Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்தியே ஆக வேண்டுமா? அது அவசியமா?






புயல், வெள்ளம், நிலநடுக்கம், என்ற பேரிடர்கள் சிறிது காலத்தில் முடிந்துவிடும். உயிரிழப்பு தவிர மற்றவற்றைச் சரிசெய்ய அனைவரும் பாடுபடுவோம். நோய்த்தொற்று அப்படியான பேரிடர் இல்லை. கண்ணுக்குத் தெரியாத கிருமி உலகையே வீட்டிற்குள் பயத்தோடு அடக்கி வைத்திருக்கிறது. அதிலிருந்து முழுமையான மீட்சி எப்போது என்றே தெரியாத சூழலில் இருக்கிறோம்.

அன்றாடம் உழைத்துப் பிழைத்துக் கொண்டிருந்த பெரும்பான்மை மக்கள் உணவுக்காகத் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.
எளிய மக்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி நிற்கும் இத்தகைய சூழலில் பத்தாம் வகுப்புத் தேர்வை எப்போது நடத்துவது?

இத்தகைய சூழலில் நிலைமை முற்றிலும் சீரானதும் தேர்வு என்று சொன்னாலும் பரவாயில்லை. அடுத்த மாதம் தேர்வு, அடுத்த வாரம் தேதி சொல்லுவோம் என்ற அறிவிப்புகள் எத்தகைய பதற்றத்தைக் குழந்தைகள் மனதில் ஏற்படுத்தும்? அவர்களால் எப்படிப் படிக்க இயலும்?

வசதியான வீட்டுப் பிள்ளைகள் தனியான வாகனத்தில் தேர்வு மையம் வந்துவிடலாம். பொதுப் போக்குவரத்தையே நம்பியிருக்கும் எளிய குழந்தைகளின் பாதுகாப்பை எவ்வாறு உறுதி செய்வது? அரசு உதவிகளை வழங்கினாலும் மூன்று வேளை உணவில்லாத நிலையில் இருக்கும் பெரும்பாலான குழந்தைகளால் எப்படித் தேர்வுக்கு நிம்மதியாகப் படிக்க இயலும்?


தொலைக்காட்சியிலும், தொழில்நுட்பத்தின் உதவியாலும் படிக்க இயலாத சூழலில் உள்ள குழந்தைகளுக்கு என்ன வழி? ஒருவர் கூட விடுபட்டு விடாமல் வழங்குவதுதானே கல்வி. பாதுகாப்பு நிச்சயமற்ற இந்தப் பேரிடர் காலத்தில் பத்தாம் வகுப்புத் தேர்வை அவசரமாக நடத்துவதால் நோய்த்தொற்று பரவும் சூழல் ஏற்படலாம்.

பள்ளிச் சூழலில் சில வாரங்களாவது படித்த பின்பே தேர்வு வைக்கவேண்டும் என்பது பெரும்பாலான அரசுப் பள்ளிகளின் கோரிக்கை. அப்படி ஒரு மாதம் சென்றாலும் அடுத்த கல்வியாண்டு எப்போது தொடங்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியாத சூழலில் அதிலும் குறைந்தபட்சமாக ஒரு மாதத்தைப் பத்தாம் வகுப்பிற்காக ஒதுக்கிவிட்டால் புதிய பத்தாம் வகுப்பு மற்றும் தேர்வு மையப் பள்ளிகளில் மற்ற வகுப்புக் குழந்தைகள் பாதிக்கப்படுவார்களே!

இத்தனை நடைமுறைச் சிக்கல்களையும் தாண்டிப் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்தியே ஆக வேண்டிய அவசியம் என்ன?

அரசும் தேர்வு அவசியம்தான் என்று சொல்கிறது. இதற்கு முன் இத்தகைய நிலை ஏற்பட்டிருக்கிறதா? சிறிய உதாரணத்தைப் பார்க்கலாம்.

2008-ம் ஆண்டு. வேலூரில் பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் மையத்தில் இரவில் தீ விபத்து. 12,000-க்கும் மேற்பட்ட ஆங்கிலம் இரண்டாம் தாள் விடைத்தாட்கள் நாசமாயின. செய்தி வெளியான பின் ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர் என அனைவரிடமும் பதற்றம். கல்வித்துறை நிதானமாக என்ன செய்யலாம் என்று யோசித்தது.


