தனியார் பள்ளி ஆசிரியர்கள் பலருக்கும், அவர்கள் பணிசெய்யும் கல்வி நிறுவனங்கள் மார்ச் மாதச் சம்பளத்தை இதுவரை வழங்கவில்லை. இதனால் அவர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
கரோனா வைரஸ் காரணமாக மே 3-ம் தேதி வரை இரண்டாம் கட்ட ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்குத் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் பணி செய்ததற்கான சம்பளத்தை பல தனியார் பள்ளிகளும், ஆசிரியர்களுக்கு இன்னும் வழங்கவில்லை என ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.
ஏற்கெனவே மிகக்குறைவான சம்பளத்தில் வேலை செய்யும் இவர்களுக்கு இது பெரும் சிரமத்தைக் கொடுத்திருக்கிறது. மார்ச் மாதச் சம்பளத்தையே இதுவரை வழங்காத நிலையில், ஏப்ரல் மாதச் சம்பளத்தையும் அரசு உறுதி செய்துதர வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர் ஆசிரியர்கள்.
இதுகுறித்து தமிழ்நாடு தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் சங்க மாநிலப் பொதுச்செயலாளர் கனகராஜ் கூறுகையில், “தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் சுயநிதிப் பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் பள்ளிகளின் சுயநிதிப் பிரிவுகளிலும் எவ்விதப் பணிப் பாதுகாப்புமின்றி பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மார்ச் மாத ஊதியம் இதுவரை வழங்கப்படவில்லை. இது வருத்தத்துக்கு உரியது.
ஊரடங்கால் கடுமையான சமூக, பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள அந்த ஆசிரியர்களுக்கு மார்ச் மாத ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும். இந்த விஷயத்தில் தமிழக அரசு நேரடியாகத் தலையிட்டு, ஊதியம் வழங்காத பள்ளி நிர்வாகங்களை உடனடியாக ஊதியம் வழங்க நிர்பந்திக்க வேண்டும்” என்றார்.
மார்ச்.,ஏப்ரல்.,மே., எங்களுக்கு கஷ்டம் தான்....கிடைக்குமா ஊதியம்...மே மாதம் எந்த வருஷமும் கிடைக்காது...
ReplyDelete