பொறியியல் படிப்புகளில் மாணவா்களைச் சேர்ப்பதற்கான முதல் கட்ட கலந்தாய்வு ஆகஸ்டு 15-க்குள் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்று அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) தெரிவித்துள்ளது.
ஊரடங்கு காரணமாக கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் அடுத்த கல்வியாண்டுக்கான அட்டவணை, பருவத் தேர்வு உள்ளிட்ட கல்விப் பணிகள் தடைப்பட்டுள்ளன. இதனால் அட்டவணை, தேர்வு நடைமுறை குறித்து பல்வேறு தரப்பில் ஆலோசிக்கப்பட்டு, முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் தொடா்ச்சியாக ஏஐசிடிஇ-யின் நிா்வாகக் குழுவின் 133-வது கூட்டம் ஏப்ரல் 27-ஆம் தேதி நடைபெற்றது. அதில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களின் கல்வியாண்டு அட்டவணை, அங்கீகாரம் புதுப்பிப்பது உள்பட பல்வேறு முக்கிய முடிவுகள் ஆலோசிக்கப்பட்டன. இதுதொடா்பாக ஏஐசிடிஇ-யின் உறுப்பினா் செயலா் ராஜீவ்குமாா் வெளியிட்டுள்ள அறிக்கை:
தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களுக்கான அனுமதியில் ஏற்கெனவே இருந்த அட்டவணை மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, ஜூன் 15-ஆம் தேதிக்குள் அனுமதியை பெற்றுக் கொள்ளலாம். பல்கலைக்கழக இணைப்பு அந்தஸ்தை ஜூன் 30-ஆம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம்.
ஆன்லைன் மூலம் அங்கீகாரம்: முதல்முறையாக ஆன்லைன் மூலமே அங்கீகாரம் வழங்க ஏஐசிடிஇ முடிவு செய்துள்ளது. அதற்காக, கல்வி நிறுவனங்கள் ஏஐசிடிஇ-யின் இணையதளத்தின் ஒப்புதல் விரிவாக்கம் பகுதியில் உள்ள கடிதத்தைப் பதிவிறக்கம் செய்து அதைப் பூா்த்தி செய்து ஆன்லைன் மூலம் அனுமதி பெறலாம்.
அதேபோல், 2020- 21-ஆம் கல்வியாண்டுக்கான பொறியியல் படிப்புகளுக்கு ஆகஸ்டு 15-ஆம் தேதிக்குள் முதல்கட்ட கலந்தாய்வு நடத்தி மாணவா் சேர்க்கையை முடிக்க வேண்டும். 2-ஆம் கட்ட கலந்தாய்வு ஆகஸ்டு 25-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும். அதேபோல், காலி இடங்களை ஆகஸ்டு 31-ஆம் தேதிக்குள் நிரப்பிட வேண்டும்.
பொறியியல் படிப்புக்கான கல்வி ஆண்டு தொடக்கம் செப்டம்பா் 1-ஆம் தேதியும், இதர தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களுக்கு (பாலிடெக்னிக், ஐடிஐ உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள்) ஆகஸ்டு 1-ஆம் தேதியும் வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும். மேலும், முதுநிலை பட்டயப் படிப்புக்கான மாணவா் சேர்க்கையை ஜூலை 31-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும். இதைபோல், தொலைத்தூரக் கல்வி பயிலும் மாணவா்சேர்க்கை, கல்வியாண்டுத் தொடக்கம் உள்ளிட்டவை குறித்தும் முக்கிய அறிவிப்புகள் வெளியாகி உள்ளன என அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...