தீ மற்றும் அதை அணைத்த தண்ணீரால் பள்ளி மாணவர்களின் 480 விடைத்தாட்களும் தனித்தேர்வர்களின் 86 விடைத்தாட்களுமே முற்றிலுமாக எரிந்து போயின. ஓரம் எரிந்தும், பாதி எரியாமலும், தண்ணீரில் நனைந்தாலும் திருத்துமளவு மற்ற அனைத்து விடைத்தாட்களையும் காப்பாற்றிவிட்டோம் என்று அறிவிக்கப்பட்டது.

ஒரு தேர்வு தானே அவர்களுக்கு மட்டும் மறு தேர்வு வைத்துவிடலாம் என்ற பேச்சு எழுந்தது. குழந்தைகள் மனதால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களை மீண்டும் தேர்வு எழுதச் சொல்லுவதை விட இந்தக் சூழலை எளிதில் சரி செய்யலாம். என்று கல்வித்துறை முடிவு செய்தது. ஆங்கிலம் முதல் தாள் மதிப்பெண், அல்லது மற்ற பாடங்களில் எடுத்த சராசரி மதிப்பெண் இவற்றுள் எது அதிகமோ அதை வழங்கிவிடலாம். அது தேர்ச்சி மதிப்பெண்ணாக இல்லாவிட்டால் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்ணை வழங்கிவிடலாம் என்ற கல்வித்துறையின் முடிவால் அனைவரும் மகிழ்ந்தனர்.

2013-ம் ஆண்டில் சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் இருந்து அனுப்பப்பட்ட விடைத்தாட்கள் காணாமல் போயின. அப்போதும் முந்தைய நிகழ்வை முன்னுதாரணமாகக் கொண்டும் மாணவரின் மனநலனைக் கருத்தில் கொண்டும் கல்வித்துறை அதேபோன்ற தீர்வைச் செய்தது. இந்த நிகழ்வுகளைச் சிறிய முன் மாதிரியாகக் கொண்டு இன்றைய சூழலின் உண்மையான தீவிரத்தையும் வருங்காலத் தலைமுறையின் நலனையும் கருத்தில் வைத்து யோசிப்போம்.


இன்றைய சூழலில் வேறு எங்காவது தேர்வு இல்லாமல் தீர்வுகளைப் பற்றிப் பேசுகிறார்களா?

மத்திய அரசின் கல்வித்திட்டத்தில் 12-ம் வகுப்புத் தேர்வுகள் நடத்தப்படாமல் இருக்கின்றன. உயர்கல்விக்கு அடிப்படையான அத்தேர்வுகளை இந்தியாவுக்கு வெளியே உள்ள மத்திய பாடத்திட்டப் பள்ளிகளுக்கு நடத்தப்போவது இல்லை என்று மத்தியக்கல்வி வாரியம் அறிவித்திருக்கிறது.

அங்கு பயிலும் மாணவர்கள் இந்தியாவில் மருத்துவம், IIT JEE நுழைவுத்தேர்வுகளை எழுதுவதும் கல்லூரிச் சேர்க்கையும் பாதிக்காத வகையில் இதுவரை நடந்த தேர்வுகளின் அடிப்படையில் சான்றிதழ் வழங்கப்படும் என்றும் மத்தியக் கல்வித்திட்ட வாரியம் அறிவித்துள்ளது.

வாழ்வில் மிக முக்கியத் தேர்வான 12-ம் வகுப்புத் தேர்வுக்கே நமது நாடு தீர்வு கண்டிருக்கிறது. உள்நாட்டில் சில பாடங்களுக்கு மட்டுமே தேர்வு என்றும் சொல்லியிருக்கிறார்கள். இதையும் உதாரணமாகக் கொண்டு தமிழகத்தில் பத்தாம் வகுப்பிற்குத் தேர்வு இல்லை என்று எளிதில் அறிவித்துவிட முடியும். தேர்வு இல்லையென்று அறிவித்து அனைவருக்கும் தேர்ச்சி என்று சொன்னால் பல்வேறு சிக்கல்கள் வரும் என்று பலரும் சொல்கின்றனர்.

முதலாவதாக, அதிகம் பேர் தேர்ச்சி அடைவார்கள். அதனால் சிக்கல்கள் வரும் என்று சிலர் சொல்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் பத்தாம் வகுப்புத் தேர்ச்சி சதவீதம் உயர்ந்துகொண்டே வருகிறது. அதன்படி இந்த ஆண்டுத் தேர்வு நடந்திருந்தால் தேர்ச்சி சதவீதம் 96 – 97% ஆக இருந்திருக்கும்.

