பும் மாணவிகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள் .
நீட் தேர்வு பல குழந்தைகளின் கனவுகளை கிள்ளி எறிந்துவிட்டது . கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட அனுபவம் . பத்தாம் வகுப்புத் தேர்வில் 430 வாங்கிய மாணவியும் , 381 வாங்கிய மாணவனும் 285 மதிப்பெண் வாங்கிய மாணவியும் வருத்தப்பட்டனர் . இவர்களுக்கு மட்டுமல்ல . மற்ற எல்லாக் குழந்தைகளுக்கும் சொல்வது ஒரே விஷயம்தான் . பத்தாம் வகுப்புத் தேர்வு என்பது ஒரு நுழைவுச் சீட்டுதான் .
தற்போது , ஒருவேளை தேர்ச்சி பெறவில்லை என்றாலும் , வரும் உடனடித் தேர்வில் அதைப் பெற்றுவிடலாம் . ஆகவே குறைந்த மதிப்பெண் பெற்றதற்காக வருந்தி அழவேண்டாம் என்றேன் . இந்த இடத்தில் இருந்துதான் நாம் தேர்வுக்கான மாற்றுமுறை யோசிக்கவேண்டியிருக்கிறது .
அதாவது CCE தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறையை நாம் கவனத்தில் கொண்டு அதை மறுபரிசீலனை செய்யலாம் . ஏற்கனவே கடந்த கல்வியாண்டு வரை 9 ஆம் வகுப்பு வரையிலும் , தற்போது 8 ஆம் வகுப்பு வரையிலும் நடைமுறையில் இருந்து வரும் இந்த மதிப்பீட்டு முறையை பொதுத்தேர்வுகளுக்கு மாற்றாக 12 ஆம் வகுப்பு வரை கொண்டுவருவதற்கு திட்டமிடலாம் .
நமது கல்வி வரலாற்றில் புதிய பக்கத்தைத் தொடங்க கொரோனா பேரிடர் நமக்குப் பாடம் கற்பித்துள்ளது .
பரமேஸ்வரி , அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் , வேலூர்
பதினோராம் வகுப்பில் இன்னும் ஓரிரு பாடங்கள் ( ஒரேயொரு நாள் ) நடத்தப் படாமல் உள்ளது . பத்தாம் வகுப்புத் தேர்வுகள் தொடங்கவேயில்லை . இப்போது என்ன செய்வது என்பது கேள்வி . வழக்கமான தேர்வுகளின்றி திறமை , ஆர்வம் , கற்றல் திறன் அடிப்படையில் மாணவர்களை திறனாய்வு செய்ய வேண்டும் என்ற விவாதம் தொடர்கிறது .
ஆனால் தீர்வுகளையோ பரிசோதனை முயற்சிகளையோ அது எட்டவேயில்லை . பத்தாம் வகுப்புத் தேர்வுகள் நடத்தாமல் தவிர்த்து விடலாம் . பெரும்பாலான மாணவர்கள் அந்தந்தப் பள்ளிகளிலேயே தொடருவார்கள் . அவர்களை ஆசிரியர்களுக்குத் தெரியும் எந்தப் பிரிவைத் தேர்வு செய்யலாம் என்ற அறிவுரையை வழங்க முடியும் .
மாற்றுப் பள்ளிகளில் இருந்து வரக்கூடிய மாணவர்களுக்குச் சிறு தேர்வினை வாய்மொழியாகவோ எழுத்துத் தேர்வாகவோ வைத்து அனுமதிக்கலாம் . அதையே தொழில்நுட்பக் கல்லூரிகளிலும் முயலலாம் . பதினோராம் வகுப்பு மாணவர்களை அப்படியே 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றதாக அறிவித்து விடலாம் .
இனிவரும் காலத்தில் நாம் மாற்றுக் கல்வியை , தேர்வுமுறைகளைப் பற்றி உறுதியாக யோசிக்கத்தான் வேண்டும் . நம்முடைய பாடப்புத்தகம் அப்படியான ஒரு முறையை நோக்கிய முதல் அடி என்றுதான் சொல்ல வேண்டும் . இதை முன்வைத்து பாடங்களை மாணவர்களுக்குக் கற்பிக்கும் முறையிலும் தேர்வு முறைகளில் மாற்றங்களைக் கொண்டு வருவது பற்றியும் சிந்திக்கவேண்டும் .
