தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருக்கக்கூடிய இந்த சூழ்நிலையில், இன்னும் 2 வாரங்களில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு (Tamilnadu sslc exam) நடைபெற உள்ளது. மாணவ-மாணவிகளை தேர்வு எழுத அனுப்புவது அவர்களின் பெற்றோர்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். தமிழக அரசு இந்த அச்சத்தைப் போக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கொரோனா வைரஸ் பிரச்சினை காரணமாக, இந்த ஆண்டு 10ம் வகுப்பு பொதுத்தேர்வு என்பது, தமிழகத்தில் நடைபெறவில்லை அனேகமாக ஆகஸ்ட் மாத வாக்கில் தேர்தல் நடைபெறலாம் என்ற பேச்சு பெற்றோர்கள் மத்தியில் இருந்தது.
கொரோனா வைரஸ் பாதிப்பு மிகக் குறைவாக இருந்த காலகட்டத்தில், அவசரமாக லாக்டவுன் அறிவிக்கப்பட்டது. எனவே, 10ம் வகுப்பு தேர்வுகள் நடைபெறவில்லை. ஆனால் இப்போது பாதிப்பு என்பது உச்சத்தில் இருக்க கூடிய சூழ்நிலையில், ஜூன் 1ம் தேதி முதல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெறும் என்று கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
3 வாரங்கள் கூட இல்லை
சமூக இடைவெளியுடன் தேர்வு நடத்த ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. தேர்வுகளை நடத்த மட்டுமே இப்போது முன்னுரிமை. பள்ளிகள் மறுபடியும் எப்போது திறக்கும் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். தள்ளிவைக்கப்பட்ட பிளஸ் 1 வகுப்புக்கான தேர்வு, ஜூன் 2ம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது மிஞ்சிப் போனால் இன்னும் மூன்று வாரங்கள் கூட கிடையாது. அதற்குள் பொது தேர்வுக்கு, குழந்தைகள் தயாராக வேண்டும்.
உச்சத்தில் கொரோனா பரவல்
எப்படியான சூழ்நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பது முக்கியத்துவம் பெறுகிறது. தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மொத்த நோயாளிகள் எண்ணிக்கையில் சுமார் 60 சதவீதம் பேர் புதிதாக சேர்ந்துள்ளனர். அதாவது இத்தனை மாதங்களாக இல்லாத அளவுக்கு கடந்த ஒரு வாரத்தில்தான் பாதிப்பு என்பது மிக மிக மோசமான அளவில் உள்ளது. அதிலும், சென்னை நிலைமை பற்றி சொல்லி தெரிய வேண்டியதில்லை. சென்னையில் கொரோனா கிடையாது.. கொரோனாவில்தான், சென்னை இருக்கிறது என்று மக்கள் பேசிக் கொள்ளும் அளவுக்கு மோசமான நிலை.
கட்டுப்பாட்டு மண்டலம் நிலை?
இப்படி ஒரு சூழ்நிலையில் தேர்வு நடத்தப்பட்டால், தங்கள் மகனையோ, மகளையோ எவ்வாறு தேர்வு எழுதுவதற்கு நிம்மதியாக பெற்றோர்கள் அனுப்பி இருப்பார்கள். கண்டெய்ன்மென்ட் ஜோன் என்று சொல்லக்கூடிய கட்டுப்பாட்டு மண்டலங்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கிறது. அங்கே வீடுகளுக்கே சென்று காய்கறி சப்ளை செய்யப்படுகிறது. அப்பகுதியில் வசிக்கக்கூடிய மக்கள் வேறு பகுதிகளுக்கு செல்வதற்கு அனுமதி கிடையாது. அப்படிப்பட்ட மண்டலங்களில் உள்ள மாணவ மாணவிகள் தேர்வு எழுத மட்டும், எவ்வாறு வெளியே வருவார்கள். அவ்வாறு அந்த பகுதிகளில் இருந்து, வெளியே வரும்போது, பிற மாணவ மாணவிகளுக்கு நோய் தொற்றிக் கொள்ளுமே, என்ற கேள்விக்கு இன்னும் விடையில்லை.
அரசு பஸ்கள் இல்லையே
தமிழகத்தில் இன்னும் பொதுப் போக்குவரத்தை அனுமதிக்கப்பட வில்லை. எனவே ஏழை எளிய மாணவ மாணவ மாணவிகள் தேர்வு எழுத எவ்வாறு பள்ளிக்குச் செல்வார்கள்? ஒருவேளை பொது போக்குவரத்து அதற்குள்ளாக செயல்பட்டாலும்கூட அந்தக் கூட்டத்தில், இந்த சிறு பிஞ்சுகள் எப்படி பயணித்து பள்ளி செல்ல முடியும்?
அவசரம் தேவையில்லை
பத்தாம்வகுப்பு படிக்கக் கூடியவர்கள் குழந்தையும் இல்லை பெரியவர்களும் இல்லை. இரண்டும் கெட்டான் மனது என்று சொல்வார்களே, அப்படியான மன நிலை மற்றும் அறிவு தளத்தில் இருக்க கூடியவர்கள். அவர்களால் சமூக இடைவெளி போன்றவற்றை பராமரிக்க முடியுமா என்பது போன்ற பல்வேறு அச்சங்கள் மக்கள் மனதில் எழுந்து உள்ளன. இதை போக்குவதற்கு தமிழக பள்ளிக் கல்வித்துறை உரிய விளக்கம் அளிக்க வேண்டும். அச்சத்தை போக்க எடுக்கப்போகும் நடவடிக்கைகளின் பட்டியலை மக்களின் முன்பு வைக்க வேண்டும். அப்போதுதான் பதட்டமின்றி இப்போதே தேர்வுக்கு குழந்தைகள் படிக்க தயாராவார்கள்.
தேர்வு ஒத்திவைப்பு
பொதுமக்களின் இந்த அச்சத்தை மதித்து குறைந்தபட்சம் ஜூலை மாதத்துக்கு பிறகாவது தேர்வை நடத்தும் வகையில் முடிவை ஒத்திப் போட வேண்டும் என்பதுதான் இப்போது மக்கள் மனதில் உள்ள எதிர்பார்ப்பு. கொரோனா வைரஸ் பாதிப்பு குறைவாக இருக்கக் கூடிய அண்டை மாநிலங்களான, கேரளா ,கர்நாடகா போன்றவற்றில் கூட தேர்வு நடத்துவதற்கான அறிவிப்பு வெளியாகவில்லை, என்பதையும் இந்த நேரத்தில் அரசு யோசிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
கொரானா அதிகமாவ்து ஒரு பக்கம். அரசுப் பள்ளி மாணவர்க்ளில்75% மாணவர்கள் நிச்சயமாக புத்தகத்தை எடுத்துக்கூட பார்த்து இருக்க மாட்டார்கள்,அவர்களின் குடும்பச்சூழலே அதற்கு காரணம். நிவாரணம் பெறுவது, நியாயவிலைக் கடைக்குப் போவ்து வீட்டில் உள்ளவர்களுடன் தொலைக்காட்சி பார்ப்பது போன்ற காரணங்களால் படித்து இருக்கமாட்டார்கள். எல்லாவற்றையும் மறந்து இருப்பார்கள். புத்தகங்கள் எங்கு இருக்கிறது என்பதே சிலருக்குத் தெரியாது, மேலும் வறுமையில் வாடுபவர்கள் பசி இருக்கும் பொழுது எப்படி படிப்பில் நாட்டம் போகும். இதையெல்லாம் யாரும் சிந்திப்பதாக தெரியவில்லை தேர்வு நடத்தினோம் என்ற கடமைக்காக செயல்படுவதுபோல் தெரிகிறது.
ReplyDelete