அனைவருக்கும் தேர்ச்சி என்று சொன்னால் பள்ளி மாணவர்களில் ஏறத்தாழ மூன்று சதவீதம் பேரும் தனித்தேர்வர்களில் அதிலும் மிகக் குறைந்த அளவிலும் தேர்ச்சி பெறுவர். இது எளிய மக்களின் வயிற்றில் பால் வார்க்கும் முடிவாகவும் அமையும்.

குறைந்தபட்ச தேர்ச்சி அடைந்தவர்கள் அவர்களால் படிக்க முடிந்த பாடப்பிரிவுகளிலும் தொழிற்கல்வியிலும் சேர ஆர்வம் காட்டுவார்கள். இதனால் பல்வேறு தொழிற்பயிற்சி நிறுவனங்களில் காலியாக உள்ள இடங்கள் நிரம்பும்.

இரண்டாவதாக, பத்தாம் வகுப்புச் சான்றிதழுக்குப் பல்வேறு பயன்பாடுகள் இருக்கின்றன. அவற்றை எவ்வாறு சரிசெய்வது? தேர்வு அவசியம் என்று சொல்வதற்கு இது ஒன்றே முக்கியமான காரணமாக இருக்கிறது.


பத்தாம் வகுப்புச் சான்றிதழின் பயன்பாடுகள் யாவை?
மேனிலை முதலாண்டுச் சேர்க்கை.
மேனிலை முதலாண்டில் பாடப்பிரிவை ஒதுக்குதல்.
பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. போன்றவற்றில் தொழிற்பிரிவுகளில் சேர்க்கை.
பல்வேறு இடங்களில் பயன்படும் ஆவணம்.
அடிப்படைக் கல்வித் தகுதியாகச் சில பயன்பாடுகள். இத்தகைய பயன்பாடுகளைத் தேர்வு இல்லாமல் எவ்வாறு சரி செய்வது?

அரையாண்டு, திருப்புதல் தேர்வுகளின் மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவரின் சராசரி சதவீதத்தையும் அதன் வளர்ச்சியையும் எளிதில் அறிய முடியும். அந்த மதிப்பெண்கள் EMIS தளத்தில் ஏற்றப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில், A,B,C என்ற மூன்று கிரேடுகளை வழங்க முடியும். குறைந்தபட்சத் தேர்ச்சி என்ற C கிரேடையே தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனித் தேர்வர்களுக்கும் வழங்கலாம்.

கரோனா பேரிடர் காலச் சிறப்புச் சான்றிதழில் கிரேடு, பெயர், வயது போன்றவை வழக்கமான சான்றிதழைப் போலவே இடம்பெறும். தேர்வு இல்லாவிட்டால் ஏற்படும் அனைத்துச் சிக்கல்களுக்கும் இந்தச் சான்றிதழ் தீர்வாக இருக்கும். மேனிலை வகுப்புகள், தொழிற்பிரிவுகளில் சேர்ந்து தனது எதிர்காலத்தை வடிவமைக்க அடுத்த தலைமுறைக்குப் பேருதவியாகவும் இருக்கும். அரசுப்பணியாளர் தேர்வு, மற்றும் ஆவணமாகப் பயன்படும் அனைத்து இடங்களிலும் இச்சான்றிதழ் எப்போதும் போல் பயன்படும்.


கரோனா கிருமித்தொற்று மனிதர்கள் இதுவரை கொண்டாடிய அனைத்தின் மீதும் கேள்விகளை எழுப்பியுள்ளது. நோயற்ற வாழ்வு, தற்சார்பு வாழ்வு, அடிப்படைத் தேவைகள் குறித்து அனைத்து மட்டங்களிலும் உலகமே யோசிக்கத் தொடங்கியுள்ள காலம் இது.

சிந்தனையில், செயலில், பழையன கழிந்து புதியன புகவேண்டிய இந்தச் சூழலில் இப்போது மட்டும் அல்ல, இனிமேலும் கல்வி, மதிப்பீடு ஆகியவற்றில் மாற்றங்கள் குறித்த கலந்துரையாடல்களை நாம் தொடங்க வேண்டிய நேரம் இது




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive