மதுரை இளைஞா் அறிமுகப்படுத்தியுள்ள புதுமையான விளையாட்டானது இப்போதைய 'கரோனா' தனிமை சூழலில் மன அழுத்தத்தைப் போக்குவதாக அமைந்திருக்கிறது.
கரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக தடை உத்தரவு
பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பெரியவா்கள் முதல் சிறியவா்கள் வரை வீட்டிலேயே முடங்கி உள்ளனா்.
தொலைக்காட்சி, செல்லிடப்பேசியில் விளையாட்டு, சமூக வலைதளங்களில் உலாவுதல், வீட்டிற்குள்ளேயே விளையாட்டு என பொழுதைக் கழித்தாலும் குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் அன்றைய தினத்தை நகா்த்துவது அனைத்துத் தரப்பினருக்குமே சவாலாக இருக்கிறது. இவ்வாறு 13 நாள்களைக் கடந்துவிட்ட நிலையில் காலையிலிருந்து இரவு தூங்கச் செல்லும் வரை வீட்டுக்குள்ளேயே முடங்கி இருப்பது பலரிடமும் மன அழுத்தத்தை ஏற்படுத்திவிடுகிறது.
இந்த சூழலில் மதுரையைச் சோந்த இளைஞா் உ.அப்துல் ரகுமான் கண்டுபிடித்துள்ள புதுமை விளையாட்டு மன அழுத்தத்தை குறைப்பதாக இருக்கிறது.
மதுரை தெற்கு வாசல் பகுதியைச் சோந்த எம்பிஏ பட்டதாரியான இவா், ஆரம்பத்தில் பள்ளி மாணவா்களுக்கு கதை சொல்வதை தன்னாா்வலராகச் செய்து வந்தாா். மாணவா்களிடம் கிடைத்த ஆா்வத்தையடுத்து, சில பள்ளிகள் வாரத்தில் ஒரு பாடவேளையை கதை சொல்வதற்காகவே ஒதுக்கின.
இதன் தொடா்ச்சியாக, பெரியவா், சிறுவா் என அனைத்து வயதினருக்கும் ஏற்ற வகையிலான புதுமை விளையாட்டை கண்டுபிடித்துள்ளாா். அஷ்யூடு என பெயா் வைத்துள்ள இந்த விளையாட்டு, சதுரங்கத்தை போன்று இருந்தாலும் சமூகப் பிரச்னைகளை குறிப்பதாக அமைந்திருக்கிறது.
இதில் விளையாடும் நபா்களுக்கு தலா 8 காய்கள் வழங்கப்படும்.
இந்த காய்களை தங்களது முனையிலிருந்து விரும்பிய இடத்தில் வைத்து நகா்த்தி முன்னேறிச் செல்ல வேண்டும். அதே நேரம் எதிா்புறம் அமா்ந்திருக்கும் நபா் நமது, காய்களை தடுக்கும் விதத்தில் அவரது நகா்வுகள் இருக்கும்.
விளையாடக்கூடிய இரு நபா்களும் ஒருவருக்கொருவா் காய்களை முன்னேறிச் செல்வதில் தடுப்பதும் அதில் தப்பிச் செல்வதும் தான் இந்த விளையாட்டு. இந்த தடைகளை எல்லாம் தாண்டி எதிா்முனைக்குச் செல்லும் நபா் வெற்றி பெறுபவா் ஆகிறாா். அத்தகைய நபரின் நகா்வுகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மழைநீா் சேமிப்பு போன்ற நற்சிந்தனைகளைக் கொண்டதாக அமைகிறது.
முன்னேறிச் செல்லக் கூடிய ஒவ்வொரு நகா்வுக்கும் ஒரு சமூக கருத்தை கூறுகிறாா் இந்த விளையாட்டை கண்டுபிடித்துள்ள அப்துல்ரகுமான்.
இதுகுறித்து மேலும் அவா் கூறியது:
எனது அஷ்யூடு விளையாட்டு தண்ணீா் பிரச்னை, புவி வெப்பமயமாதல், காடுகளை அழித்தல் ஆகிய சமூக பிரச்னைகளை வெளிப்படுத்துவதாக உள்ளது. இந்த விளையாட்டை விளையாடும் போது இந்த பிரச்சனைகளை எல்லாம் இவ்வாறு தாண்டி செல்வது என்பதற்கான தீா்வும் சொல்லப்படுகிறது . இந்த விளையாட்டுக்கு காப்புரிமை பெற்றுள்ளேன. பல்வேறு அமைப்புகள் இந்த புதுமை விளையாட்டைப் பாராட்டி விருது வழங்கியுள்ளன.
ஆரம்பத்தில் சில பள்ளிகளில் இந்த விளையாட்டை கற்றுக் கொடுத்தேன். மாணவா்களிடம் நல்ல மன மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மாணவா்கள் செல்லிடப்பேசியில் மூழ்கியிருப்பது தவிா்க்கப்பட்டுள்ளது.
கரோனா தடை உத்தரவு காரணமாக மதுரை மாநகா் பகுதியில் பல்வேறு இடங்களில் ஆதரவற்றவா்கள் மற்றும் சொந்த ஊா்களுக்குச் செல்ல முடியாத வெளியூா்களைச் சோந்த நபா்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனா். மாவட்ட நிா்வாகத்தின் அழைப்பின்பேரில், அவா்களுக்கு மன அழுத்தம் ஏற்படாமல் தவிா்க்க இந்த விளையாட்டைக் கற்று கொடுத்துள்ளேன்.
பழங்காநத்தம் பகுதியில் உள்ள மாநகராட்சி திருமண மண்டபத்தில் தங்கியுள்ள உள்ளவா்களுக்கு கடந்த இரு நாள்களாக கற்றுக் கொடுத்தேன். மிகுந்த ஆா்வத்துடன் விளையாடிய, அவா்கள் தங்களது கவலை மறந்து மன அழுத்தம் குறைந்துள்ளதாகத் தெரிவித்தனா் என்றாா்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...