கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஒத்திவைக்கப்பட்ட 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு ஜூன் 15-ம் தேதி தொடங்கும் என பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து வெளிமாவட்டங்களில் தங்கியுள்ள 10-ம் வகுப்பு ஆசிரியர்கள், மாணவர்கள் தேர்வு எழுதும் இடங்களுக்கு திரும்பும் வகையில் ‘இ-பாஸ்’ பெற்று கொள்ளலாம்.
மேலும் தனியார் பள்ளி விடுதிகளில் தங்கி படித்து வரும் மாணவர்களை 3 நாட்களுக்கு முன்பே அழைத்து வர ஏற்பாடு செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதற்காக இணையம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, ‘இ-பாஸ்’ வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் இணையத்தில் விண்ணப்பித்த பல ஆசிரியர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு வருகின்றன. இதனால் அவர்கள் ஊர்களுக்கு திரும்ப முடியாமல் வெளிமாவட்டங்களில் தவித்து வருகின்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக சிவகங்கை மாவட்டச் செயலாளர் கோவிந்தராஜூ கூறியதாவது: கன்னியாகுமரியைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் சிவகங்கைக்கு வருவதற்காக விண்ணப்பித்தார். எந்த காரணமின்றி அவரது விண்ணப்பத்தை நிராகரித்துள்ளனர்.
இதேபோல் பலரது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. மேலும் மாணவர்களும் இணையத்தில் விண்ணப்பிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். சில மாணவர்களது விண்ணப்பங்களையும் நிராகரித்துள்ளனர்.
இதனால் அவர்களுக்கு ஒருவித பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஆசிரியர், மாணவர்கள் ‘இ-பாஸ்’ பெறுவதில் விலக்கு அளிக்க வேண்டும், என்று கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...