பத்மா , அரசு உதவிபெறும் பள்ளி பட்டதாரி ஆசிரியர் , சென்னை
இன்றைய நிலையில் குழந்தைகள் அனைவருமே மிகுந்த பீதியில் தான் இருப்பார்கள் . ஒரு புறம் குடும்பங்கள் உணவுக்கே வழியின்றி துன்பப்படும் நிலையில் உள்ளன . மேலும் பொருளாதாரத்தில் மிகுந்த நலிவுற்ற சூழலில் இருக்கின்றன .
ஆசிரியர்களே முன்வந்து மாணவர்களின் குடும்பங்களுக்கு பண உதவி செய்து வருவதைப் பார்க்கிறோம் அங்கிருந்து வரும் குழந்தைகளை நாம் எண்ணிப் பார்க்கவேண்டும் . ஆசிரியர்கள் ஃபோன் செய்து மாணவர்களுக்கு பாடங்கள் தொடர்பாக வழிகாட்டி வருகிறோம் .
வொர்க்சீட் அனுப்புகிறோம் . எத்தனை பேர் படிப்பார்கள் என்பதும் மனரீதியாக தயாராக இருக்கிறார்களா என்பதும் கேள்விக்குறியாக உள்ளது . என்னைக் கேட்டால் , புத்தகங்களில் இருந்து அவர்கள் பதில்களைத் தேடி எழுதும் ஓப்பன் புக் சிஸ்டத்தைப் பற்றி சிந்திக்கலாம் . அடுத்து கொலாபரேஷன் முறை இருக்கிறது . தனியாக ஒரு முறையும் , மற்ற மாணவர்களுடன் சேர்ந்து கூட்டாக ஒரு முறையும் தேர்வுகளை நடத்தி , அதில் ஒரு மாணவரின் தனிப்பட்ட கல்வித்திறனை அறியலாம் .
ஆன்லைன் வழியாக சிபிஎஸ்இ - பாடங்கள் நடத்தலையா என்று கேட்கிறார்கள் . எத்தனை மாணவர்களிடம் ஆன்லைன் வசதிகள் இருக்கின்றன ? எங்கள் பள்ளியில் காலை 8 . 30 மணிக்கு சிறப்பு வகுப்பு என்றால் , சில மாணவர்கள் வரமாட்டார்கள் . காலையில் பேப்பர் போட்டுவிட்டு பள்ளிக்கு வரும் நிலையில்தான் மாணவர்கள் இருக்கிறார்கள் .
கோகுல்நாதன் . அரசு பட்டதாரி ஆங்கில ஆசிரியர் , ஈரோடு
பொதுவாக மொழிப் பாடங்களுக்கு எழுத்துத் தேர்வு மட்டுமே நடத்தி வருகிறோம் . எழுதும் திறனை மட்டுமே பரிசோதிக்கிறோம் . ஒரு மொழியை கற்றுக்கொள்ளும்போது LSRW என்று வகைப்படுத்தப்படும் திறன்கள் அவசியம் . அதாவது ஒரு மாணவரின் கவனித்தல் , பேசுதல் , வாசித்தல் , எழுதுதல் போன்ற நான்கு திறன்களையும் பரிசோதிப் பதாக மொழித் தேர்வுகள் அமையவேண்டும் .
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பள்ளியிலும் வீட்டிலும் ஆங்கிலம் பேசக்கூடிய சூழல் வாய்ப்பதில்லை . திரைப்படங்கள் , செய்திகள் , பத்திரிகைகள் வழியாக ஆங்கில மொழி பரிச்சயமாகவேண்டும் . வகுப்புகளில் ஆங்கில ஆசிரியர்கள் 90 சதவீதம் ஆங்கிலத்திலேயே பேசு வது நல்லது .
ஆடியோ வீடியோ போன்ற ஸ்மார்ட் வகுப்பறை , கற்றல் கற்பித்தல் உபகரணங்களைப் பயன்படுத்தி மொழிப் பாடங்களை நடத்தலாம் . வெறும் எழுத்துத் தேர்வை மட்டும் வைக்கும் போது , பாடங்களின்மீது புரிதலற்ற மனப்பாடம் மட்டுமே வெளிப்படுகிறது .
ஒரு கேள்வியை மாற்றிக் கேட்டால் பதில் எழுதமுடியாத நிலையில் இருக்கிறார்கள் . சுயமாக சிந்தித்து எழுத முடிவதில்லை . க்ரிட்டிக்கல் திங்கிங் வளரவில்லை . ஒரு கேள்வி ஒரு பதில் என்ற அளவிலேயே மாணவர்கள் கற்பிக்கப்படுகிறார்கள் . மாணவர்களை ஆங்கிலத்தில் பேச வைத்தும் , - கேட்க வைத்தும் , புரிய வைத்தும் எழுதவைத்தும் 5 தயார்ப்படுத்தவேண்டும் .
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...