2019-2020 ஆம் கல்வியாண்டு
● ஒவ்வொரு ஆண்டும் பொதுத்தேர்வுக்குப் பின் தற்கொலை செய்துகொண்டவர்களின் எண்ணிக்கையைத் தமிழக அரசு நன்றாக அறியும்.
● பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுதும் அனைத்துக் குழந்தைகளும் பதின்பருவ வயதினர் ஆவர். ஐம்பது நாள்களுக்கும் மேலாக இக்குழந்தைகள் பள்ளித் தொடர்பற்றும் உள்ளனர்.
● இவர்கள் அதிக உணர்வெழுச்சியும் மனக்குழப்பமும் உடையவர்களாக இருப்பர். இத்தகைய இயல்புடைய பதின்பருவக் குழந்தைகளின் மனநிலையில் கொரோனா பேரிடர்காலம் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கும் என்பதும் நாம் அனைவரும் அறிந்ததே.
● இது உயிரியல் பேரிடர் காலம். வாழ வழியின்றி வெளியூர் சென்றவர்கள், உள்ளூரில் உண்ண வழியின்றித் தவிப்பவர்கள், நாளைய செலவுக்குக் கையில் காசு இல்லாமல் தவிப்பவர்கள், வேலை இருக்குமோ இருக்காதோ ; கிடைக்குமோ கிடைக்காதோ என்ற அச்சத்தில் இருப்பவர்கள் மேலும் மதுவுக்கு அடிமையாகிக் கிடப்பவர்கள் என்று பல்வேறு குடும்பச் சூழ்நிலைகள்
● பெற்றோர் துணையின்றி விடுதியில் தங்கிப் படிக்கும் குழந்தைகள், கொரோனா நோயால் தானோ அல்லது குடும்பதினரோ பாதிக்கப்பட்ட நிலையில் உள்ள குழந்தைகள்
● மேற்கண்டவற்றுடன் பேரிடர் காலத்தால் வந்த மன அழுத்தம், பொருளாதார இழப்பு, இடப்பெயர்வு போன்ற அச்சங்களும் தேர்வு பற்றிய அச்சத்துடன் உயிரச்சமும் மாணவர்களிடையே கூடுதலாக சேர்ந்து கொண்டுள்ளன.
● இத்தகு மன அழுத்தங்களுடன் உயிரச்சமும் மேலிட, தேர்வுக்கு வரும் குழந்தைகளின் மனநிலை என்னவாக இருக்கும் என்பதை யாவரும் அறிவர்.
● மேற்கண்ட ஒட்டுமொத்த சூழலையும் கவனத்தில் கொள்ளாது குழந்தைகளை தேர்வெழுதக் கட்டாயப் படுத்துவது சரியான நடை முறையாக இருக்காது.
● இந்நிலையில் சமூகநீதிக் கோட்பாட்டின் உச்சமாக நிற்கின்ற தமிழக அரசு பத்தாம் வகுப்புக் குழந்தைகளுக்குத் தேர்வை அறிவித்திருப்பது மனக் கலக்கத்தை ஏற்படுத்துகிறது.
● பொதுத்தேர்வு என்பது தன்னுடைய திறமையை நிரூபிப்பதற்கான சம வாய்ப்பை மாணவர்களுக்கு வழங்குவது என அரசு கருதுகிறது என்றால் இத்தகு உயிரியல் பேரிடர் காலச் சூழ்நிலை, பொருளாதார ஏற்றத்தாழ்வு,போக்குவரத்து நெருக்கடி இவை அனைத்தும் மாணவர்களுக்கு சம வாய்ப்பை வழங்குவதாக இல்லை.
● எனவே இது அனைவருக்குமான பொதுவான தேர்வாக, பொதுத் தேர்வாக அமைய வாய்ப்பில்லை.
● தேர்வு இல்லை என்றால் சான்றிதழ் எவ்வாறு வழங்குவதெனின்
இதற்கு முன் நடந்த தேர்வுகளின் மதிப்பெண் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்க வேண்டும்.
● இதுவரை தேர்ச்சி அடையாத மாணவர்கள் கூட பொதுத் தேர்வில் தேர்ச்சி அடையும் வாய்ப்பு உள்ளதால் அவர்களுக்கு அடிப்படை தேர்ச்சி மதிப்பெண்ணை வழங்க வேண்டும்.
● 2008ஆம் ஆண்டு வேலூர் விடைத்தாள் திருத்தும் மையத்தில் நிகழ்ந்த தீ விபத்தில் கல்வித் துறை கையாண்ட நடைமுறையையும், 2013ஆம் ஆண்டில் சத்திய மங்கலம் அரசு மேனிலைப் பள்ளியிலிருந்து அனுப்பப்பட்ட விடைத் தாள்கள் காணாமல் போனபோது அரசு மேற்கொண்ட முடிவுகளையும் கருத்தில் இப் பேரிடர் காலத்தில் கவனத்தில் கொள்ள வலியுறுத்துகிறோம்.
● மேலும் ஆசிரியர் சமூகமும், ஆசிரியர் சங்கங்களும், எதிர்க்கட்சிகளும் தவிர்க்க இயலாத இப்பேரிடர் காலச் சூழலில் தேர்வு வேண்டாம் எனப் பரிந்துரைக்கின்றன. அரசு இதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.
● சத்தீஸ்கர் மாநில அரசு நிலுவையிலுள்ள தேர்வுகளை எழுதத்தேவையில்லை என அறிவித்திருப்பதும் பஞ்சாப் மாநில அரசு பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு இல்லை என அறிவித்திருப்பதும் போற்றுதற்கு உரியது.
● தமிழக அரசு பஞ்சாப் மற்றும் சத்தீஸ்கர் மாநில அரசுகளை முன்மாதிரியாகக் கொண்டு உடனடியாகத் தேர்வுகள் இல்லை என அறிவிக்க வேண்டும் எனவும்
● உயிராபத்தை உண்டாக்கும் சூழ்நிலையை மாணவர்களுக்கு அரசு உண்டாக்க வேண்டாம் எனவும் குழந்தை நேயப் பள்ளிகள் கூட்டமைப்பு அரசிடம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
குழந்தை நேயப் பள்ளிகள் கூட்டமைப்பு – தமிழ்நாடு
14/05/2020
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...