தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வரும் வெள்ளிக்கிழமை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனைக் கூட்டம் காணொலிக் காட்சி மூலம் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் மே 31 ஆம் தேதியுடன் ஊரடங்கு நிறைவு பெறும் சூழலில் ஆலோசனை ஆனது நடைபெற இருக்கிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாகத் தமிழகத்தில் தற்போது 4-ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது.
வரும் 31-ம் தேதியுடன் இந்த ஊரடங்கு முடிவடையவுள்ள நிலையில் மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா, அல்லது பேருந்து வசதிகள் அனுமதிக்கப்பட்டு ஊரடங்கு தளர்த்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இத்தகைய சூழலில் பொது முடக்கத்தை நீட்டிக்கலாமா வேண்டாமா என்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். தலைமைச் செயலகத்தில் இந்த ஆலோசனை நேற்று நடைபெற்றது. பொது முடக்கத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் தளர்த்த முடியும் என ஏற்கெனவே நிபுணர்கள் குழு தெரிவித்திருந்தது.
இந்நிலையில் வரும் வெள்ளிக்கிழமை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தவுள்ளார். எனவே பொது முடக்கம் குறித்த அறிவிப்பு விரைவில் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...